JUL 09 MORNING

சங்கீதம் 103:2

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.

சங்கீதம் 103:2

என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவர் செய்த உபகாரங்கள் (benefits - நன்மைகள்) ஒன்றையும் மறவாதே" (). பூர்வகாலப் பரிசுத்தவான்களின் வாழ்க்கையில் தேவனுடைய கரத்தைக் காண்பதும், அவர்களை இரட்சிப்பதில் அவருடைய நன்மையையும், அவர்களை மன்னிப்பதில் அவருடைய இரக்கத்தையும், அவர்களோடு செய்த உடன்படிக்கையைக் காப்பதில் அவருடைய உண்மைத்தன்மையையும் கவனிப்பது இன்பமான மற்றும் பிரயோஜனமான ஒரு கிரியையாய் இருக்கிறது. ஆனால் நம்முடைய சொந்த வாழ்க்கையில் தேவனுடைய கரத்தைக் கவனிப்பது இன்னும் அதிக ஆர்வமானதாகவும் பிரயோஜனமானதாகவும் இருக்காதா? கடந்த காலத்தில் கடந்து சென்ற எந்தப் பரிசுத்தவான்களின் வாழ்க்கையையும் காட்டிலும், நம்முடைய சொந்த வரலாறு தேவனால் நிறைந்ததாகவும், அவருடைய நன்மையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்ததாகவும், அவருடைய உண்மைத்தன்மை மற்றும் உத்தமத்திற்குரிய சான்றாகவும் இருப்பதாக நாம் கருத வேண்டாமா? பூர்வகாலத்து ஜனங்களுக்காக மாத்திரம் கர்த்தர் தற்காப்புப் பராக்கிரமங்களை நடப்பித்துத் தன் வல்லமையைக் காண்பித்தார் என்றும், இப்போது பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்காக அவர் அதிசயங்களை நடப்பிப்பதில்லை அல்லது தன் புயத்தை வெளிப்படுத்துவதில்லை என்றும் நாம் நினைக்கும்போது நம்முடைய கர்த்தருக்கு அநியாயம் செய்கிறோம். நம்முடைய சொந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்போம். நிச்சயமாக இவைகளில் நம்மையே தேற்றக் கூடிய, நம்முடைய தேவனை மகிமைப்படுத்தக் கூடிய சில மகிழ்ச்சியான சம்பவங்களை நாம் கண்டுகொள்ளலாம். உங்களுக்கு விடுதலையே உண்டானதில்லையா? தெய்வீகப் பிரசன்னத்தினால் தாங்கப்பட்டவர்களாய் நீங்கள் எந்த நதிகளையும் கடந்ததில்லையா? எந்த நெருப்பிலும் நீங்கள் சேதமில்லாமல் நடக்கவில்லையா? எந்த ஒரு தரிசனமும் உங்களுக்கு உண்டானதில்லையா? விசேஷித்த கிருபைகள் எதையும் நீங்கள் பெறவில்லையா? சாலொமோனுடைய இருதயத்தின் வாஞ்சையை அருளின தேவன், உங்களுடைய சத்தத்தைக் கேட்டு உங்களுடைய விண்ணப்பங்களுக்குப் பதில் தந்ததே இல்லையா? 'அவர் நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்' என்று தாவீது பாடினாரே, மகா தாராள குணம் கொண்ட அந்தத் தேவன் உங்களை ஒருபோதும் கொழுப்பினால் திருப்தியாக்கவில்லையா? பசும்புல் மேய்ச்சல்களில் நீங்கள் ஒருபோதும் படுக்கச் செய்யப்படவில்லையா? அமைதியான தண்ணீரின் அருகே நீங்கள் ஒருபோதும் வழிநடத்தப்படவில்லையா? (). நிச்சயமாகப் பூர்வகாலத்துப் பரிசுத்தவான்களுக்கு எப்படியோ அப்படியே தேவனுடைய நன்மை நமக்கும் இருந்திருக்கிறது. அப்படியானால், நாம் அவருடைய இரக்கங்களை ஒரு சங்கீதமாகத் தொடுப்போம். நன்றியறிதலின் தூய பொன்னையும், துதியின் நவரத்தினங்களையும் எடுத்து இயேசுவின் தலையின் மேல் சூட்ட மற்றொரு கிரீடமாக அவைகளை வனைவோம். அவருடைய கிருபை என்றென்றைக்குமுள்ளது என்று நாம் துதிக்கும்போது, தாவீதின் சுரமண்டலத்திலிருந்து எழுந்தது போல, நம்முடைய ஆத்துமாக்களிலிருந்தும் அவ்வளவு இனிமையான மற்றும் புத்துணர்ச்சி தரும் இசை எழும்பட்டும்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.