"அன்பில்லாதவன் தேவனை அறியான்" (). ஒரு கிறிஸ்தவனின் தனித்துவமான அடையாளம் கிறிஸ்துவின் அன்பில் அவன் கொண்டிருக்கும் நம்பிக்கையும், அதற்குப் பிரதியுத்தரமாகத் தன் அன்பைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுப்பதுமே ஆகும். முதலாவதாக, "கிறிஸ்து என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்" () என்று அப்போஸ்தலனோடு கூட ஆத்துமா சொல்லத்தக்கதாக விசுவாசம் மனிதன் மேல் தன் முத்திரையைப் போடுகிறது. பின்பு அன்பு அதற்குரிய அடையாளத்தைக் கொடுத்து, இயேசுவுக்குச் செலுத்தும் நன்றியையும் அன்பையும் இருதயத்தின் மேல் பதிக்கிறது. "அவர் முந்தியே நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்" (). கிறிஸ்தவ மார்க்கத்தின் வீரயுகமாகிய அந்த உன்னதமான பூர்வநாட்களில், இயேசுவை விசுவாசித்த யாவரிடமும் இந்த இரட்டை அடையாளம் தெளிவாகக் காணப்பட்டது; அவர்கள் கிறிஸ்துவின் அன்பை அறிந்தவர்களாயும், தான் உத்தமத்தன்மையைச் சோதித்துப் பார்த்த ஒரு தடியின் மேல் ஒரு மனிதன் சாய்ந்திருப்பது போல அதன் மேல் சார்ந்திருந்தவர்களாயும் இருந்தார்கள். கர்த்தர் மேல் அவர்கள் கொண்ட அன்பு, தங்களின் ஆத்துமாவின் அந்தரங்க அறையில் தங்களுக்குள்ளே மறைத்து வைத்த ஒரு அமைதியான உணர்வாய் இருக்கவில்லை, வாரத்தின் முதல் நாளில் தங்களின் அந்தரங்கக் கூட்டங்களில் கூடிவந்து, சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து இயேசுவின் கனத்திற்காகக் கீதங்களைப் பாடும்போது மாத்திரம் அவர்கள் அதைப் பேசவில்லை, மாறாக அது அவர்களின் எல்லாச் செயல்களிலும் காணத்தக்க உன்னதமான மற்றும் எல்லாவற்றையும் பட்சிக்கும் வைராக்கியமாக இருந்தது, அவர்களின் சாதாரண பேச்சிலும் அது ஒலித்தது, அவர்களின் சாதாரணமான பார்வைகளிலும்கூட அது அவர்களின் கண்களிலிருந்து வெளிப்பட்டது. இயேசுவின் மேல் உள்ள அன்பு அவர்களின் சுயம் மற்றும் இருதயத்தின் மையத்தையே போஷிக்கும் ஒரு அக்கினியாய் இருந்தது; ஆகவே, அது தன் சொந்த விசையினால் வெளிப்புற மனிதனுக்குள்ளும் ஊடுருவி, அங்கே பிரகாசித்தது. ராஜாவாகிய இயேசுவின் மகிமைக்கான வைராக்கியமே உண்மையான கிறிஸ்தவர்கள் யாவருடைய முத்திரையாகவும் அடையாளமாகவும் இருந்தது. கிறிஸ்துவின் அன்பைச் சார்ந்திருந்தபடியால் அவர்கள் அநேக காரியங்களுக்குத் துணிந்தார்கள், கிறிஸ்துவின் மேல் கொண்ட அன்பினால் அவர்கள் அநேக காரியங்களைச் செய்தார்கள், இப்போதும் அது அப்படியே இருக்கிறது. தேவனுடைய பிள்ளைகள் தங்களின் அந்தரங்க வல்லமைகளில் அன்பினாலேயே ஆளப்படுகிறார்கள்—கிறிஸ்துவின் அன்பு அவர்களை நெருக்கி ஏவுகிறது; தெய்வீக அன்பு தங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்கள் மகிழ்கிறார்கள், தங்களுக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே அது தங்களின் இருதயங்களில் ஊற்றப்பட்டிருப்பதை உணருகிறார்கள், பின்பு நன்றியறிதலின் விசையினால் அவர்கள் இரட்சகரிடத்தில் தூய்மையான இருதயத்தோடே உருக்கமாய் அன்புகூருகிறார்கள். என் வாசகரே, நீ அவரை நேசிக்கிறாயா? நீ உறங்குவதற்கு முன் இந்த உன்னதமான கேள்விக்கு ஒரு நேர்மையான பதிலைக் கொடு!
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.