"கர்த்தருக்கென்று பிழைக்கிறோம்" (). தேவன் சித்தமாய் இருந்திருந்தால், நாம் மதம் மாறிய அந்த கணத்திலேயே நாம் ஒவ்வொருவரும் பரலோகத்தில் பிரவேசித்திருக்கலாம். நாம் அழியாமையின் தேசத்திற்குத் தகுதியாக்கப்படுவதற்கு நாம் இங்கே தங்கியிருக்க வேண்டும் என்பது முற்றிலும் அவசியமான ஒன்று அல்ல. ஒரு மனிதன் இயேசுவை விசுவாசித்த உடனே, அவன் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவும், வெளிச்சத்திலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தின் பங்கிற்குத் தகுதியுள்ளவனாகக் காணப்படவும் சாத்தியமே. நம்முடைய பரிசுத்தமாக்கல் என்பது நீண்ட மற்றும் தொடர்ச்சியான ஒரு கிரியை என்பது உண்மைதான், நாம் நம்முடைய சரீரங்களை உதிர்த்துத் திரைக்குள் பிரவேசிக்கும் வரை நாம் பூரணமடைய மாட்டோம்; என்றாலும், கர்த்தர் சித்தமாய் இருந்திருந்தால், அவர் நம்மை அபூரணத்திலிருந்து பூரணத்திற்கு மாற்றி, உடனே பரலோகத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கலாம். அப்படியானால் நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? தேவன் தமது பிள்ளைகளைப் பரதீசுக்கு வெளியே இருக்க வேண்டிய நேரத்தைக் காட்டிலும் ஒரு கணமாவது அதிகமாய் வைப்பாரா? ஒரே ஒரு தாக்குதல் ஜெயம் தரக் கூடுமானால், ஜீவனுள்ள தேவனுடைய சேனை ஏன் இன்னும் போர்க்களத்தில் இருக்கிறது? பரலோகத்திலுள்ள தங்களின் நம்பிக்கையின் மையத்திற்குள் தங்களைக் கொண்டுவர அவருடைய உதடுகளிலிருந்து புறப்படும் ஒரே ஒரு வார்த்தை போதுமானதாய் இருக்கும்போது, அவருடைய பிள்ளைகள் ஏன் இன்னும் இந்த விசித்திரமான பாதைகளின் வழியாய் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்? பதில் இதுவே—அவர்கள் "கர்த்தருக்கென்று பிழைக்கவும்," மற்றவர்கள் அவருடைய அன்பை அறியும்படி அவர்களை நடத்தவுமே அவர்கள் இங்கே இருக்கிறார்கள். நாம் நல்ல விதையைத் தூவும் விதைப்பவர்களாகவும்; தரிசு நிலத்தை உழுபவர்களாகவும்; இரட்சிப்பைப் பிரகடனம் செய்யும் தூதர்களாகவும் பூமியில் இருக்கிறோம். நாம் உலகத்திற்கு ஆசீர்வாதமாய் இருக்க "பூமிக்கு உப்பாக" இங்கே இருக்கிறோம் (). நம்முடைய தினசரி வாழ்க்கையில் கிறிஸ்துவை மகிமைப்படுத்த நாம் இங்கே இருக்கிறோம். அவருக்காக உழைக்கும் ஊழியக்காரர்களாகவும், "அவருக்கு உடன்வேலையாட்களாகவும்" நாம் இங்கே இருக்கிறோம் (). நம்முடைய வாழ்க்கை தன் நோக்கத்திற்குப் பதிலளிக்கிறதா என்று பார்ப்போம். "அவருடைய கிருபையின் மகிமைக்குத் துதியோங்கி" இருக்கும்படி வைராக்கியமான, பிரயோஜனமான, பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்வோமாக. இதற்கிடையில் நாம் அவரோடிருக்க வாஞ்சித்து, நாடோறும் பாடுகிறோம்—
"என் இருதயம் அவருடைய சிங்காசனத்தில் அவரோடிருக்கிறது, தாமதத்தை என்னால் தாங்கக் கூடவில்லை; ஒவ்வொரு கணமும் அந்தச் சத்தத்திற்காகக் காத்திருக்கிறேன், 'எழுந்திரு, புறப்பட்டு வா.'"
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.