JUL 06 EVENING

யோபு 13:23

என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.

யோபு 13:23

என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"என் அக்கிரமங்களும் என் பாவங்களும் எத்தனை?" (). தேவனுடைய ஜனங்களின் பாவம் எவ்வளவு பெரியது என்று நீங்கள் எப்போதாகிலும் மெய்யாகச் சீர்தூக்கிப் பார்த்திருக்கிறீர்களா? உங்களுடைய சொந்த வழிவிலகல்கள் எவ்வளவு கொடூரமானவை என்று சிந்தித்துப் பாருங்கள், அங்கும் இங்குமாய் ஏதோ ஒரு பாவம் மாத்திரம் ஒரு மலையைப் போல உன்னதமாய் எழும்பவில்லை, மாறாகப் பழைய கட்டுக்கதைகளில் மலைகளின் மேல் மலைகளைக் குவித்த பராக்கிரமசாலிகளைப் போல, உங்களுடைய அக்கிரமங்கள் ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். தேவனுடைய மகா பரிசுத்தமான பிள்ளைகளில் ஒருவனுடைய வாழ்க்கையிலும்கூட எப்பேர்ப்பட்ட பாவங்களின் திரட்சி இருக்கிறது! ஒருவனுடைய இந்தப் பாவத்தையே, மீட்டெடுக்கப்பட்டவர்களின் திரளான கூட்டமாகிய "ஒருவனும் எண்ணக்கூடாத திரளான ஜனக்கூட்டத்தினால்" பெருக்கிப் பார்க்க முயன்று பார், அப்போது இயேசு யாருக்காகத் தன் ஜீவ இரத்தத்தைச் சிந்தினாரோ, அந்த ஜனங்களின் குற்றத்தின் மாபெரும் திரட்சியைக் குறித்து ஏதோ ஒரு அளவு கிரகிக்க முடியும் (வெளிப்படுத்துதல் 7:9). ஆனால், அதற்கென்று நியமிக்கப்பட்ட உன்னதமான பரிகாரத்தின் மேன்மையினாலேயே பாவத்தின் மாபெரும் அளவை நாம் இன்னும் தகுதியான முறையில் கண்டுகொள்கிறோம். அது தேவனுடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே ஆகும். தேவனுடைய குமாரன்! தூதர்கள் தங்களின் கிரீடங்களை அவருக்கு முன்பாகக் கழற்றி எறிகிறார்கள்! பரலோகத்தின் சகல கீதங்களும் அவருடைய மகிமையான சிங்காசனத்தைச் சூழ்ந்து ஒலிக்கின்றன. "என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாருக்கும் மேலான தேவன். ஆமென்" (). என்றாலும் அவர் வேலைக்காரனின் ரூபமெடுத்து, அடிபட்டும், குத்தப்பட்டும், நொறுக்கப்பட்டும், கிழிக்கப்பட்டும், இறுதியில் கொலைசெய்யப்படவும் ஒப்புக்கொடுத்தார்; ஏனெனில் மாம்சமான தேவகுமாரனின் இரத்தத்தைத் தவிர வேறு எதுவும் நம்முடைய அக்கிரமங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்ய முடியாமல் போனது. எந்த ஒரு மானிட புத்தியினாலும் அந்தத் தெய்வீகப் பலியின் எல்லையற்ற மதிப்பைத் தகுதியான முறையில் கணக்கிட முடியாது, ஏனெனில் தேவனுடைய ஜனங்களின் பாவம் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும், அதை நீக்கும் பாவநிவிர்த்தி அளவிட முடியாதபடி மகா பெரியதாய் இருக்கிறது. ஆகவேதான், பாவம் ஒரு கருத்த அந்தகார வெள்ளத்தைப் போலப் புரண்டோடி வரும்போதும், கடந்த காலத்தின் நினைவுகள் கசப்பாய் இருக்கும்போதும், விசுவாசியால் மகா பெரிய பரிசுத்த தேவனுடைய எரியும் சிங்காசனத்திற்கு முன்பாக நின்று, "ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர், ஆமாம், அவரே உயிர்த்தெழுந்தும் இருக்கிறார்" () என்று சத்தமிட முடிகிறது. அவனுடைய பாவத்தின் நினைவுகள் அவனுக்குள் வெட்கத்தையும் துக்கத்தையும் நிரப்பினாலும், அதே சமயம் கிருபையின் பிரகாசத்தைக் காண்பிக்கும் ஒரு பின்னணியாக அவன் அதை மாற்றுகிறான்—குற்றம் என்பது கரிய இரவைப் போன்றது, அதில் தெய்வீக அன்பின் அழகான நட்சத்திரம் அமைதியான பிரகாசத்தோடு ஒளிர்கிறது.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.