"காவலாளனே, இரவில் எவ்வளவு சென்றது?" (). வெளியில் எந்தச் சத்துருக்கள் திரிகிறார்கள்? தவறான போதனைகள் திரளான கூட்டமாய் இருக்கின்றன, ஒவ்வொரு மணிநேரமும் புதியவைகள் தோன்றுகின்றன: எந்தத் தப்பான உபதேசத்திற்கு எதிராக நான் விழிப்புடன் இருக்க வேண்டும்? அந்தகாரம் ஆளுகை செய்யும்போது பாவங்கள் தங்களின் மறைவிடங்களிலிருந்து ஊர்ந்து வருகின்றன; நான் காவல் கோபுரத்தில் ஏறி நின்று, ஜெபத்தோடு விழித்திருக்க வேண்டும். பரலோகக் காவலாளி நமக்கு விரோதமாய் வரப்போகும் சகல தாக்குதல்களையும் முன்கூட்டியே காண்கிறார், நமக்கு நியமிக்கப்பட்ட தீங்கு இன்னும் சாத்தானுடைய ஆசையாய் மாத்திரம் இருக்கும்போதே, கோதுமையைப் போல நம்மைக் சுளுகினால் புடைக்கும் போது நம்முடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி நமக்காக வேண்டிக்கொள்ளுகிறார் (). கிருபையுள்ள காவலாளனே, எங்கள் சத்துருக்களைக் குறித்து எங்களுக்கு எப்போதுமே எச்சரித்துக் கொண்டிரும், சீயோனின் நிமித்தம் மௌனமாய் இராதிரும்.
"காவலாளனே, இரவில் எவ்வளவு சென்றது?" சபைக்கு எப்பேர்ப்பட்ட சூழ்நிலை வரப்போகிறது? மேகங்கள் தாழ்கின்றனவா, அல்லது தலைக்கு மேலே யாவும் தெளிவாயும் அழகாயும் இருக்கிறதா? தேவனுடைய சபையைக் குறித்து நாம் உருக்கமான அன்போடு கவலைப்பட வேண்டும்; இப்போது ரோம மார்க்கத்தின் அக்கிரமங்களும் அவிசுவாசமும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போது, காலத்தின் அடையாளங்களைக் கவனித்து, போராட்டத்திற்கு ஆயத்தமாவோம்.
"காவலாளனே, இரவில் எவ்வளவு சென்றது?" எந்த நட்சத்திரங்கள் தெரிகின்றன? நம்முடைய தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்கள் எவைகள்? நீங்கள் எச்சரிப்பின் சத்தத்தை எழுப்புகிறீர்கள், ஆறுதலையும் நமக்குத் தாருங்கள். துருவ நட்சத்திரமாகிய கிறிஸ்து எப்போதுமே தன் இடத்தில் நிலைத்திருக்கிறார், சகல நட்சத்திரங்களும் தங்களின் ஆண்டவருடைய வலது கரத்தில் பத்திரமாய் இருக்கின்றன (வெளிப்படுத்துதல் 1:16).
ஆனால் காவலாளனே, காலை எப்போது வரும்? மணவாளன் தாமதிக்கிறார். நீதியின் சூரியனாக அவர் வெளிப்படுவதற்கான அடையாளங்கள் எதுவும் இல்லையா? பகலின் அச்சாரமாக விடிவெள்ளி நட்சத்திரம் உதிக்கவில்லையா? நாள் எப்போது விடியும், அந்தகாரங்கள் எப்போது ஓடிப்போகும்? ஓ இயேசுவே, உமக்காகக் காத்திருக்கும் உமது சபையிடம் நீர் தனிப்பட்ட முறையில் இன்று வராவிட்டாலும், பெருமூச்சு விடும் என் இருதயத்திற்குள் ஆவியினாலே வாரும், அதைச் சந்தோஷத்தினால் ஆனந்தமாய் பாடப்பண்ணும்.
"இப்போது பூமி முழுவதும் பிரகாசமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது புதிய காலையினாலே; ஆனால் என் இருதயமோ குளிராகவும், அந்தகாரமாகவும், துக்கமாகவும் இருக்கிறது: ஆத்துமாவின் சூரியனே, உமது விடியலை நான் தரிசிக்கட்டும்! வாரும், கர்த்தராகிய இயேசுவே, உமது வார்த்தையின்படியே சீக்கிரமாய் வாரும்."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.