JUL 07 EVENING

எசேக்கியேல் 16:6

நான் உன் அருகே கடந்துபோகும் போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.

எசேக்கியேல் 16:6

நான் உன் அருகே கடந்துபோகும் போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நான் உன் பக்கமாய் கடந்துபோகும்போது... உன்னை நோக்கி: பிழைத்திரு (Live - ஜீவி) என்றேன்" (). இரட்சிக்கப்பட்டவனே, கிருபையின் இந்த மாண்புமிகு கட்டளையை நன்றியறிதலோடு சிந்தித்துப் பார். தேவனுடைய இந்தக் கட்டளை மகா மகத்துவமுள்ளது என்பதைக் கவனி. நமது வசனத்தில், தனக்குள்ளே பாவத்தைத் தவிர வேறொன்றும் இல்லாத, கோபாக்கினையைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத ஒரு பாவியைக் காண்கிறோம்; ஆனால் நித்திய கர்த்தர் தமது மகிமையில் அவன் பக்கமாய் கடந்து போகிறார்; அவர் நோக்குகிறார், அவர் நிற்கிறார், அவர் தனித்த உன்னத ராஜரீக வார்த்தையை உச்சரிக்கிறார், "பிழைத்திரு." அங்கே ஒரு தேவன் பேசுகிறார். ஒரே ஒரு வார்த்தையினாலே ஜீவனைக் கட்டளையிடவும் அதை வாரி வழங்கவும் அவரைத் தவிர வேறு யாரால் துணிய முடியும்? மேலும், இந்தக் கட்டளை எல்லாவற்றையும் உள்ளடக்கியது. அவர் "பிழைத்திரு" என்று சொல்லும்போது, அது அநேக காரியங்களை உள்ளடக்குகிறது. இங்கே நீதிக்குரிய ஜீவன் இருக்கிறது. பாவி ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட ஆயத்தமாய் இருக்கிறான், ஆனால் பராக்கிரமமுள்ளவர், "பிழைத்திரு," என்கிறார், உடனே அவன் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவனாய் எழுகிறான். இது ஆவிக்குரிய ஜீவன். நாம் இயேசுவை அறியாதிருந்தோம்—நம்முடைய கண்களால் கிறிஸ்துவைக் காண முடியவில்லை, நம்முடைய காதுகளால் அவருடைய சத்தத்தைக் கேட்க முடியவில்லை—யெகோவா, "பிழைத்திரு," என்றார், அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்தவர்களாயிருந்த நம்மையும் அவர் உயிர்ப்பித்தார் (). அதுமட்டுமல்ல, அது ஆவிக்குரிய ஜீவனின் பூரணத்துவமாகிய மகிமையின் ஜீவனையும் உள்ளடக்குகிறது. "உன்னை நோக்கி: பிழைத்திரு என்றேன்:" அந்த வார்த்தை மரணம் வரும் வரை காலத்தின் எல்லா வருடங்களின் வழியாயும் ஓடி வருகிறது, மரணத்தின் நிழல்களின் மத்தியிலும்கூட, கர்த்தருடைய சத்தம் இன்னும் கேட்கிறது, "பிழைத்திரு!" உயிர்த்தெழுதலின் காலையிலே பிரதான தூதனின் சத்தமாய் எதிரொலிப்பதும் அதே வார்த்தைதான், "பிழைத்திரு," பரிசுத்த ஆவிகள் தங்களின் தேவனுடைய மகிமையில் என்றென்றைக்குமாய் ஆசீர்வதிக்கப்படும்படி பரலோகத்திற்கு ஏறிச் செல்லும்போது, அவைகள் "பிழைத்திரு" என்ற இதே வார்த்தையின் வல்லமையினாலேயே செல்லுகின்றன. இது முறியடிக்கப்பட முடியாத ஒரு கட்டளை என்பதையும் கவனித்துப் பாருங்கள். தர்சுப் பட்டணத்து சவுல் ஜீவனுள்ள தேவனுடைய பரிசுத்தவான்களைக் கைது செய்ய தமஸ்குப் பாதையில் சென்று கொண்டிருக்கிறான். பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் கேட்கிறது, சூரியனுடைய பிரகாசத்தை விஞ்சின ஒரு வெளிச்சம் தோன்றுகிறது, சவுல், "ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்?" என்று கதறுகிறான் (). இந்தக் கட்டளை தாராள கிருபையின் கட்டளையாய் இருக்கிறது. பாவிகள் இரட்சிக்கப்படும்போது, தேவன் தமது தாராள, விலைக்கிரயமில்லாத, தேடப்படாத கிருபையை மகிமைப்படுத்த விரும்புவதினாலேயே அது முற்றிலும் நடக்கிறது. கிறிஸ்தவர்களே, உங்களுடைய நிலையைப் பாருங்கள், கிருபையின் கடனாளிகள் நீங்கள்; உருக்கமான, கிறிஸ்துவுக்கு ஒத்த வாழ்க்கையினால் உங்களுடைய நன்றியறிதலை வெளிப்படுத்துங்கள், தேவன் உங்களை வாழக் கட்டளையிட்டபடியால், நீங்கள் உத்தமமாய் வாழ்வதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.