JAN 04 EVENING

ஆதியாகமம் 42:8

யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை.

ஆதியாகமம் 42:8

யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

கர்த்தராகிய இயேசுவுடன் நமக்கிருக்கும் உறவு வளரவேண்டும் என்று இன்று காலை நம்முடைய விருப்பங்கள் வெளிப்பட்டன; இன்றிரவு அதோடு தொடர்புடைய மற்றொரு தலைப்பைக் சிந்திப்பது நன்றாக இருக்கும், அதாவது, நமது பரலோக யோசேப்பு நம்மை அறிந்திருக்கிறார் என்பதே அது. நாம் அவரைப் பற்றிச் சிறிதளவு அறிந்துகொள்வதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, இது மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட விதத்தில் பூரணமானதாக இருந்தது. "என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது" (). உலகில் நாம் பிறப்பதற்கு முன்பே அவருடைய இருதயத்தில் நமக்கு ஓர் இடம் இருந்தது. நாம் அவருக்குச் சத்துருக்களாக இருந்தபோது, நம்மை, நம்முடைய நிர்ப்பந்தத்தை, நம்முடைய பைத்தியத்தை, நம்முடைய பொல்லாப்பை அவர் அறிந்திருந்தார். நாம் நம்பிக்கையற்ற மனந்திரும்புதலோடு கசப்பாக அழுது, அவரை ஒரு நியாயாதிபதியாகவும் அதிகாரியாகவும் மட்டுமே பார்த்தபோது, அவர் நம்மை தமக்கு மிகவும் பிரியமான சகோதரர்களாகப் பார்த்தார், அவருடைய உள்ளம் நமக்காக உருகியது. அவர் தாம் தெரிந்துகொண்டவர்களை ஒருபோதும் தவறாகப் புரிந்துகொள்ளவில்லை, மாறாக எப்போதும் அவர்களைத் தமது முடிவற்ற அன்பின் பாத்திரங்களாகவே பார்த்தார். பன்றிகளுக்குத் தவிட்டைப் போடுகிற கெட்டகுமாரர்களுக்கும், பந்தியில் உட்கார்ந்திருக்கும் பிள்ளைகளுக்கும் "கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்" () என்பது சமமான உண்மையாகும்.

ஆனால், அந்தோ! எங்கள் ராஜரீகச் சகோதரனை நாங்கள் அறியவில்லை, இந்த அறியாமையிலிருந்து அநேகப் பாவங்கள் முளைத்தன. எங்கள் இருதயங்களை அவருக்குக் கொடுக்காமல் நிறுத்திவைத்தோம், எங்கள் அன்புக்குள் நுழைய அவரை நாங்கள் அனுமதிக்கவில்லை. நாங்கள் அவரைச் சந்தேகப்பட்டோம், அவருடைய வார்த்தைகளை நம்பவில்லை. அவருக்கு விரோதமாகக் கலகம் செய்தோம், அவருக்கு அன்பான மரியாதையைச் செலுத்தவில்லை. நீதியின் சூரியன் பிரகாசித்தார், ஆனால் எங்களால் அவரைக் காண முடியவில்லை. பரலோகம் பூமிக்கு இறங்கி வந்தது, ஆனால் பூமி அதை உணர்ந்துகொள்ளவில்லை. தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக, அந்த நாட்கள் எங்களை விட்டு ஒழிந்துபோயின; என்றாலும், அவர் நம்மை அறிந்திருப்பதோடு ஒப்பிடும்போது, நாம் இயேசுவை அறிந்திருப்பது மிகவும் குறைவே. நாம் அவரைப் பற்றிப் படிக்கத் தொடங்கியிருக்கிறோம், ஆனால் அவர் நம்மை முழுமையாக அறிந்திருக்கிறார். அறியாமை அவர் பக்கத்தில் இல்லை என்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு காரியமாகும், இல்லையென்றால் அது நமக்கு நம்பிக்கையற்ற நிலையாக இருந்திருக்கும். அவர் நம்மைப் பார்த்து, "நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை" () என்று சொல்லமாட்டார், ஆனால் அவர் வெளிப்படும் நாளில் நம்முடைய பெயர்களை அறிக்கையிடுவார், இதற்கிடையில் அவர் உலகத்திற்குத் தன்னை வெளிப்படுத்தாததுபோல நமக்குத் தன்னை வெளிப்படுத்தவார்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.