AUG 05 EVENING

எண்ணாகமம் 32:6

அப்பொழுது மோசே காத் புத்திரரையும் ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?

எண்ணாகமம் 32:6

அப்பொழுது மோசே காத் புத்திரரையும் ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ?
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில் நீங்கள் இங்கே உட்கார்ந்திருப்பீர்களோ?" (). உறவின்முறைக்குத் தன் கடமைகள் உண்டு. ரூபனியரும் காத்தியரும் தாங்கள் கைப்பற்றின தேசத்தை மாத்திரம் உரிமை பாராட்டிவிட்டு, மற்ற ஜனங்களைத் தங்களின் பங்கிற்காகத் தனியாய் யுத்தம் செய்ய விட்டுவிட்டிருந்தால் அது சகோதரத்துவமற்ற காரியமாய் இருந்திருக்கும். கடந்த நாட்களில் பரிசுத்தவான்களின் பிரயாசங்கள் மற்றும் பாடுகளின் மூலமாய் நாம் அநேக காரியங்களைப் பெற்றிருக்கிறோம், நம்முடைய மிகச் சிறந்த ஆற்றல்களை அர்ப்பணிப்பதின் மூலம் கிறிஸ்துவின் சபைக்கு நாம் ஏதாகிலும் பதிலுதவி செய்யாவிட்டால், அவளுடைய அணிகளில் சேர்க்கப்பட நாம் தகுதியற்றவர்கள். மற்றவர்கள் இக்காலத்துத் தவறுகளோடு பராக்கிரமமாய் யுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள், அல்லது வீழ்ச்சியின் இடிபாடுகளின் மத்தியிலிருந்து அழிந்துபோகிறவர்களைத் தோண்டி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள், நாம் சோம்பலாய் நம் கரங்களைக் கட்டிக்கொண்டிருந்தால், மேரோசின் சாபம் நம்மேல் விழாதபடி நாம் எச்சரிக்கப்பட வேண்டும் (). திராட்சத்தோட்டத்தின் எஜமானர், "நாள்முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன?" என்கிறார் (). சோம்பேறியின் சாக்குப்போக்கு என்ன? சிலரால் அது சந்தோஷமாகவும் ஏராளமாகவும் செய்யப்படுவதினாலேயே, இயேசுவின் தனிப்பட்ட ஊழியம் எல்லாரது கடமையாகவும் மாறுகிறது. அர்ப்பணிக்கப்பட்ட மிஷனரிகள் மற்றும் உருக்கமான போதகர்களின் பிரயாசங்கள் நாம் சோம்பலில் சும்மா உட்கார்ந்திருந்தால் நம்மை வெட்கப்படுத்துகின்றன. சோதனையைக் கண்டு பின்வாங்குவது சீயோனில் சுகமாய் இருப்பவர்களின் சோதனையாய் இருக்கிறது: அவர்கள் சிலுவையைத் தவிர்த்துவிட்டு கிரீடத்தைத் தரிக்க விரும்புகிறார்கள்; அவர்களுக்கு இன்று மாலையின் தியானத்திற்குரிய கேள்வி மகா ஏற்றதாய் இருக்கிறது. மகா விலையேறப்பெற்றவைகள் நெருப்பிலே சோதிக்கப்பட்டால், நாம் மாத்திரம் சூளையிலிருந்து தப்பிவிட முடியுமா? வைரம் சக்கரத்தின் மேல் சோதிக்கப்பட வேண்டும் என்றால், பாடுகள் இல்லாமல் நாம் பூரணமடைய முடியுமா? நம்முடைய படகு ஆழத்தில் இருக்கும்போது காற்றை வீசாதபடி நிறுத்துமாறு யாருக்குக் கட்டளையிடப்பட்டது? நம்முடைய ஆண்டவரைக் காட்டிலும் நாம் ஏன் விசேஷித்த விதத்தில் நடத்தப்பட வேண்டும்? முதற்பேறானவர் பிரம்பை உணர்ந்தார், இளைய சகோதரர்கள் ஏன் உணரக் கூடாது? சிலுவையின் போர்ச்சேவகனுக்குப் பஞ்சு மெத்தையையும் பட்டுப் படுக்கையையும் தெரிந்துகொள்வது கோழைத்தனமான பெருமையாய் இருக்கும். தெய்வீக சித்தத்திற்கு முதலில் கீழ்ப்படிந்து, கிருபையின் வல்லமையினாலே அதில் மகிழ்ச்சியடைய வளர்ந்து, இவ்விதமாய்ச் சிலுவையின் பாதப்படியில் லீலி புஷ்பங்களைச் சேகரிக்கக் கற்றுக்கொண்டு, சிம்சோனைப் போலச் சிங்கத்திற்குள்ளே தேனைக் கண்டுகொள்பவனே மகா ஞானமுள்ளவன் ().

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.