JUL 05 EVENING

ஏசாயா 26:4

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.

ஏசாயா 26:4

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யெகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார் (everlasting strength - நித்திய பெலனாயிருக்கிறார்)" (). நாம் நம்புவதற்கு அத்தகைய ஒரு தேவனைக் கொண்டிருக்கிறபடியால், நம்முடைய முழு பாரத்தோடும் அவர்மேல் சாருவோமாக; சகல அவிசுவாசத்தையும் திட்டவட்டமாய் விரட்டிவிட்டு, நம்முடைய ஆறுதலை அவ்வளவாகக் கெடுக்கும் சந்தேகங்களையும் பயங்களையும் ஒழிக்கப் பிரயாசப்படுவோமாக; தேவனே நம் நம்பிக்கையின் அஸ்திபாரமாய் இருக்கும் இடத்தில் பயப்படுவதற்குக் எந்த ஒரு சாக்குப்போக்கும் இல்லை என்பதால் இதைச் செய்வோம். தன் பிள்ளை தன்னை நம்ப முடியாமல் போனால் ஓர் அன்பான பெற்றோர் மகா வேதனைப்படுவார்; நமக்கு ஒருபோதும் தவறிடாத, ஒருபோதும் தவறாத நம்முடைய பரமபிதாவிடம் நாம் இவ்வளவு குறைந்த விசுவாசம் வைக்கும்போது நம்முடைய நடத்தை எவ்வளவு தாராள குணமில்லாததாகவும், எவ்வளவு அன்பற்றதாகவும் இருக்கிறது. சந்தேகப்படுவது தேவனுடைய குடும்பத்திலிருந்து ஒழிந்துபோனால் எவ்வளவோ நலமாய் இருக்கும்; ஆனால், "அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? அவர் இனி இரங்குவதில்லையோ?" என்று சங்கீதக்காரன் கேட்ட காலத்தைப் போலவே இக்காலத்திலும் பழைய அவிசுவாசம் அவ்வளவு சுறுசுறுப்பாய் இருக்கிறது என்று பயப்பட வேண்டியிருக்கிறது (). தாவீது மாபெரும் பராக்கிரமசாலியான கோலியாத்தின் பெரிய பட்டயத்தை மகா நீண்ட காலமாய்ச் சோதித்துப் பார்த்திருக்கவில்லை, என்றாலும் அவர், "அதற்கு நிகரானது வேறு இல்லை" என்றார் (). தன் வாலிப வயதின் ஜெயத்தின் மணிநேரத்தில் அவர் அதை ஒருமுறை சோதித்துப் பார்த்திருந்தார், அது சரியான உலோகத்தினால் ஆனது என்று அது தன்னை நிரூபித்திருந்தது, ஆகவேதான் அவர் எப்போதும் அதற்குப் பின் அதை மெச்சிப் பேசினார்; அப்படியே நாமும் நம்முடைய தேவனைப் குறித்து மேன்மையாயப் பேச வேண்டும், மேலேயுள்ள வானத்திலும் கீழேயுள்ள பூமியிலும் அவருக்கு நிகரானவர் ஒருவருமில்லை; "என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு எவனை நிகராக்குவீர்கள் என்று பரிசுத்தர் சொல்லுகிறார்" (). நம்முடைய சத்துருக்கள் தாராளமாய்த் தீர்ப்பளித்தாலும் யாக்கோபின் கன்மலைக்கு நிகரான கன்மலை வேறு இல்லை (). சந்தேகங்கள் நம்முடைய இருதயத்தில் வாழ இடம் கொடுப்பதற்குப் பதிலாக, எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளைச் செய்தது போல, அந்த வெறுக்கத்தக்க கூட்டத்தையெல்லாம் பிடித்து அந்த நீரோடையருகே கொன்றுபோடுவோம்; அவைகளைக் கொல்ல ஒரு நீரோடையைத் தெரிந்துகொள்ள, நம் இரட்சகரின் காயமடைந்த விலாவிலிருந்து பாயும் அந்தப் பரிசுத்த இரத்த நதியையே தெரிந்துகொள்வோம் (). நாம் அநேக சோதனைகளில் இருந்திருக்கிறோம், ஆனால் நம்முடைய தேவனிடம் நமக்குத் தேவையான யாவற்றையும் கண்டுகொள்ள முடியாத எந்த ஓர் இடத்திலும் நாம் இதுவரை தள்ளப்பட்டதில்லை. அப்படியானால், கர்த்தரை என்றென்றைக்குமாய் நம்பும்படி நாம் ஊக்கமடைவோமாக, அவருடைய நித்திய பெலனே நமக்குரிய சகாயமும் ஆதரவுமாய் இருந்திருக்கிறது, எப்போதும் இருக்கும் என்று உறுதியாய் நம்புவோமாக.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.