"பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் (Fellow citizens - உடன் குடிகளும்)" (). நாம் பரலோகத்தின் உடன் குடிகளாய் இருக்கிறோம் என்பதன் பொருள் என்ன? நாம் பரலோக அரசாங்கத்தின் கீழ் இருக்கிறோம் என்பதுவே அதன் பொருள். பரலோகத்தின் ராஜாவாகிய கிறிஸ்து நம்முடைய இருதயங்களில் அரசாளுகிறார்; நம்முடைய தினசரி ஜெபம், "உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக" () என்பதாக இருக்கிறது. மகிமையின் சிங்காசனத்திலிருந்து புறப்படும் பிரகடனங்கள் நம்மாலே மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: மகா பெரிய ராஜாவின் கட்டளைகளுக்கு நாம் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிகிறோம். பின்பு புதிய எருசலேமின் குடிகளாக நாம் பரலோகத்தின் கனங்களில் பங்குபெறுகிறோம். மகிமையடைந்த பரிசுத்தவான்களுக்குரிய மகிமை நமக்கும் உரியது, ஏனெனில் நாம் ஏற்கனவே தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம், ராஜரீக இரத்தத்தின் பிரபுக்கள் நாம்; ஏற்கனவே நாம் இயேசுவின் நீதியாகிய மாசற்ற வஸ்திரத்தைத் தரித்துக் கொண்டிருக்கிறோம்; ஏற்கனவே தூதர்கள் நமக்கு ஊழியக்காரர்களாயும், பரிசுத்தவான்கள் நமக்குத் தோழர்களாயும், கிறிஸ்து நமக்குச் சகோதரனாயும், தேவன் நமக்கு பிதாவாயும், அழியாமையின் கிரீடம் நமக்குரிய பலனாயும் இருக்கிறது. நாம் சுதந்தரத்தின் சிலாக்கியங்களில் பங்குபெறுகிறோம், ஏனெனில் பரலோகத்தில் பெயர்கள் எழுதப்பட்டிருக்கிற தலைப்பேறானவர்களின் பொதுச்சபையண்டை வந்து சேர்ந்திருக்கிறோம் (). குடிகளாக, பரலோகத்தின் சகல ஆஸ்திகளின் மேலும் நமக்குப்பொதுவான உரிமை உண்டு. அதனுடைய முத்து வாசல்களும் வச்சிரக்கல் மதில்களும் நம்முடையவை; விளக்கோ சூரியனின் வெளிச்சமோ தேவையில்லாத அந்த நகரத்தின் நீல நிறப் பிரகாசம் நம்முடையது; அதன் கரைகளில் வளரும் பன்னிரண்டு விதமான கனிகளைத் தரும் ஜீவத்தண்ணீர் நதி நம்முடையது; பரலோகத்தில் நமக்குச் சொந்தமில்லாதது எதுவுமில்லை. "இப்பொழுது இருக்கிறவைகளாகிலும், இனி வரப்போகிறவைகளாகிலும்" எல்லாம் நம்முடையவை (). பரலோகத்தின் குடிகளாக நாம் அதனுடைய இன்பங்களிலும் பங்குபெறுகிறோம். மனந்திரும்புகிற பாவிகளைக் குறித்தும், திரும்பி வரும் கெட்டகுமாரர்களைக் குறித்தும் அவர்கள் அங்கே சந்தோஷப்படுகிறார்களா? நாமும் அப்படியே செய்கிறோம் (). ஜெயங்கொண்ட கிருபையின் மகிமைகளை அவர்கள் பாடுகிறார்களா? நாமும் அதையே செய்கிறோம். தங்களின் கிரீடங்களை இயேசுவின் பாதப்படியில் கழற்றி எறிகிறார்களா? நமக்கிருக்கும் கனங்கள் யாவையும் நாமும் அங்கேதான் கழற்றி எறிகிறோம். அவருடைய புன்னகையினால் அவர்கள் மயங்குகிறார்களா? கீழே வாழும் நமக்கும் அது குறைந்த இனிமையுடையது அல்ல. அவருடைய இரண்டாவது வருகையை நோக்கி அவர்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்களா? நாமும் அவருடைய வெளிப்படுதலை நோக்கி ஆவலோடு நோக்கியிருக்கிறோம். அப்படியானால், நாம் இவ்விதமாய்ப் பரலோகத்தின் குடிகளாய் இருந்தால், நம்முடைய நடத்தையும் செய்கைகளும் நம்முடைய உன்னதமான கனத்திற்கு ஏற்றதாக இருக்கட்டும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.