"கர்த்தர் அவனை உள்ளே அடைத்தார்" (). நோவா தெய்வீக அன்பின் கரத்தினால் உலகத்தாரெல்லாரையும் விட்டுப் பிரிக்கப்பட்டு உள்ளே அடைக்கப்பட்டான். தெரிந்துகொள்ளுதலின் நோக்கத்தின் கதவு நமக்கும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிற உலகத்திற்கும் இடையே குறுக்கிடுகிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசு உலகத்தின் பங்குகளாய் இராதது போல, நாமும் உலகத்தின் பங்குகளாய் இல்லை. திரளான ஜனங்களின் பாவம், களிப்பு, மற்றும் தேடுதல்களுக்குள் நம்மால் பிரவேசிக்க முடியாது; அந்தகாரத்தின் பிள்ளைகளோடு கூட மாயாஜாலச் சந்தையின் வீதிகளில் நம்மால் விளையாட முடியாது, ஏனெனில் நம்முடைய பரமபிதா நம்மை உள்ளே அடைத்திருக்கிறார். நோவா தன் தேவனுடன் உள்ளே அடைக்கப்பட்டான். "நீ பேழைக்குள் பிரவேசி" () என்பது கர்த்தருடைய அழைப்பாய் இருந்தது, அதின் மூலம் அவர் தாமே தன் ஊழியக்காரனோடும் அவனுடைய குடும்பத்தோடும் பேழையிலே வாசம் பண்ண உத்தேசித்திருந்தார் என்பதைத் தெளிவாகக் காண்பித்தார். இவ்விதமாய் தெரிந்துகொண்டவர்கள் எல்லாரும் தேவனுக்குள்ளும், தேவன் அவர்களுக்குள்ளும் வாசம் பண்ணுகிறார்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாகிய திரித்துவத்தின் ஆளுமைகளாகிய தேவனைத் தன்னுள் கொண்டிருக்கிற அதே வட்டத்திற்குள் அடைக்கப்பட்டிருக்கிற ஜனங்கள் பாக்கியவான்கள். "என் ஜனங்களே, நீங்கள் போய் உங்கள் அறைகளுக்குள் பிரவேசித்து, உங்கள் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினங்கடந்துபோகுமட்டும் அற்பநேரம் ஒழித்துக்கொள்ளுங்கள்" () என்ற அந்த உன்னதமான கிருபையுள்ள அழைப்பிற்கு நாம் ஒருபோதும் பராக்காய் இராதிருப்போமாக. நோவா எந்தத் தீமையும் தன்னை அணுக முடியாதபடி உள்ளே அடைக்கப்பட்டான். வெள்ளங்கள் அவனைப் பரலோகத்திற்கு நேராகவே உயர்த்தின, காற்றுகள் அவனுடைய பாதையில் அவனைச் சுமந்து சென்றன. பேழைக்கு வெளியே யாவும் அழிவாய் இருந்தது, ஆனால் உள்ளேயோ யாவும் இளைப்பாறுதலும் சமாதானமுமாய் இருந்தது. கிறிஸ்துவில்லாமல் நாம் அழிகிறோம், ஆனால் கிறிஸ்து இயேசுவுக்குள் பூரண பாதுகாப்பு உண்டு. நோவா பேழையிலிருந்து வெளியே வர விரும்பக் கூட முடியாதபடி உள்ளே அடைக்கப்பட்டான், கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறவர்கள் என்றென்றைக்குமாய் அவருக்குள் இருக்கிறார்கள். நித்திய உண்மைத்தன்மை அவர்களை உள்ளே அடைத்திருப்பதாலும், நரகத்தின் பகை அவர்களை வெளியே இழுக்க முடியாததாலும் அவர்கள் இனி ஒருபோதும் வெளியே போவதில்லை. தாவீதின் வம்சத்தின் பிரபுவானவர் திறக்கிறார், ஒருவனும் பூட்டான்; பூட்டுகிறார், ஒருவனும் திறவான் (); கடைசி நாட்களில் அரமனையின் எஜமான் எழுந்து கதவைப்பூட்டிப் போடும்போது, வெறும் வேஷக்காரர்கள் வந்து, ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்க வேண்டும் என்று தட்டி அழுது கூப்பிடுவது வீணாய்ப் போகும், ஏனெனில் புத்தியுள்ள கன்னிகைகளை உள்ளே அடைக்கும் அதே கதவு புத்தியில்லாதவர்களை என்றென்றைக்குமாய் வெளியே அடைத்துப்போடும் (). ஆண்டவரே, உமது கிருபையினாலே என்னை உள்ளே அடைத்தருளும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.