AUG 06 EVENING

சங்கீதம் 72:19

அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.

சங்கீதம் 72:19

அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"பூமி முழுவதும் அவருடைய மகிமையினால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்" (). இது ஒரு மாபெரும் விண்ணப்பம். ஒரு பட்டணம் முழுவதற்காய்ப் பரிந்துபேசுவதற்கே விசுவாசத்தின் வீச்சு தேவைப்படுகிறது, ஒரு மனிதனுக்காக ஜெபிப்பதே நம்மைக் கலங்கப்பண்ணப் போதுமானதாய் இருக்கும் தருணங்களும் உண்டு. ஆனால் சங்கீதக்காரனின் மரிக்கும் வேளையின் பரிந்துபேசுதல் எவ்வளவு பரந்தது! எப்பேர்ப்பட்ட எல்லாவற்றையும் உள்ளடக்கியது! எப்பேர்ப்பட்ட உன்னதமானது! "பூமி முழுவதும் அவருடைய மகிமையினால் நிறைந்திருப்பதாக." அது மூடநம்பிக்கையின் பாதத்தினால் மிதிக்கப்பட்ட எந்த ஒரு சிறிய தேசத்தையும் விலக்கிவிடவில்லை; எவ்வளவு காட்டுமிராண்டிகளாய் இருந்தாலும் எந்த ஒரு ஜாதியையும் புறம்பே தள்ளவில்லை. நாகரிகமடைந்த மனிதர்களுக்கு எவ்வாறோ அப்படியே நரமாமிசம் தின்னும் மனிதர்களுக்கும், சகல காலநிலைகளுக்கும் ஜாதிகளுக்கும் இந்த ஜெபம் ஏறெடுக்கப்படுகிறது: அது பூமியின் முழு வட்டத்தையும் சூழ்கிறது, ஆதாமின் எந்த ஒரு குமாரனையும் விட்டுவிடவில்லை. நம்முடைய எஜமானருக்காக நாம் சுறுசுறுப்பாய் கிரியை செய்ய வேண்டும், இல்லையென்றால் இத்தகைய ஜெபத்தை நாம் உத்தமமாய் ஏறெடுக்க முடியாது. தேவனுடைய துணையோடு நம்முடைய எஜமானரின் ராஜ்யத்தை விரிவுபடுத்த நாம் பிரயாசப்பட்டாலொழிய, இந்த விண்ணப்பம் உண்மையான இருதயத்தோடு கேட்கப்பட்டதாய் இருக்காது. வாதாடவும் பிரயாசப்படவும் அலட்சியம் பண்ணுகிற சிலர் இல்லையா? வாசகரே, இது உன்னுடைய ஜெபமா? உன்னுடைய கண்களைக் கல்வாரிக்கு நேராகத் திருப்பு. ஜீவனின் அதிபதி சிலுவையில் அறையப்பட்டிருப்பதையும், முள்முடி அவருடைய நுதலிலிருப்பதையும், தலை, கரங்கள், பாதங்களிலிருந்து இரத்தம் வடிவதையும் பார். என்ன! தேவகுமாரனின் மரணமாகிய அதிசயங்களின் அதிசயத்தைக் கண்டு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உன்னதமான ஆராதனை உன்னுடைய மார்பிற்குள் எழும்பாமல் இருக்க முடியுமா? அவருடைய இரக்கம் உன்னுடைய மனச்சாட்சியில் தெளிக்கப்பட்டு, அவர் உன்னுடைய பாவங்களை அகற்றிவிட்டார் என்று நீ அறியும்போது, நீ முழங்கால்களிலிருந்து எழும்பி, "பூமி முழுவதும் அவருடைய மகிமையினால் நிறைந்திருப்பதாக; ஆமென், ஆமென்" என்று கூப்பிடாவிட்டால் நீ ஒரு மனிதனே அல்ல. சிலுவையில் அறையப்பட்டவருக்கு முன்பாக அன்பான வணக்கத்தோடு குனிய முடிந்து, உன்னுடைய ராஜா உலக முழுவதற்கும் அதிபதியாவதைக் காண நீ விரும்பாமல் இருப்பாயா? உன்னுடைய ராஜாவை நேசிப்பதாகப் பொய் சொல்லிவிட்டு, அவர் உலக முழுவதையும் ஆளுகிறவராய்க் காணப்பட விரும்பாவிட்டால் உனக்கு ஐயோ. உனக்கு அளிக்கப்பட்ட அதே இரக்கம் உலகம் முழுவதையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று விரும்புவதற்கு உன்னை நடத்தாத பட்சத்தில் உன்னுடைய பக்தி வீணானது. ஆண்டவரே, இது அறுவடையின் காலம், உமது அறிவாளை வீசி அறுவடை செய்யும்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.