"சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று" (). சாயங்காலம் என்பது "அந்தகாரம்" விடியற்காலம் என்பது "வெளிச்சம்," என்றாலும் அந்த இரண்டும் சேர்ந்து வெளிச்சத்திற்கு மாத்திரம் உரிய ஒரே பெயரினால் அழைக்கப்படுகிறது! இது ஏதோ விசித்திரமானதுதான், ஆனால் ஆவிக்குரிய அநுபவத்தில் இதற்குத் துல்லியமான நிழலாட்டம் உண்டு. ஒவ்வொரு விசுவாசிக்குள்ளும் அந்தகாரமும் வெளிச்சமும் உண்டு, என்றாலும் அவனுக்குள்ளே பாவம் இருப்பதினிமித்தம் அவன் ஒரு பாவி என்று அழைக்கப்படுவதில்லை, மாறாக அவனிடம் ஏதோ ஒரு அளவில் பரிசுத்தம் இருப்பதினிமித்தம் அவன் ஒரு பரிசுத்தவான் என்றே அழைக்கப்படுகிறான்! தங்களின் பலவீனங்களை எண்ணித் துக்கப்பட்டு, "எனக்குள் இவ்வளவு அந்தகாரம் இருக்கும்போது நான் எப்படித் தேவனுடைய பிள்ளையாய் இருக்க முடியும்?" என்று கேட்கிறவர்களுக்கு இது மகா ஆறுதல் தரும் சிந்தனையாய் இருக்கும். ஆம்; ஏனெனில் நீ, நாழைப் போல, உன்னுடைய பெயரைச் சாயங்காலத்திலிருந்து பெறாமல் விடியற்காலத்திலிருந்தே பெறுகிறாய்; நீ இப்போதே சீக்கிரத்தில் மாறப்போகும் அந்தப் பூரண பரிசுத்தத்தைப் பெற்றது போலவே தேவனுடைய வார்த்தையில் உன்னைக் குறித்துப் பேசப்படுகிறது. உனக்குள் இன்னும் அந்தகாரம் இருந்தாலும் நீ வெளிச்சத்தின் பிள்ளை என்று அழைக்கப்படுகிறாய் (). தேவனுடைய பார்வையில் எது ஆளுகை செய்யும் சுபாவமாய் இருக்கிறதோ, எது ஒருநாள் மீதியாயிருக்கப் போகும் ஒரே பிரமாணமாய் இருக்கிறதோ, அதைக் கொண்டே உனக்குப் பெயரிடப்படுகிறது.
சாயங்காலமே முதலாவது வருகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள். சுபாவத்தின்படி கால வரிசையில் நாம் முதலாவது அந்தகாரமாய் இருக்கிறோம், நம்முடைய விசனகரமான உணர்வுகளில் காரிருளே முதலாவது தோன்றி, "தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" என்று மகா தாழ்மையோடு நம்மை அழச் செய்கிறது (). விடியற்காலத்தின் இடம் இரண்டாவது, கிருபை சுபாவத்தை மேற்கொள்ளும்போது அது உதிக்கிறது. தேவனுடைய தாசன் ஜான் புனியன் (John Bunyan) கூறுவது ஒரு பாக்கியமான பழமொழி, "எது கடைசியாய் இருக்கிறதோ, அது என்றென்றைக்குமாய் நிலைத்திருக்கும்." முதலாவதாய் இருப்பது ஏற்ற காலத்தில் இரண்டாவதாய் வந்ததிற்கு வழிவிடுகிறது; ஆனால் கடைசிக்குக் பின் வேறு எதுவும் வருவதில்லை. எனவே நீ சுபாவத்தின்படி அந்தகாரமாய் இருந்தாலும், நீ ஒருமுறை கர்த்தருக்குள் வெளிச்சமாய் மாறின பின்பு, பின்தொடர அங்கே எந்த ஒரு சாயங்காலமும் இல்லை; "உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை" (). இந்த வாழ்க்கையின் முதலாம் நாள் ஒரு சாயங்காலமும் விடியற்காலமுமாய் இருக்கிறது; ஆனால் நாம் தேவனுடன் என்றென்றைக்குமாய் இருக்கப் போகும் இரண்டாம் நாளோ, எந்த ஒரு சாயங்காலமும் இல்லாத, ஒரே பரிசுத்தமான, உன்னதமான, நித்திய நண்பகலாய் இருக்கும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.