"உம்மில் களிகூர்ந்து மகிழுவோம்." வருடத்தின் வாசல்களை நாம் சால்ட்டரியின் (sackbut) துக்ககரமான நாதங்களுக்குத் திறக்காமல், மகிழ்ச்சியின் சுரமண்டலத்தின் இனிமையான நாதங்களுக்கும், ஆனந்தத்தின் ஓசையுள்ள கைத்தாளங்களுக்கும் திறப்போம். "வாருங்கள், கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சிப்பின் கன்மலையைச் சங்கீர்த்தனம்பண்ணக்கடவோம்" (). அழைக்கப்பட்டவர்களும், உண்மையுள்ளவர்களும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களுமாகிய நாம், நம்முடைய துக்கங்களை விரட்டியடித்து, தேவனுடைய நாமத்திலே நமது நம்பிக்கையின் கொடிகளை ஏற்றுவோம். மற்றவர்கள் தங்கள் பாடுகளுக்காகப் புலம்பட்டும், மாராவின் கசப்பான தண்ணீரில் போடுவதற்காக மதுரமாக்கும் மரத்தைக் கொண்டிருக்கும் நாமோ, கர்த்தரை மகிழ்ச்சியோடு மகிமைப்படுத்துவோம். எங்கள் மெய்யான தேற்றரவாளனாகிய நித்திய ஆவியானவரே, நீர் வாசம்பண்ணும் ஆலயங்களாகிய நாங்கள் இயேசுவின் நாமத்தை ஆராதிப்பதையும் ஸ்தோத்திரிப்பதையும் ஒருபோதும் நிறுத்தமாட்டோம். நாங்கள் தீர்மானித்திருக்கிறோம், இயேசுவே எங்கள் இருதயத்தின் மகிழ்ச்சிக்குரிய கிரீடத்தைப் பெறவேண்டும்; அவர் சமூகத்தில் துக்கித்து எங்கள் மணவாளனை நாங்கள் அவமதிக்கமாட்டோம். பரலோகத்தின் பாடகர்களாக நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம், புதிய எருசலேமின் மாளிகைகளில் நாம் பாடுவதற்கு முன்பாக, நமது நித்திய கீதத்தை இங்கேயே பழகிக்கொள்வோம். நாம் களிகூர்ந்து மகிழுவோம்: இது ஒரே அர்த்தமுள்ள இரண்டு வார்த்தைகள், இரட்டிப்பான மகிழ்ச்சி, ஆசீர்வாதத்தின் மேல் ஆசீர்வாதம். இப்பொழுதும் கர்த்தருக்குள் நாம் மகிழ்வதற்கு ஏதாவது எல்லை இருக்கவேண்டுமா? கிருபையைப் பெற்ற மனிதர்கள், இப்பொழுதும் தங்கள் கர்த்தரை மருதோன்றிப் பூங்கொத்தாகவும், நளதாமாவும், வசம்பும், இலவங்கப்பட்டையுமாக காண்கிறார்கள் அல்லவா? பரலோகத்திலும்கூட இதைவிடச் சிறந்த நறுமணம் அவர்களுக்கு என்ன இருக்க முடியும்? நாம் உம்மில் களிகூர்ந்து மகிழுவோம். அந்தக் கடைசி வார்த்தையே உணவில் உள்ள மாமிசம், கொட்டையின் பருப்பு, வசனத்தின் ஜீவன். இயேசுவுக்குள் எப்பேர்ப்பட்ட பரலோகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன! முடிவற்ற ஆனந்த நதிகள் அவற்றின் ஊற்றைக் கொண்டுள்ளன, ஆமாம், அவற்றின் பரிபூரணத்தின் ஒவ்வொரு துளியும் அவருக்குள் இருக்கிறது! ஓ இனிய கர்த்தராகிய இயேசுவே, நீர் உமது மக்களின் தற்போதைய பங்காக இருப்பதால், இந்த வருடத்தின் முதல் நாள் முதல் கடைசி நாள் வரை நாங்கள் உம்மில் களிகூர்ந்து மகிழும்படியாக, உமது விலையேறப்பெற்ற தன்மையை உணரும் உணர்வை எங்களுக்குத் தந்தருளும். ஜனவரி மாதம் கர்த்தருக்குள் உள்ள சந்தோஷத்துடனும், டிசம்பர் மாதம் இயேசுவுக்குள் உள்ள மகிழ்ச்சியுடனும் நிறைவடையட்டும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.