"தம்முடைய சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே" (). தேவனுடைய ஞானத்தின் மேலுள்ள நம்முடைய விசுவாசம், இரட்சிப்பின் கிரியையில் அவருக்குத் திட்டவட்டமான ஒரு நோக்கமும் திட்டமும் இருக்கிறது என்பதை ஊகிக்கவும் அவசியப்படுத்தவும் செய்கிறது. அவருடைய திட்டம் இல்லாமல் சிருஷ்டிப்பு எப்படி இருந்திருக்கும்? கடலிலுள்ள மீனோ, ஆகாயத்திலுள்ள பறவையோ தங்களின் உருவாக்கத்திற்காகத் தற்செயலான காரியங்களிடம் கைவிடப்பட்டதா? இல்லை, ஒவ்வொரு எலும்பிலும், மூட்டிலும், தசையிலும், நரம்பிலும், சுரப்பிலும், இரத்த நாளத்திலும் எல்லையற்ற ஞானத்தின் திட்டத்தின்படியே எல்லாவற்றையும் நடப்பிக்கும் தேவனுடைய பிரசன்னத்தை நீ காண்கிறாய். சிருஷ்டிப்பில் பிரசன்னமாயிருந்து, எல்லாவற்றையும் ஆளுகை செய்யும் தேவன் கிருபையில் இராமல் இருப்பாரா? தெய்வீக ஆலோசனை பழைய சிருஷ்டியை ஆளுகை செய்யும்போது, புதிய சிருஷ்டியை ஆளுகை செய்யச் சுயசித்தத்தின் மாறக்கூடிய சுபாவம் நியமிக்கப்படுமா? பராமரிப்பைப் பாருங்கள்! உங்களது பிதாவின் சித்தமில்லாமல் ஒரு குருவிகூடத் தரையில் விழாது என்பதை அறியாதவன் யார்? உங்களுடைய தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது (). தேவன் நம்முடைய துக்கங்களின் மலைகளைத் தராசிலும், நம்முடைய உபத்திரவங்களின் குன்றுகளைத் துலாக்கோலிலும் நிறுக்கிறார் (). அப்படியிருக்கப் பராமரிப்பில் இருக்கும் தேவன் கிருபையில் இராமல் இருப்பாரா? ஓடு ஞானத்தினால் நியமிக்கப்பட்டு, பருப்பு குருட்டுத் தற்செயலிடம் கைவிடப்படுமா? இல்லை; அவர் ஆதிமுதற்கொண்டே அந்தியத்தை அறிந்திருக்கிறார் (). தமது பிரியமான குமாரனின் இரத்தத்தினாலே அழகான நிறங்களில் தான் போட்ட மூலைக்கல்லை மாத்திரம் அவர் ஏற்ற இடத்தில் காண்பதில்லை, மாறாக சுபாவத்தின் குவாரியிலிருந்து எடுக்கப்பட்டு, தன் கிருபையினாலே மெருகூட்டப்பட்ட, தெரிந்துகொள்ளப்பட்ட ஒவ்வொரு கல்லையும் அவைகளுக்குரிய நியமிக்கப்பட்ட இடத்தில் அவர் காண்கிறார்; மூலைக்கல்லிருந்து உச்சிவரை, அஸ்திபாரத்திலிருந்து சிகரம் வரை முழுவதையும் அவர் காண்கிறார். ஆயத்தம் பண்ணப்பட்ட இடத்தில் வைக்கப்படப்போகும் ஒவ்வொரு கல்லையும் பற்றிய தெளிவான அறிவு அவருடைய மனதில் உண்டு, அந்த மாளிகை எப்பேர்ப்பட்ட பிரம்மாண்டமானதாய் இருக்கும் என்பதையும், "அதற்கு கிருபை, கிருபை உண்டாவதாக" என்று ஆர்ப்பரிப்போடு உச்சிக்கல் கொண்டுவரப்படும் நேரத்தையும் அவர் அறிவார் (). இறுதியில், தெரிந்துகொள்ளப்பட்ட ஒவ்வொரு இரக்கத்தின் பாத்திரத்திலும், யெகோவா தமக்குச் சித்தமானபடியே செய்தார் என்பதும்; கிருபையின் கிரியையின் ஒவ்வொரு பகுதியிலும் அவர் தமது நோக்கத்தை நிறைவேற்றி, தமது சொந்த நாமத்தை மகிமைப்படுத்தினார் என்பதும் தெளிவாய்க் காணப்படும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.