"அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்" (). இங்கே நமக்கு ஒரு தனிப்பட்ட உரிமைப் பாராட்டு இருக்கிறது, அதற்கு அத்தாட்சியும் தேவை. அப்போஸ்தலன் தன் உரிமைப் பாராட்டு மறுக்க முடியாதது என்பதை அறிந்திருந்தார், ஆனால் தேவனுடைய இஸ்ரவேலுக்குச் சொந்தமில்லாத அநேகர் தங்களுக்கு அந்தப் பட்டம் இருப்பதாக உரிமை பாராட்டுகிறார்கள். "நானும் ஒரு இஸ்ரவேலன்" என்று நாம் நம்பிக்கையோடு பிரகடனம் செய்கிறோம் என்றால், தேவனுடைய சமூகத்தில் நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்த்த பின்பு மாத்திரமே அதைச் சொல்ல வேண்டும். ஆனால் நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்பதற்கு அத்தாட்சி அளிக்க கூடுமானால், இருதயத்திலிருந்து, "நான் அவரை முற்றுமுடிய நம்புகிறேன், அவரை மாத்திரமே நம்புகிறேன், எளிமையாய் நம்புகிறேன், இப்போதும் நம்புகிறேன், எப்போதுமே நம்புகிறேன்" என்று சொல்ல முடியுமானால், தேவனுடைய பரிசுத்தவான்களுக்குரிய அந்த உன்னதமான நிலை நமக்கும் சொந்தமாகும்—அவர்களுடைய எல்லா இன்பங்களும் நம்முடைய சுதந்தரமாகும்; நாம் இஸ்ரவேலரில் மிகவும் சிறியவர்களாய், "பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாயிருந்தாலும்" (), தேவனுடைய இரக்கங்கள் பரிசுத்தவான்களுக்கு அவர்கள் பரிசுத்தவான்கள் என்பதற்காகவே சொந்தமானதே தவிர, முதிர்ந்த பரிசுத்தவான்கள் அல்லது நன்றாய்க் கற்றுக்கொண்ட பரிசுத்தவான்கள் என்பதற்காக மாத்திரம் அல்ல என்பதால், நாம் நம்முடைய வாதத்தை முன்வைத்து, "அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; எனவே வாக்குத்தத்தங்கள் என்னுடையவை, கிருபை என்னுடையது, மகிமை என்னுடையதாகும்" என்று சொல்லலாம். தகுதியான முறையில் பெறப்படும் இந்த உரிமைப் பாராட்டு சொல்லொணாத ஆறுதலைத் தரும். தேவனுடைய ஜனங்கள் தாங்கள் அவருடையவர்கள் என்று களிகூரும்போது, "நானும் அவருடையவன்!" என்று சொல்ல முடிகிறது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! அவர்கள் தங்களுக்கு மன்னிக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட்டு, பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறித்துப் பேசும்போது, "தேவனுடைய கிருபையினாலே, நானும் அப்படியே!" என்று பிரதியுத்தரம் அளிப்பது எப்பேர்ப்பட்ட இன்பம்! ஆனால் இந்த உரிமைப் பாராட்டு இன்பங்களையும் சிலாக்கியங்களையும் மாத்திரமல்ல, அதற்குரிய நிபந்தனைகளையும் கடமைகளையும் கொண்டிருக்கிறது. நாம் தேவனுடைய ஜனங்களோடு கூட வெயிலிலும் சரி, காரிருள் மேகத்திலும் சரி பங்குபெற வேண்டும். அவர்கள் கிறிஸ்தவர்களாய் இருப்பதினிமித்தம் அசட்டையாகவும் பரியாசமாகவும் பேசப்படுவதை நாம் கேட்கும்போது, நாம் தைரியமாய் முன்வந்து, "நானும் ஒரு கிறிஸ்தவன்" என்று சொல்ல வேண்டும். அவர்கள் கிறிஸ்துவுக்காகப் பிரயாசப்பட்டு, தங்களின் காலம், தாலந்து மற்றும் முழு இருதயத்தையும் இயேசுவுக்கு ஒப்புக்கொடுப்பதைக் காணும்போது, நாம், "நானும் அப்படியே செய்கிறேன்" என்று சொல்லக் கூடியவர்களாய் இருக்க வேண்டும். ஆ, நம்முடைய அர்ப்பணிப்பினால் நம்முடைய நன்றியறிதலை நிரூபிப்போம், சிலாக்கியத்தை உரிமை பாராட்டிவிட்டு அதற்குரிய பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மனதாயிருப்பவர்களைப் போல ஜீவிப்போமாக.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.