"என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மௌனமாயிராதேயும்; நீர் எனக்கு மௌனமாயிருந்தால், நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்" (). கூப்பிடுதல் என்பது துக்கத்தின் சுபாவமான வெளிப்பாடாய் இருக்கிறது, மற்ற எல்லா விண்ணப்ப முறைகளும் நமக்குத் தவறும்போது அது ஒரு தகுந்த சத்தமாய் இருக்கிறது; ஆனால் கூப்பிடுதல் கர்த்தரை நோக்கி மாத்திரமே செலுத்தப்பட வேண்டும், ஏனெனில் மனிதனிடம் கூப்பிடுவது நம்முடைய வேண்டுதல்களைக் காற்றில் வீணாக்குவதாகும். செவிகொடுக்கக் கூடிய கர்த்தருடைய ஆயத்தத்தையும், துணைசெய்யக் கூடிய அவருடைய வல்லமையையும் நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, நம்முடைய எல்லா விண்ணப்பங்களையும் உடனே நம்முடைய இரட்சிப்பின் தேவனுக்கு நேராகச் செலுத்துவதற்கு நல்ல காரணத்தைக் காண்போம். நியாயத்தீர்ப்பு நாளில் கன்மலைகளை நோக்கிக் கூப்பிடுவது வீணாய்ப் போகும், ஆனால் நம்முடைய கன்மலையோ நம்முடைய கூப்பிடுதல்களுக்குச் செவிகொடுக்கிறார்.
"நீர் எனக்கு மௌனமாயிராதேயும்." வெறும் சடங்குவாதிகள் தங்களின் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காமல் போனாலும் திருப்தியாய் இருக்கலாம், ஆனால் உண்மையான விண்ணப்பக்காரர்களால் அப்படி இருக்க முடியாது; ஜெபம் மனதை அமைதிப்படுத்துகிறது அல்லது சித்தத்தை அடக்குகிறது என்ற அதன் வெளிப்புற விளைவுகளோடு மாத்திரம் அவர்கள் திருப்தியடைவதில்லை—அவர்கள் இன்னும் முன்னோக்கிச் சென்று, பரலோகத்திலிருந்து உண்மையான பதில்களைப் பெற்றாக வேண்டும், இல்லையென்றால் அவர்களால் ஓய்ந்திருக்க முடியாது; அந்தப் பதில்களை அவர்கள் உடனே பெற வாஞ்சிக்கிறார்கள், தேவனுடைய சிறிய மௌனத்தைக் கூட அவர்கள் கண்டு நடுங்குகிறார்கள். தேவனுடைய சத்தம் பெரும்பாலும் வனாந்தரத்தையே அதிரப்பண்ணுமளவிற்குக் பயங்கரமானதாய் இருக்கிறது (); ஆனால் அவருடைய மௌனமும்கூட வாஞ்சையுள்ள விண்ணப்பக்காரனுக்கு அவ்வளவு பயங்கரமானதே ஆகும். தேவன் தன் செவியைப் பூட்டிக்கொண்டது போலத் தோன்றும் போது, நாம் நம்முடைய வாய்களைப் பூட்டிக்கொள்ளாமல், இன்னும் அதிக உத்தமத்தோடே கூப்பிட வேண்டும்; ஏனெனில் நம்முடைய சத்தம் வாஞ்சையினாலும் துக்கத்தினாலும் உன்னதமாய் எழும்பும்போது, அவர் நமக்குச் செவிகொடுக்க அதிக காலம் தாமதிக்க மாட்டார். கர்த்தர் நம்முடைய ஜெபங்களுக்கு என்றென்றைக்குமாய் மௌனமாய் இருந்துவிட்டால் நம்முடைய நிலை எவ்வளவு பயங்கரமானதாய் இருக்கும்? "நீர் எனக்கு மௌனமாயிருந்தால், நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன்." ஜெபத்திற்குப் பதில் தரும் தேவனை நாம் இழந்துபோனால், நாம் கல்லறையிலுள்ள மரித்தவர்களைக் காட்டிலும் மகா பரிதாபகரமான நிலைக்குள்ளாவோம், நரகத்தில் அழிந்துபோனவர்களின் அதே நிலைக்குச் சீக்கிரத்தில் தாழ்ந்துபோவோம். நாம் ஜெபத்திற்குப் பதில்களைப் பெற்றாக வேண்டும்; நம்முடையது அவசரமான மாபெரும் தேவையாய் இருக்கிறது; நிச்சயமாகக் கர்த்தர் நம்முடைய கலங்கின மனதிற்குச் சமாதானத்தைப் பேசுவார், ஏனெனில் தமது சொந்தத் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் அழிந்துபோக அனுமதிக்க அவருடைய இருதயம் ஒருபோதும் சம்மதிக்காது.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.