"தம்மைத்தாமே தாழ்த்தினார்" (). இயேசு இருதயத் தாழ்மையைக் கற்பிக்கும் மகா பெரிய போதகராக இருக்கிறார். நாம் நாடோறும் அவரிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டும். இதோ, எஜமானர் ஒரு துண்டை எடுத்துத் தன் சீஷர்களின் பாதங்களைக் கழுவுகிறார்! (). கிறிஸ்துவின் சீஷனே, உன்னை நீயே தாழ்த்தமாட்டாயா? ஊழியக்காரர்களுக்கு ஊழியக்காரனாக அவரைப் பார், நீ பெருமைப்படவே முடியாது! "அவர் தம்மைத்தாமே தாழ்த்தினார்" என்ற இந்த வாக்கியம் அவருடைய வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம் அல்லவா? அவர் நிர்வாணமாய் சிலுவையில் அறையப்படும் வரை, பூமியில் எப்போதும் தன் கனத்திற்குரிய அங்கிகளை ஒன்றன் பின் ஒன்றாய் உரிந்துபோட்டுக் கொண்டே இருந்தார் அல்லவா? அங்கே அவர் தன் அந்தரங்க சுயம் முழுவதையும் ஊற்றி, தன் ஜீவ இரத்தத்தை வடித்து, தங்களின் கடனில்லாத ஒரு கல்லறையில் அவர்களை வைக்கும் வரை நமக்காக யாவற்றையும் ஒப்புக்கொடுக்கவில்லையா? நம்முடைய விலையேறப்பெற்ற மீட்பர் எவ்வளவு தாழ்த்தப்பட்டார்! அப்படியிருக்க நாம் எப்படிப் பெருமை பாராட்ட முடியும்? சிலுவையின் பாதப்படியில் நின்று, உன்னைச் சுத்திகரித்த அந்த இரத்தாம்பரத் துளிகளை எண்ணிப் பார்; முள்முடியைப் பார்; இன்னும் இரத்தம் வழியும் அவருடைய வாரினால் அடிக்கப்பட்ட தோள்களை உற்று நோக்கு; கரங்களும் பாதங்களும் கரடுமுரடான இரும்பிற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டதையும், அவருடைய முழு சுயமும் பரியாசத்திற்கும் நிந்தனைக்கும் ஆளானதையும் பார்; உட்புறத் துக்கத்தின் கசப்பும், வேதனைகளும், தவிப்புகளும் அவருடைய வெளிப்புற சரீரத்தில் வெளிப்படுவதைக் காண்; "என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" () என்ற உருக்கமான அலறலைக் கேள். அந்தச் சிலுவைக்கு முன்பாக நீ தரையில் குப்புற விழுந்து கிடக்கவில்லை என்றால், நீ அதை ஒருபோதும் கண்டதில்லை என்று அர்த்தம்: இயேசுவின் பிரசன்னத்தில் நீ தாழ்த்தப்படாவிட்டால், நீ அவரை அறியவில்லை என்று அர்த்தம். நீ முற்றிலும் அழிந்துபோனபடியால், தேவனுடைய ஒரேபேறான குமாரனின் பலியைத் தவிர வேறு எதுவும் உன்னை இரட்சிக்க முடியாமல் போனது. அதைச் சிந்தித்துப் பார், இயேசு உனக்காகக் குனிந்தபடியால், நீ அவருடைய பாதப்படியில் தாழ்மையோடு உன்னை வளைத்துக் கொள். நம்முடைய சொந்தக் குற்றத்தின் உணர்வைக் காட்டிலும், நம்மேல் கிறிஸ்து வைத்த ஆச்சரியமான அன்பின் உணர்வே நம்மைத் தாழ்த்துவதற்கான அதிக ஏதுவைக் கொண்டிருக்கிறது. கர்த்தர் தியானத்தின் மூலம் நம்மைக் கல்வாரிக்கு நடத்துவாராக, அப்போது நம்முடைய நிலை ஆடம்பரமான பெருமைக்காரனின் நிலையாய் இராமல், நமக்கு அதிகம் மன்னிக்கப்பட்டபடியால் நாம் அதிகம் நேசிக்கிற ஒருவனுடைய தாழ்மையான இடத்தைத் தெரிந்துகொள்வோம் (). சிலுவையின் கீழ் பெருமை வாழ முடியாது. நாம் அங்கே உட்கார்ந்து நம்முடைய பாடத்தைக் கற்றுக்கொண்டு, பின்பு எழுந்து அதை நடைமுறைப்படுத்துவோமாக.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.