"அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தால் அவரோடேகூட அரசளுவோம்" (). நாம் கிறிஸ்துவுக்குள் இராவிட்டால், நாம் கிறிஸ்துவுக்காகவும் கிறிஸ்துவோடும் பாடுகளைச் சகிக்கிறோம் என்று நாம் எண்ணக் கூடாது. பிரியமான சிநேகிதனே, நீ இயேசுவை மாத்திரமே நம்புகிறாயா? அப்படி இல்லையென்றால், பூமியில் நீ எதைக் குறித்துப் புலம்பினாலும், நீ "கிறிஸ்துவோடு பாடுகளைச் சகிக்கவில்லை," பரலோகத்தில் அவரோடு கூட அரசளும் நம்பிக்கையும் உனக்கில்லை. அல்லது, ஒரு கிறிஸ்தவனின் எல்லாப் பாடுகளும் கிறிஸ்துவோடு படும் பாடுகள் என்றும் நாம் தீர்மானித்துவிடக் கூடாது, ஏனெனில் அவன் பாடுபடும்படி தேவனால் அழைக்கப்படுவது அவசியமாய் இருக்கிறது. நாம் துணிகரமானவர்களாயும் விவேகமில்லாதவர்களாயும் இருந்து, தேவனுடைய பராமரிப்போ அல்லது கிருபையோ நம்மைத் தகுதியாக்காத நிலைகளுக்குள் நாம் ஓடினால், நாம் இயேசுவோடு ஐக்கியம் கொள்வதைக் காட்டிலும் பாவம் செய்கிறோமா என்று நம்மை நாமே சோதித்துப் பார்க்க வேண்டும். நாம் விவேகத்தின் இடத்தை உணர்ச்சிவசப்படுதலுக்குக் கொடுத்து, வேத அதிகாரத்தின் இடத்தில் சுயசித்தத்தை ஆளுகை செய்ய அனுமதித்தால், நாம் கர்த்தருடைய யுத்தங்களைப் பிசாசின் ஆயுதங்களைக் கொண்டு நடத்துவோம், அதினாலே நம்முடைய சொந்த விரல்களை நாம் வெட்டிக்கொண்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும், பாவத்தின் விளைவாக நம்மேல் வரும் உபத்திரவங்களில், நாம் கிறிஸ்துவோடு பாடுகளைச் சகிக்கிறோம் என்று நாம் கனவு காணக் கூடாது. மிரியாம் மோசேக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு பேசினபோது குஷ்டரோகம் அவளைத் தீட்டுப்படுத்தியது, அவள் தேவனுக்காகப் பாடுபடவில்லை (எண்ணாகமம் 12). அதுமட்டுமல்ல, தேவன் அங்கீகரிக்கும் பாடுகள் தேவனுடைய மகிமையையே தன் நோக்கமாய்க் கொண்டிருக்க வேண்டும். என் நாமம் பிரசித்தியாக வேண்டும் அல்லது கைதட்டல்களைப் பெற வேண்டும் என்பதற்காக நான் பாடுபட்டால், பரிசேயனுக்குரிய பலனையே நானும் பெற்றுக் கொள்வேன் (). நம்முடைய எல்லாப் பொறுமைக்கும் இயேசுவின் மேல் உள்ள அன்பும், அவருடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் மேல் உள்ள அன்பும் எப்போதுமே முதன்மையான ஏவுதலாய் இருப்பது அவசியமாய் இருக்கிறது. நாம் கிறிஸ்துவின் ஆவியைச் சாந்த குணத்திலும், கனிவிலும், மன்னிப்பிலும் வெளிப்படுத்த வேண்டும். நாம் மெய்யாகவே இயேசுவோடு பாடுகளைச் சகிக்கிறோமா என்று ஆராய்ந்து பார்ப்போம். நாம் இவ்விதமாய்ப் பாடுகளைச் சகித்தால், அவரோடு கூட அரசளுவதோடு ஒப்பிடும்போது நம்முடைய "அதிசீக்கிரத்தில் நீங்கும் இலகுவான உபத்திரவம்" எம்மாத்திரம்? (). ஓ, கிறிஸ்துவோடு கூடச் சூளையில் இருப்பதும், அவரோடு கூட நிந்தனைக் கம்பத்தில் நிற்பதும் எப்பேர்ப்பட்ட பாக்கியம், தற்போதைய காலத்தின் அந்தப் பேரின்பமே ஒரு மாபெரும் கனமாய் இருக்கிறது; ஆனால் அந்தப் பலன் எப்பேர்ப்பட்ட நித்தியமானதாய், நாம் எதிர்பார்ப்பதற்கு தகுதியுடையதைக் காட்டிலும் எல்லையற்ற அதிகமாய் இருக்கும்போது, நாம் சிலாக்கியமான சிலுவையை உன்னதமான உற்சாகத்தோடு ஏற்றுக்கொண்டு, நம்முடைய பாதையில் சந்தோஷமாய்ப் புறப்பட்டுச் செல்ல மாட்டோமா?
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.