JUL 05 MORNING

ரோமர் 1:7

தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.

ரோமர் 1:7

தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்கள்" (). நாம் அப்போஸ்தலப் பரிசுத்தவான்களை, தேவனுடைய மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் ஏதோ ஒரு விசேஷித்த விதத்தில் "பரிசுத்தவான்கள்" என்பது போலக் கருத மகா எளிதாய் இடம் கொடுத்துவிடுகிறோம். தேவன் தமது கிருபையினாலே அழைத்து, தமது ஆவியினாலே பரிசுத்தமாக்கின யாவரும் "பரிசுத்தவான்களே" ஆவர்; ஆனால் நாம் அப்போஸ்தலர்களை நம்மைப் போன்ற பலவீனங்களுக்கும் சோதனைகளுக்கும் உட்படாத ஏதோ விசித்திரமான சிருஷ்டிகளைப் போல நோக்குகிறோம். அப்படிச் செய்வதின் மூலம் நாம் இந்தச் சத்தியத்தை மறந்துவிடுகிறோம், அதாவது ஒரு மனிதன் தேவனுக்கு எவ்வளவு மிக அருகில் வாழ்கிறானோ, அவ்வளவு தீவிரமாய் அவன் தன் சொந்தத் தீய இருதயத்தைக் குறித்துப் புலம்ப வேண்டியிருக்கும்; அவனுடைய எஜமானர் அவனுடைய ஊழியத்தில் அவனுக்கு எவ்வளவு அதிகமாய் கனம் தருகிறாரோ, அவ்வளவாக மாம்சத்தின் தீமைகள் அவனை நாடோறும் வருத்திச் சோதிக்கும். உண்மை என்னவென்றால், நாம் அப்போஸ்தலனாகிய பவுலைக் கண்டிருந்தால், அவர் தெரிந்துகொள்ளப்பட்ட மற்ற குடும்பத்தாரைப் போலவே வியக்கத்தக்க விதத்தில் ஒத்திருப்பதை நாம் கண்டிருப்போம்: நாம் அவரோடு பேசியிருந்தால், "அவருடைய அநுபவமும் நம்முடைய அநுபவமும் ஒன்றுபோலவே இருக்கக் காண்கிறோம். அவர் நம்மை விட அதிக உத்தமமுள்ளவர், அதிகப் பரிசுத்தமுள்ளவர், அதிக ஆழமாய் உபதேசிக்கப்பட்டவர், ஆனால் அவரும் நம்மைப் போன்ற அதே சோதனைகளையே சகித்தாக வேண்டும். ஆமாம், சில காரியங்களில் அவர் நம்மை விட அதிகக் கொடூரமாய் சோதிக்கப்படுகிறார்" என்று சொல்லியிருப்போம். அப்படியானால், பூர்வகாலப் பரிசுத்தவான்களுக்குப் பலவீனங்களோ அல்லது பாவங்களோ இல்லை என்று எண்ணாதிருங்கள்; நம்மைக் கிட்டத்தட்ட விக்கிரகாராதனைக்காரர்களாக மாற்றக் கூடிய அத்தகைய மாயாஜால மரியாதையோடு அவா்களை நோக்காதிருங்கள். அவர்களுடைய பரிசுத்தம் நம்மாலும் அடையக்கூடியதே. அவர்கள் தங்களின் உன்னதமான அழைப்பிற்கு உட்படும்படி செய்த அதே சத்தத்தினாலேயே நாமும் "பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்." பரிசுத்தத்தின் அந்த அந்தரங்க வட்டத்திற்குள் தன் பாதையைத் தீவிரப்படுத்துவது ஒரு கிறிஸ்தவனுடைய கடமையாய் இருக்கிறது; அந்தப் பரிசுத்தவான்கள் தங்களின் அநுபவங்களில் நம்மை விட மேலானவர்களாய் இருந்தார்கள் என்பது உண்மைதான், நாம் அவர்களைப் பின்தொடருவோமாக; அவர்களுடைய உருக்கத்தையும் பரிசுத்தத்தையும் நாமும் வாஞ்சிப்போமாக. அவர்களிடம் இருந்த அதே வெளிச்சம் நமக்கும் உண்டு, அதே கிருபை நமக்கும் சிலாக்கியமானதாய் இருக்கிறது, அப்படியிருக்க நாம் அவா்களுக்கு இணையாகும் வரை ஏன் திருப்தியடைந்து ஓய்ந்திருக்க வேண்டும்? அவர்கள் இயேசுவோடு வாழ்ந்தார்கள், அவர்கள் இயேசுவுக்காக வாழ்ந்தார்கள், எனவே அவர்கள் இயேசுவைப் போல வளர்ந்தார்கள். நாமும் அவர்களைப் போலவே அதே ஆவியினாலே, "இயேசுவை நோக்கி" வாழ்வோமாக, அப்போது நம்முடைய பரிசுத்தமும் சீக்கிரத்தில் வெளிப்படும்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.