"நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயவும் மனுஷர்மேலுள்ள அன்பும்" (). மீட்பர் தமக்குரிய பிரியமான ஜனங்களோடு ஐக்கியம் கொள்வதைக் காண்பது எவ்வளவு இனிமையானது! தெய்வீக ஆவியினாலே, பலனுள்ள இந்த இன்ப நிலத்திற்குள் வழிநடத்தப்படுவதைக் காட்டிலும் மகிழ்ச்சியானது வேறு எதுவும் இருக்க முடியாது. மீட்பரின் அன்பின் வரலாற்றைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், அன்பின் ஆயிரம் மனோகரமான செயல்கள் நினைவிற்கு வரும், அவைகள் யாவும் இருதயத்தைக் கிறிஸ்துவோடு பிணைக்கவும், புதிதாக்கப்பட்ட ஆத்துமாவின் எண்ணங்களையும் உணர்வுகளையும் இயேசுவின் மனதோடு பின்னிப் பிணையவும் நோக்கமாய் கொண்டிருந்தன. இந்த ஆச்சரியமான அன்பைத் தியானித்து, சபையின் மகிமையான உறவின்முறையானவர் தன் பூர்வகாலத்து ஐசுவரியங்கள் யாவையும் அவளுக்குச் சுதந்தரமாய் அளிப்பதைக் காணும்போது, நம்முடைய ஆத்துமாக்கள் சந்தோஷத்தினால் சோர்ந்துபோகலாம். இத்தகைய அன்பின் பாரத்தைத் தாங்கக் கூடியவன் யார்? பரிசுத்த ஆவியானவர் சில நேரங்களில் அளிக்க மனதாயிருக்கும் அதன் பகுதியான உணர்வே ஆத்துமாவால் கொள்ள முடியாத அளவிற்குக் மேலானதாய் இருக்கிறது; அப்படியிருக்க அதன் பூரணமான தரிசனம் எவ்வளவு பரவசமாய் இருக்கும்! வரப்போகும் உலகம் நமக்கு அளிக்கவிருப்பது போல, மீட்பரின் ஈவுகள் யாவையும் பகுத்தறியும் புத்தியும், அவைகளை மதிப்பிடும் ஞானமும், அவைகளைத் தியானிக்கும் காலமும் ஆத்துமாவிற்கு இருக்கும்போது, நாம் இப்போது இருப்பதைக் காட்டிலும் அதிக நெருங்கிய விதத்தில் இயேசுவோடு ஐக்கியம் கொள்வோம். ஆனால் அத்தகைய ஐக்கியத்தின் இனிமையை யாரால் கற்பனை செய்ய முடியும்? அது மனிதனுடைய இருதயத்தில் தோன்றாததும், தேவன் தம்மை நேசிப்பவர்களுக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறதுமான காரியங்களில் ஒன்றாய் இருக்க வேண்டும் (). ஓ, நம்முடைய யோசேப்பின் களஞ்சியங்களின் கதவுகளை உடைத்துத் திறந்து, நமக்காக அவர் சேர்த்து வைத்திருக்கிற அந்த நிறைவைக் காண்போமாக! இது நம்மை அன்பினால் திக்குமுக்காடச் செய்யும். விசுவாசத்தினாலே நாம் கண்ணாடியில் நிழலாய்க் காண்பது போல அவருடைய எல்லையற்ற பொக்கிஷங்களின் பிரதிபலிப்பைக் காண்கிறோம், ஆனால் நாம் பரலோக காரியங்களைத் தட்டிலாய் நம் சொந்தக் கண்களால் காணும்போது, நம்முடைய ஆத்துமா மூழ்கிக் குளிக்கும் ஐக்கியத்தின் நதி எவ்வளவு ஆழமானதாய் இருக்கும்! அதுவரை நம்முடைய உரத்த சங்கீதங்கள் யாவும் நம்முடைய அன்பான உபகாரியாகிய இயேசு கிறிஸ்து கர்த்தருக்காகவே வைக்கப்படும், ஸ்திரீகளின் அன்பை விஞ்சின உன்னதமான அன்பு அவருடைய அன்பாகும் ().
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.