"உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீர் என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுவதும் காத்திருக்கிறேன்" (). விசுவாசி நடுங்கும் பாதங்களோடு கர்த்தருடைய வழியில் நடக்கத் தொடங்கியிருக்கும்போது, தன் பெற்றோரின் துணையான கரத்தினால் தாங்கப்படும் ஒரு சிறிய குழந்தையைப் போலத் தான் இன்னும் முன்னோக்கி நடத்தப்பட வேண்டும் என்று அவன் கேட்கிறான், சத்தியத்தின் ஆரம்பப் பாடங்களைக் கற்றுக்கொள்ள அவன் வாஞ்சிக்கிறான். அநுபவ பூர்வமான போதனையே இந்த ஜெபத்தின் பாரமாய் இருக்கிறது. தாவீது அநேகக் காரியங்களை அறிந்திருந்தார், என்றாலும் தன் அறியாமையை உணர்ந்து, கர்த்தருடைய பள்ளியில் இன்னும் இருக்க வாஞ்சித்தார்: இரண்டு வசனங்களில் நான்கு முறை அவர் கிருபையின் கல்லூரியில் ஒரு சீஷனாக இருக்கும்படி விண்ணப்பிக்கிறார் (). அநேக வேஷக்காரர்கள் தங்களின் சொந்தத் தந்திரங்களைப் பின்பற்றி, தங்களுக்கு என்று புதிய சிந்தனைப் பாதைகளை வகுத்துக்கொள்வதற்குப் பதிலாக, தேவனுடைய சொந்த சத்தியத்தின் நல்ல பூர்வகாலத்துப் பாதைகளை ஆராய்ந்து, தங்களுக்குப் பரிசுத்தமான புத்தியையும் கற்பிக்கப்படத் தகுந்த ஆவியையும் தரும்படி பரிசுத்த ஆவியானவரைக் கெஞ்சுவார்களானால் அது எவ்வளவோ நலமாய் இருக்கும். "நீர் என் இரட்சிப்பின் தேவன்." திரித்துவ யெகோவாவே தமது ஜனங்களின் இரட்சிப்பைத் துவக்குகிறவருமாய் முடிக்கிறவருமாயிருக்கிறார். வாசகரே, அவர் உங்களுடைய இரட்சிப்பின் தேவனா? பிதாவின் தெரிந்துகொள்ளுதலிலும், குமாரனின் பாவநிவிர்த்தியிலும், ஆவியானவரின் உயிர்ப்பித்தலிலும் உங்களுடைய நித்திய நம்பிக்கைகளின் சகல ஆதாரங்களையும் நீங்கள் காண்கிறீர்களா? அப்படி இருந்தால், இன்னும் உன்னதமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள இதையே நீங்கள் ஒரு வாதமாகப் பயன்படுத்தலாம்; கர்த்தர் உங்களை இரட்சிக்க நியமித்திருப்பாரானால், உங்களைத் தமது வழிகளில் போதிக்க அவர் நிச்சயமாக மறுக்க மாட்டார். தாவீது இங்கே வெளிப்படுத்தும் உன்னதமான நம்பிக்கையோடு நாம் கர்த்தரை நோக்கிக் கூப்பிட முடிகிறது எப்பேர்ப்பட்ட பாக்கியம், அது ஜெபத்தில் நமக்கு மாபெரும் வல்லமையையும், சோதனையில் ஆறுதலையும் தருகிறது. "உம்மை நோக்கி நாள்முழுவதும் காத்திருக்கிறேன்." பொறுமை என்பது விசுவாசத்தின் அழகான வேலைக்காரியும் குமாரத்தியுமாய் இருக்கிறது; நாம் வீணாகக் காத்திருக்க மாட்டோம் என்று நிச்சயமாக அறியும்போது நாம் மகிழ்ச்சியோடே காத்திருக்கிறோம். நம்முடைய ஆயுள் காலமெல்லாம் ஊழியத்திலும், ஆராதனையிலும், எதிர்பார்ப்பிலும், நம்பிக்கையிலும் கர்த்தருக்குக் காத்திருப்பது நம்முடைய கடமையாகவும் சிலாக்கியமாகவும் இருக்கிறது. நம்முடைய விசுவாசம் சோதிக்கப்படும் விசுவாசமாய் இருக்கும், அது உண்மையான சுபாவமுடையதாய் இருந்தால், அது சோர்ந்துபோகாமல் மாறாத சோதனையைத் தாங்கும். கர்த்தர் ஒருமுறை நமக்காக எவ்வளவு காலமும் எவ்வளவு கிருபையாகவும் காத்திருந்தார் என்பதை நாம் நினைவில் கொண்டால், நாம் தேவனுக்குக் காத்திருக்கச் சோர்ந்துபோக மாட்டோம்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.