"நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டியதில்லை" (வெளிப்படுத்துதல் 21:23). அங்கே மேலான உலகத்திலே, குடிகள் சிருஷ்டிகளின் சகல ஆறுதல்களிலிருந்தும் சுயாதீனப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வஸ்திரங்கள் தேவையில்லை; அவர்களுடைய வெள்ளை அங்கிகள் ஒருபோதும் பழசாவதில்லை, அவைகள் ஒருபோதும் தீட்டுப்படுவதுமில்லை. நோய்களைக் குணமாக்க அவர்களுக்கு எந்த மருந்தும் தேவையில்லை, "வியாதிப்பட்டிருக்கிறேன் என்று அந்நகரத்துக்குடி சொல்வதில்லை" (). தங்களின் சரீரங்களைத் தேற்ற அவர்களுக்குத் தூக்கம் தேவையில்லை—அவர்கள் இரவும் பகலும் இளைப்பாறாமல், அவருடைய ஆலயத்தில் ஓய்வில்லாமல் அவரைத் துதிக்கிறார்கள். ஆறுதல் அளிப்பதற்கு அவர்களுக்கு எந்தச் சமுதாய உறவுகளும் தேவையில்லை, தங்களின் தோழர்களோடு கொள்ளும் தொடர்புகளிலிருந்து அவர்கள் பெறக்கூடிய எந்த ஒரு சந்தோஷமும் தங்களின் பேரின்பத்திற்கு அவசியமானது அல்ல, ஏனெனில் தங்களின் ஆண்டவரின் ஐக்கியமே அவர்களின் மகா பெரிய ஆசைகளின் நிறைவிற்குப் போதுமானது. அங்கே அவர்களுக்குப் போதகர்கள் தேவையில்லை; தேவனுடைய காரியங்களைக் குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் ஐக்கியப்படுவார்கள் என்பது நிச்சயம், ஆனால் போதனையின் வழியாய் அவர்களுக்கு இது தேவையில்லை; அவர்கள் எல்லாரும் கர்த்தராலே போதிக்கப்பட்டிருப்பார்கள். நம்முடையவைகள் ராஜாவின் வாசலிலுள்ள தர்மங்களாகும், அவா்களோ அவருடைய பந்தியிலேயே விருந்துண்ணுகிறார்கள். இங்கே நாம் சிநேகிதரின் புயத்தின் மேல் சாருகிறோம், அங்கேயோ அவர்கள் தங்களின் பிரியமானவர் மேலும் அவர்மேல் மாத்திரமே சாருகிறார்கள். இங்கே நமக்கு நம்முடைய தோழர்களின் உதவி தேவைப்படுகிறது, அங்கேயோ அவர்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தங்களுக்குத் தேவையான யாவற்றையும் கண்டுகொள்ளுகிறார்கள். இங்கே நாம் அழிந்துபோகும் ஆகாரத்தையும், பூச்சி அரித்துப்போகும் வஸ்திரத்தையும் நோக்குகிறோம், அங்கேயோ அவர்கள் தேவனுக்குள்ளேயே எல்லாவற்றையும் கண்டுகொள்ளுகிறார்கள். கிணற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டுவர நாம் வாலியைப் பயன்படுத்துகிறோம், அங்கேயோ அவர்கள் ஜீவனுள்ள நதியின் ஊற்றிலிருந்தே குடித்து, ஜீவநீருக்கு நேராகத் தங்களின் உதடுகளை வைக்கிறார்கள். இங்கே தூதர்கள் நமக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறார்கள், அங்கேயோ பரலோகத்திலிருந்து நமக்கு எந்தத் தூதுவர்களும் தேவையில்லை. தேவனிடமிருந்து தங்களின் அன்புக் கடிதங்களைக் கொண்டுவர அங்கே அவர்களுக்கு எந்த காபிரியேலும் தேவையில்லை, ஏனெனில் அங்கே அவர்கள் அவரை முகமுகமாய்த் தரிசிப்பார்கள். ஓ! ஒவ்வொரு இரண்டாம் காரணத்திற்கும் மேலாக நாம் எழும்பி, தேவனுடைய வெறும் புயத்தின் மேல் மாத்திரம் இளைப்பாறும் அந்த நேரம் எப்பேர்ப்பட்ட பாக்கியமான நேரமாய் இருக்கும்! தேவனுடைய சிருஷ்டிகள் அல்ல, தேவனே; அவருடைய கிரியைகள் அல்ல, கர்த்தரே நம்முடைய தினசரி சந்தோஷமாய் இருக்கும் அந்த மகிமையான மணிநேரம் எப்பேர்ப்பட்டது! நம்முடைய ஆத்துமாக்கள் அப்போது பேரின்பத்தின் பூரணத்துவத்தை அடைந்திருக்கும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.