"கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசிலாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே" (). வெளிப்புற நடைமுறைப் பரிசுத்தம் கிருபையின் மகா விலையேறப்பெற்ற அடையாளமாய் இருக்கிறது. அநேக வேஷக்காரர்கள் விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்படுதல் என்ற உபதேசத்தைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி, நற்கிரியைகளை அசட்டையோடு நடத்துகிறார்கள் என்று பயப்பட வேண்டியிருக்கிறது; அப்படி இருந்தால், கடைசி மகா பெரிய நாளில் அவர்கள் நித்திய இகழ்ச்சியைப் பெறுவார்கள் (). நம்முடைய கைகள் சுத்தமாய் இல்லாவிட்டால், அவைகளை இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவுவோமாக, பின்பு தூய்மையான கைகளைத் தேவனுக்கு நேராக உயர்த்துவோமாக (). ஆனால் "சுத்தமுள்ள கைகள்" மாத்திரம் போதாது, அவைகள் "மாசிலாத இருதயத்தோடு" இணைக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையான மார்க்கம் இருதயத்தின் கிரியையாய் இருக்கிறது. பாத்திரத்தின் வெளிப்புறத்தை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் கழுவலாம், ஆனால் அந்தரங்கம் அசுத்தமாய் இருந்தால், தேவனுடைய பார்வையில் நாம் முற்றிலும் அசுத்தமானவர்களே, ஏனெனில் நம்முடைய கைகளைக் காட்டிலும் நம்முடைய இருதயமே மெய்யாக நாம் யாராய் இருக்கிறோம் என்பதைக் காண்பிக்கிறது; நம்முடைய ஜீவனின் உயிர் நம்முடைய அந்தரங்க சுபாவத்திலேயே இருக்கிறது, ஆகவேதான் உள்ளே தூய்மை இருக்க வேண்டிய மாபெரும் கட்டாயம் எழுகிறது. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள், மற்றவர்கள் யாவரும் குருட்டு வௌவால்களைப் போன்றவர்களே ().
பரலோகத்திற்காகப் பிறந்த மனிதன் "தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடான்." மனிதர்கள் யாவருக்கும் தங்களின் ஆத்துமாக்களை உயர்த்தும் தங்களின் சந்தோஷங்கள் உண்டு; லௌகீக மனிதன் தன் ஆத்துமாவை வெறும் வெற்று மாயைகளாகிய மாம்ச இச்சைகளில் உயர்த்துகிறான்; பரிசுத்தவானோ இன்னும் நிலையான காரியங்களை நேசிக்கிறான்; யெகோசபாத்தைப் போல, அவன் கர்த்தருடைய வழிகளில் தன் ஆத்துமாவை உயர்த்துகிறான் (). தவிட்டோடு திருப்தியடைகிறவன் பன்றிகளோடு கூட எண்ணப்படுவான் (). உலகம் உன்னைத் திருப்தியாக்குகிறதா? அப்படியானால் உன்னுடைய பலனையும் பங்கையும் இந்த வாழ்க்கையிலேயே நீ பெற்றுக்கொண்டாய்; அதை நன்றாய் அநுபவித்துக் கொள், ஏனெனில் நீ வேறு எந்தச் சந்தோஷத்தையும் அறிய மாட்டாய்.
"கபடாய் ஆணையிடாமலும்." பரிசுத்தவான்கள் இன்னும் உன்னதமான கனமுடைய மனிதர்களாய் இருக்கிறார்கள். கிறிஸ்தவ மனிதனுடைய வார்த்தையே அவனுடைய ஒரே ஆணை; அது மற்ற மனிதர்களின் இருபது ஆணைகளைக் காட்டிலும் மேலானது. பொய் பேசுவது எந்த மனிதனையும் பரலோகத்திற்கு வெளியே அடைத்துப்போடும், ஏனெனில் வேஷக்காரன் தன் அறிக்கைகள் அல்லது செய்கைகள் எதுவாயிருந்தாலும் தேவனுடைய வீட்டிற்குள் பிரவேசிக்க மாட்டான் (வெளிப்படுத்துதல் 22:15). வாசகரே, நமக்கு முன்பாக இருக்கும் இந்த வசனம் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதா, அல்லது கர்த்தருடைய பர்வதத்தில் ஏறும் நம்பிக்கை உனக்கு இருக்கிறதா?
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.