"ஜாக்கிரதையாயிருந்து (zealous - வைராக்கியமாயிருந்து)" (). ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதை நீ காண விரும்பினால், "இந்த உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்குரிய ராஜ்யங்களாயின" (வெளிப்படுத்துதல் 11:15) என்ற கூப்பிடுதலை நீ கேட்க விரும்பினால்; இரட்சகரின் தலையின் மேல் கிரீடங்களை வைக்கவும், அவருடைய சிங்காசனம் உன்னதமாய் உயர்த்தப்படவும் நீ வாஞ்சித்தல், வைராக்கியத்தினால் நிரப்பப்படு. ஏனெனில், தேவனுக்கு அடுத்தபடியாக, உலகத்தின் இரட்சிப்பிற்கான வழி சபையின் வைராக்கியத்தினாலேயே இருக்க வேண்டும். ஒவ்வொரு கிருபையும் பராக்கிரமங்களைச் செய்யும், ஆனால் இதுவே முதலாவதாய் இருக்கும்; விவேகம், அறிவு, பொறுமை, மற்றும் தைரியம் யாவும் அவைகளின் இடங்களில் பின்தொடரும், ஆனால் வைராக்கியமே முன்அணியை நடத்த வேண்டும். உன்னுடைய அறிவின் எல்லை அல்ல, அது பிரயோஜனமானதுதான்; உன்னுடைய தாலந்தின் எல்லை அல்ல, அது அலட்சியம் பண்ணப்பட வேண்டியது அல்ல; உன்னுடைய வைராக்கியமே மாபெரும் பராக்கிரமங்களை நடப்பிக்கும். இந்த வைராக்கியம் பரிசுத்த ஆவியானவரின் கனியாகும்: அது ஆத்துமாவுக்குள் பரிசுத்த ஆவியானவர் ஓயாமல் நடப்பிக்கும் கிரியைகளிலிருந்து தன் ஜீவனுள்ள வல்லமையைப் பெறுகிறது. நம்முடைய உள்வாழ்க்கை சுருங்கிப் போனால், தேவனுக்கு முன்பாக நம்முடைய இருதயம் மெதுவாய்த் துடித்தால், நாம் வைராக்கியத்தை அறிய மாட்டோம்; ஆனால் நமக்குள்ளே யாவும் பலமுள்ளதாகவும் சுறுசுறுப்பானதாகவும் இருந்தால், கிறிஸ்துவின் ராஜ்யம் வரவும், அவருடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறது போல பூமியிலேயும் செய்யப்படுவதைக் காணவும் அன்பான கவலை நமக்குள்ளே எழாமல் இருக்காது. நன்றியறிதலின் ஆழமான உணர்வு கிறிஸ்தவ வைராக்கியத்தைப் போஷிக்கும். நாம் தோண்டி எடுக்கப்பட்ட பாழான குழியைத் திரும்பிப் பார்க்கும்போது, நாம் தேவனுக்காகச் செலவழிக்கப்படவும் தேய்க்கப்படவும் வேண்டிய ஏராளமான காரணங்களைக் கண்டுகொள்கிறோம் (). மேலும் வைராக்கியம் நித்திய எதிர்காலத்தின் சிந்தனையினாலும் தூண்டப்படுகிறது. அது கண்ணீரோடு நரகத்தின் அக்கினி ஜுவாலைகளை நோக்கிப் பார்க்கிறது, அதனால் உறங்க முடியாது: அது பரலோகத்தின் மகிமைகளை நோக்கி வாஞ்சையோடு பார்க்கிறது, அதனால் தீவிரமாய் எழும்பாமல் இருக்க முடியாது. செய்ய வேண்டிய வேலையோடு ஒப்பிடும்போது காலம் சுருக்கமானது என்று அது உணருகிறது, எனவே தன் எஜமானரின் காரியத்திற்காகத் தனக்குள்ள யாவற்றையும் அர்ப்பணிக்கிறது. மேலும் கிறிஸ்துவின் மாதிரியை நினைவுகூருவதினால் அது எப்போதுமே பலப்படுத்தப்படுகிறது. அவர் வைராக்கியத்தை ஒரு அங்கியப் போலத் தரித்திருந்தார் (). கடமையாகிய இரதத்தின் சக்கரங்கள் அவரோடு எவ்வளவு வேகமாய் ஓடின! வழியிலே சோம்பலாய் இருப்பதை அவர் அறியவில்லை. நாமும் அதே வைராக்கியத்தின் ஆவியை வெளிப்படுத்துவதின் மூலம் அவருடைய சீஷர்கள் என்று நிரூபிப்போமாக.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.