"கிறிஸ்து எனக்கு ஜீவன்" (). விசுவாசி எப்போதும் கிறிஸ்துவுக்காக வாழவில்லை. தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் அவனுடைய பாவத்தை அவனுக்கு உணர்த்தியபோதும், கிருபையினாலே அவர் தமது அக்கிரமத்திற்காகப் பிராயச்சித்தம் செய்கிற மரணமடையும் இரட்சகரைக் காணும்படி செய்தபோதும் அவன் அவ்வாறு வாழத் தொடங்கினான். அந்த புதிய மற்றும் பரலோகப் பிறப்பின் கணத்திலிருந்து மனிதன் கிறிஸ்துவுக்காக வாழத் தொடங்குகிறான். விசுவாசிகளுக்கு இயேசுவே விலையேறப்பெற்ற நல்ல முத்து; அவருக்காக நம்மிடம் உள்ள எல்லாவற்றையும் விட்டுவிட நாம் மனதாயிருக்கிறோம். அவர் நம்முடைய அன்பை முற்றிலும் வென்றுவிட்டதால், அது அவருக்காக மட்டுமே துடிக்கிறது; அவருடைய மகிமைக்காக நாம் வாழவும், அவருடைய நற்செய்தியைக் காப்பதற்காக நாம் மரிக்கவும் வாஞ்சிக்கிறோம்; அவரே நம்முடைய வாழ்க்கையின் மாதிரி, அவருடைய சாயலின்படியே நாம் நம்முடைய குணத்தை வடிவமைக்க விரும்புகிறோம். பவுலின் வார்த்தைகள் பெரும்பாலான மனிதர்கள் நினைப்பதை விட ஆழமான அர்த்தம் கொண்டவை; அவருடைய வாழ்க்கையின் நோக்கமும் முடிவுமே கிறிஸ்துவாக இருந்தார்—ஆமாம், அவருடைய வாழ்க்கையே இயேசுவாகத்தான் இருந்தது. பூர்வகால பரிசுத்தவான் ஒருவரின் வார்த்தைகளில் கூறுவதானால், அவர் நித்திய ஜீவனைப் புசித்து, குடித்து, நித்திரை செய்தார். இயேசுவே அவருடைய சுவாசமாகவும், ஆத்துமாவின் ஆத்துமாவாகவும், இருதயத்தின் இருதயமாகவும், ஜீவனின் ஜீவனாகவும் இருந்தார். ஒரு கிறிஸ்தவன் என்று அறிக்கை செய்கிற உன்னால், இந்த உன்னதமான இலக்கின்படி வாழ்கிறேன் என்று சொல்ல முடியுமா? உன் வாழ்க்கை கிறிஸ்துவே என்று உன்னால் உண்மையோடு சொல்ல முடியுமா? உன்னுடைய வியாபாரம்—அதை நீ கிறிஸ்துவுக்காகச் செய்கிறாயா? அது சுய-மகிமைக்காகவும் குடும்ப நன்மைகளுக்காகவும் மட்டுமே செய்யப்படவில்லையா? "அது ஒரு தவறான காரணமா?" என்று நீ கேட்கலாம். ஒரு கிறிஸ்தவனுக்கு அது தவறானதே. அவன் கிறிஸ்துவுக்காக வாழ்வதாக அறிக்கை செய்கிறான்; அப்படி இருக்கும்போது அவன் எவ்வாறு ஆவிக்குரிய விபச்சாரத்தைச் செய்யாமல் மற்றொரு நோக்கத்திற்காக வாழ முடியும்? இந்த பிரமாணத்தை ஏதோ ஒரு அளவில் கடைப்பிடிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்; ஆனால் அப்போஸ்தலனைப் போலத் தான் முற்றிலும் கிறிஸ்துவுக்காகவே வாழ்ந்ததாகச் சொல்லத் துணியும் மனிதன் யார்? என்றாலும், இதுவே ஒரு கிறிஸ்தவனின் உண்மையான வாழ்க்கையாகும்—அதன் ஊற்றும், அதன் பராமரிப்பும், அதன் வடிவமும், அதன் முடிவும் ஒரே வார்த்தையில் அடங்கியிருக்கிறது—அதுவே கிறிஸ்து இயேசு. ஆண்டவரே, என்னை ஏற்றுக்கொள் கொள்ளும்; உமக்குள்ளும் உமக்காகவும் மட்டுமே வாழ ஜெபித்து, என்னை இங்கேயே அர்ப்பணிக்கிறேன். ஏரின் மேல் உழுவதற்கும் பலிபீடத்தின் மேல் பலியாவதற்கும் நடுவே நிற்கும் மாட்டைப்போல நான் இருக்கட்டும், என் குறிக்கோள் "இரண்டிற்கும் ஆயத்தம்" என்பதாக இருக்கட்டும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.