"இவ்விதமாய் அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர்பொறுக்கினாள்" (). கதிர்பொறுக்கியாகிய ரூத்திடமிருந்து நான் கற்றுக்கொள்வேனாக. அவள் தானியக் கதிர்களைச் சேகரிக்கப் புறப்பட்டுச் சென்றது போல, ஆவிக்குரிய ஆகாரத்தைச் சேகரிக்க ஜெபம், தியானம், நியமங்கள், மற்றும் வார்த்தையைக் கேட்டல் ஆகிய வயல்வெளிகளுக்குள் நானும் புறப்பட்டுச் செல்ல வேண்டும். கதிர்பொறுக்குபவள் தன் பங்கைக் கதிர் கதிராகச் சேகரிக்கிறாள்; அவளுடைய ஆதாயங்கள் சிறுகச் சிறுக உண்டாகின்றன: அப்படியிருக்கத் தனித்த சத்தியங்களைத் தேடிப் பிடிப்பதில் அதிக நிறைவு இல்லாவிட்டாலும் நானும் திருப்தியாய் இருக்க வேண்டும். ஒவ்வொரு கதிரும் ஒரு மூட்டையைக் கட்டத் துணைசெய்கிறது, நற்செய்தியின் ஒவ்வொரு பாடமும் இரட்சிப்பிற்கேதுவான ஞானத்தைப் பெற நமக்குத் துணைசெய்கிறது. கதிர்பொறுக்குபவள் தன் கண்களைத் திறந்து வைத்திருக்கிறாள்: அவள் ஒரு கனவைப் போலத் தாள்களுக்கு இடையே இடறி விழுந்தால், சாயங்கால வேளையில் சந்தோஷமாய் வீட்டிற்குச் சுமந்து செல்ல அவளிடம் எந்தச் சுமையும் இருக்காது. ஆவிக்குரிய கிரியைகள் எனக்குப் பிரயோஜனமற்றவைகளாய் மாறாதபடி நான் அவைகளில் விழிப்புள்ளவனாய் இருக்க வேண்டும்; நான் ஏற்கனவே அநேகவற்றை இழந்துவிட்டேன் என்று பயப்படுகிறேன்—ஓ, என் வாய்ப்புகளை நான் தகுதியாய் மதித்து, இன்னும் அதிக ஜாக்கிரதையோடு கதிர்பொறுக்குவேனாக. கதிர்பொறுக்குபவள் தான் கண்டெடுக்கும் எல்லாவற்றிற்கும் குனிகிறாள், நானும் அப்படியே செய்ய வேண்டும். மேட்டிமையான ஆவிகள் விமர்சித்து எதிர்த்து நிற்கின்றன, ஆனால் தாழ்மையான மனங்களோ கதிர்பொறுக்கிப் பிரயோஜனத்தைப் பெற்றுக்கொள்ளுகின்றன. நற்செய்தியைப் பிரயோஜனமாய் கேட்பதற்குத் தாழ்மையான இருதயம் மரா பெரிய துணையாய் இருக்கிறது. சாந்த குணத்தோடு அன்றி உட்பதிக்கப்பட்ட ஆத்தும இரட்சிப்பின் வசனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது (). விறைப்பான முதுகு மோசமான கதிர்பொறுக்குபவனை உண்டாக்குகிறது; கீழே குனி, பெருமை என்னும் எஜமானனே, நீ ஒரு கொடிய திருடன், ஒரு கணமும் சகித்துக் கொள்ளப்படக் கூடாதவன். கதிர்பொறுக்குபவள் தான் சேகரித்ததைப் பற்றிக்கொள்ளுகிறாள்: மற்றொரு கதிரைக் கண்டெடுப்பதற்காக ஒரு கதிரைக் கீழே போட்டால், அவளுடைய நாள் வேலையின் பலன் அற்பமானதாகவே இருக்கும்; அவளாaள் பெறுவதைப் போலவே தக்கவைத்துக் கொள்வதிலும் ஜாக்கிரதையாய் இருக்கிறாள், ஆகவேதான் இறுதியில் அவளுடைய ஆதாயங்கள் மகா பெரியதாய் இருக்கின்றன. நான் கேட்கும் எல்லாவற்றையும் எவ்வளவு அடிக்கடி மறந்துவிடுகிறேன்; இரண்டாவது சத்தியம் முதலாவது சத்தியத்தை என் மண்டையிலிருந்து வெளியே தள்ளிவிடுகிறது, இவ்விதமாய் என் வாசிப்பும் கேட்டலும் ஒன்றுமில்லாத பெரும் பிரயாசத்தில் போய் முடிகிறது! சத்தியத்தைச் சேர்த்து வைப்பதின் முக்கியத்துவத்தை நான் தகுதியாய் உணருகிறேனா? பசியுள்ள வயிறு கதிர்பொறுக்குபவனை ஞானமுள்ளவனாக்குகிறது; அவளுடைய கரத்தில் தானியம் இல்லையென்றால், அவளுடைய பந்தியில் அப்பம் இருக்காது; அவள் தேவையின் உணர்வினாலே பிரயாசப்படுகிறாள், ஆகவேதான் அவளுடைய நடை சுறுசுறுப்பானதாகவும் அவளுடைய பிடி உறுதியானதாகவும் இருக்கிறது; எனக்கு இன்னும் மாபெரும் தேவை உண்டு, ஆண்டவரே, அதை நான் உணர எனக்குத் துணைசெய்யும், அது ஜாக்கிரதைக்கு மகா தாராளமான பலனைத் தரும் வயல்களில் கதிர்பொறுக்க என்னை முன்னோக்கித் தூண்டுவதாக.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.