JUL 07 MORNING

1 தெசலோனிக்கேயர் 5:25

சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

1 தெசலோனிக்கேயர் 5:25

சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்" (). வருடத்தின் இந்த ஒரு காலை வேளையை, போதகர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்ற தலைப்பில் வாசகரின் நினைவை உயிர்ப்பிப்பதற்காக நாங்கள் ஒதுக்கியிருக்கிறோம், அப்போஸ்தலனால் முதலில் கூறப்பட்டு இப்போது எங்களால் மீண்டும் சொல்லப்படும் இந்த உருக்கமான வேண்டுதலைத் தட்டாமல் நிறைவேற்றும்படி ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்தையும் நாங்கள் மகா உத்தமமாய் வேண்டிக் கொள்கிறோம். சகோதரரே, எங்களுடைய ஊழியம் மகா பாரமான பொறுப்புடையது, அது ஆயிரக்கணக்கானவர்களுடைய ஆசீர்வாதத்தையும் ஆக்கினையையும் உள்ளடக்கியது; நித்திய காரியங்களின் வியாபாரத்தில் தேவனுக்காக நாங்கள் ஆத்துமாக்களோடு பேசுகிறோம், எங்களுடைய வார்த்தை ஒன்று ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாய் இருக்கிறது, அல்லது மரணத்துக்கேதுவான மரணவாசனையாய் இருக்கிறது (). மகா பாரமான உன்னதப் பொறுப்பு எங்கள் மேல் இருக்கிறது, இறுதியில் நாங்கள் எல்லா மனிதர்களுடைய இரத்தப்பழிக்கும் நீங்கலாய் சுத்தமுள்ளவர்களாய்க் காணப்பட்டால் அது சிறிய கிருபையல்ல (). கிறிஸ்துவின் சேனையின் அதிகாரிகளாக, மனிதர்களினதும் பிசாசுகளினதும் பகையின் விசேஷித்த நோக்கமாய் நாங்கள் இருக்கிறோம்; அவர்கள் எங்களுடைய வழுவுதலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள், எங்களை வீழ்த்தப் பிரயாசப்படுகிறார்கள். எங்களுடைய பரிசுத்த அழைப்பு, நீங்கள் விலகியிருக்கும் பல சோதனைகளுக்குள் எங்களை இழுத்துச் செல்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக, சத்தியத்தை நாங்கள் தனிப்பட்ட முறையில் அநுபவித்து மகிழ்வதிலிருந்து, ஊழியத்தின் கடமைக்காக மாத்திரமே அதை ஆராயும் நிலைக்குள் அது எங்களை அடிக்கடி தள்ளிவிடுகிறது. நாங்கள் அநேக முறுமுறுப்பான காரியங்களைச் சந்திக்கிறோம், எங்களுடைய புத்தி திகைத்து நிற்கிறது; நாங்கள் மகா விசனகரமான பின்வாங்குதல்களைக் காண்கிறோம், எங்களுடைய இருதயங்கள் காயப்படுகின்றன; லட்சக்கணக்கான ஜனங்கள் அழிந்துபோவதைக் காண்கிறோம், எங்களுடைய ஆவிகள் சோர்ந்துபோகின்றன. எங்களுடைய பிரசங்கத்தினாலே நீங்கள் பிரயோஜனம் அடைய வேண்டும் என்று விரும்புகிறோம்; உங்களுடைய பிள்ளைகளுக்கு நாங்கள் ஆசீர்வாதமாய் இருக்க வாஞ்சிக்கிறோம்; பரிசுத்தவான்களுக்கும் பாவிகளுக்கும் நாங்கள் பிரயோஜனமுள்ளவர்களாய் இருக்க ஏங்குகிறோம்; எனவே, பிரியமான சிநேகிதர்களே, எங்கள் தேவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துபேசுங்கள். உங்களுடைய ஜெபங்களின் சகாயம் எங்களுக்குத் தவறினால் நாங்கள் பாக்கியற்ற மனிதர்களாய் இருப்போம், ஆனால் உங்களுடைய விண்ணப்பங்களில் நாங்கள் வாழ்ந்தால் நாங்கள் பாக்கியவான்களாய் இருப்போம். ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் எங்களை நோக்காமல் எங்கள் எஜமானரையே நோக்குகிறீர்கள், என்றாலும் அவர் தமது போதகர்களின் மூலமாக எத்தனை முறை அந்த ஆசீர்வாதங்களைத் தந்திருக்கிறார்; அப்படியிருக்க, கர்த்தர் நற்செய்தியின் பொக்கிஷத்தை வைக்கக் கூடிய மண்பாண்டங்களாக நாங்கள் மாறும்படிக்கு, மீண்டும் மீண்டும் எங்களுக்காகக் கேளுங்கள் (). மிஷனரிகள், போதகர்கள், பட்டணத்து ஊழியக்காரர்கள், மற்றும் மாணவர்கள் ஆகிய நாங்கள் எல்லாரும் இணைந்து இயேசுவின் நாமத்திலே உங்களை வேண்டிக் கொள்கிறோம், "சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.