"ஆட்டுக்குட்டியானவரே அதற்கு வெளிச்சம்" (வெளிப்படுத்துதல் 21:23). பரலோகத்தின் வெளிச்சமாகிய ஆட்டுக்குட்டியானவரை அமைதியாய்த் தியானிப்பாயாக. வேதாகமத்தில் வெளிச்சம் என்பது சந்தோஷத்தின் அடையாளமாய் இருக்கிறது. பரலோகத்திலுள்ள பரிசுத்தவான்களின் சந்தோஷம் இதில் அடங்கியிருக்கிறது: இயேசு நம்மைத் தெரிந்துகொண்டார், நேசித்தார், வாங்கினார், சுத்திகரித்தார், ஆடை உடுத்தினார், காத்தார், மகிமைப்படுத்தினார்: நாம் முற்றிலும் கர்த்தராகிய இயேசுவின் மூலமாகவே இங்கே இருக்கிறோம். இந்த எண்ணங்கள் ஒவ்வொன்றும் அவர்களுக்கு எஸ்கோலின் திராட்சைக்குலையைப் போல இருக்கும். வெளிச்சமே அழகிற்கும் காரணமாய் இருக்கிறது. வெளிச்சம் போய்விட்டால் எந்த ஒரு அழகும் மீதியிருப்பதில்லை. வெளிச்சமில்லாமல் இந்திரநீலக் கல்லிலிருந்து எந்தப் பிரகாசமும் ஒளிர்வதில்லை, முத்திலிருந்து எந்த அமைதியான கதிரும் புறப்படுவதில்லை; இவ்விதமாய் பரலோகப் பரிசுத்தவான்களின் சகல அழகும் இயேசுவிடமிருந்தே வருகிறது. கோள்கள் போல, அவர்கள் நீதியின் சூரியனின் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கிறார்கள்; மையக் கோளத்திலிருந்து புறப்படும் கதிர்களைப் போல அவர்கள் வாழ்கிறார்கள். அவர் விலகிக் கொண்டால், அவர்கள் மடிய வேண்டும்; அவருடைய மகிமை மறைக்கப்பட்டால், அவர்களுடைய மகிமையும் ஒழிந்துபோக வேண்டும். வெளிச்சம் என்பது அறிவின் அடையாளமாகவும் இருக்கிறது. பரலோகத்தில் நம்முடைய அறிவு பூரணமானதாய் இருக்கும், ஆனால் கர்த்தராகிய இயேசு தாமே அதனுடைய ஊற்றாய் இருப்பார். அதற்கு முன் ஒருபோதும் புரிந்து கொள்ளப்படாத அந்தகாரமான பராமரிப்புகள் அப்போது தெளிவாய்க் காணப்படும், இப்போது நம்மைக் குழப்பும் யாவும் ஆட்டுக்குட்டியானவரின் வெளிச்சத்தில் நமக்கு வெளிப்படையாய் மாறும். ஓ! எப்பேர்ப்பட்ட வெளிப்பாடுகள் அங்கே இருக்கும், அன்பின் தேவனுக்கு எப்பேர்ப்பட்ட மகிமை உண்டாகும்! வெளிச்சம் என்றால் வெளிப்படுத்துதல் என்றும் பொருள்படும். வெளிச்சம் வெளிப்படுத்துகிறது. இவ்வுலகில் நாம் இனி எவ்விதமாயிருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை (). தேவனுடைய ஜனங்கள் மறைக்கப்பட்ட ஜனங்களாய் இருக்கிறார்கள், ஆனால் கிறிஸ்து தம்முடைய ஜனங்களைப் பரலோகத்தில் ஏற்றுக்கொள்ளும்போது, தன் சொந்த அன்பின் கோலினால் அவர்களைத் தொட்டு, வெளிப்படும் தமது மகிமையின் சாயலுக்கு நேராக அவர்களை மாற்றுவார். அவர்கள் ஏழைகளாகவும் நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள், ஆனால் எப்பேர்ப்பட்ட மறுரூபம்! அவர்கள் பாவத்தினால் கறைபடிந்திருந்தார்கள், ஆனால் அவருடைய ஒரே ஒரு விரலின் தொடுதல், அவர்கள் சூரியனைப் போலப் பிரகாசமாகவும் பளிங்கைப் போலத் தூய்மையாகவும் மாறுகிறார்கள். ஓ! எப்பேர்ப்பட்ட வெளிப்பாடு! இவையாவும் உயர்த்தப்பட்ட ஆட்டுக்குட்டியானவரிடமிருந்தே புறப்படுகின்றன. அங்கே எப்பேர்ப்பட்ட ஒளிரும் பிரகாசம் இருந்தாலும், இயேசுவே அதன் மையமாகவும் ஆவியாகவும் இருப்பார். ஓ! அங்கே பிரசன்னமாயிருந்து, அவருடைய சொந்த வெளிச்சத்தில், ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தருமான அவரைத் தரிசிப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.