"என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே" (). இயேசு கிறிஸ்துவே வேதாகமத்தின் அல்பாவும் ஓமேகாயுமாய் இருக்கிறார் (வெளிப்படுத்துதல் 1:8). அவரே அதன் பரிசுத்தப் பக்கங்களின் மாறாத தலைப்பு; முதலிலிருந்து கடைசி வரை அவைகள் அவரைக் குறித்தே சாட்சி பகருகின்றன. சிருஷ்டிப்பின் போதே பரிசுத்த திரித்துவத்தின் ஒருவராக நாம் அவரை உடனே கண்டுகொள்கிறோம்; ஸ்திரீயின் வித்தின் வாக்குத்தத்தத்தில் அவருடைய ஒரு கீற்றைக் காண்கிறோம்; நோவாவின் பேழையில் அவர் நிழலாட்டமாய்க் காண்பிக்கப்படுகிறார்; ஆபிரகாம் மேசியாவின் நாளைக் கண்டு மகிழும்போது நாம் அவரோடு கூட நடக்கிறோம்; ஈசாக்கு யாக்கோபுகளின் கூடாரங்களில் தங்கி, கிருபையுள்ள வாக்குத்தத்தத்தை நாம் புசிக்கிறோம்; முதிர்வயதான இஸ்ரவேல் சீலோவைக் குறித்துப் பேசுவதைக் கேட்கிறோம் (); நியாயப்பிரமாணத்தின் அநேக நிழலாட்டங்களில் மீட்பர் மிகுதியாய் முன்நிழலிட்டுக் காண்பிக்கப்படுகிறார். தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும், ஆசாரியர்களும் பிரசங்கிகளும் யாவரும் ஒரே பக்கமே பார்க்கிறார்கள்—அவர்கள் எல்லாரும் கேருபீன்கள் பேழையின் மேல் நின்றது போல நின்று, உள்ளே உற்றுப் பார்க்கவும், தேவனுடைய மாகா பெரிய பாவநிவிர்த்தியின் இரகசியத்தை வாசிக்கவும் வாஞ்சிக்கிறார்கள். இன்னும் தெளிவாய் புதிய ஏற்பாட்டில் நம்முடைய ஆண்டவரே எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் ஒரே தலைப்பாக இருக்கக் காண்கிறோம். அது அங்கொரு தங்கக் கட்டியும் இங்கொரு தங்கக் கட்டியுமாய், அல்லது மெல்லியதாய் தெளிக்கப்பட்ட தங்கத் தூளாக இல்லாமல், இங்கே நீங்கள் ஒரு மாபெரும் பொன் தளத்தின் மேல் நிற்கிறீர்கள்; ஏனெனில் புதிய ஏற்பாட்டின் முழுப் பொருளும் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவே ஆவார், அதன் முடிவு வாக்கியமும்கூட மீட்பரின் நாமத்தினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது (வெளிப்படுத்துதல் 22:21). நாம் எப்போதுமே வேதவாக்கியங்களை இந்த வெளிச்சத்திலேயே வாசிக்க வேண்டும்; கிறிஸ்து பரலோகத்திலிருந்து நோக்கிப் பார்க்கும் ஒரு கண்ணாடியாக நாம் வார்த்தையைக் கருத வேண்டும்; பின்பு நாம் அதற்குள் நோக்கும்போது, அவருடைய முகம் பிரதிபலிப்பதைக் காண்கிறோம்—நிழலாய் என்பது உண்மைதான், ஆனால் இன்னும் நாம் அவரை முகமுகமாய் காணப் போகும் அந்த உன்னதமான தரிசனத்திற்கு அது ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஆயத்தமாய் இருக்கிறது. இந்த வேதாகமம் அவருடைய அன்பினால் சுகந்த வாசனையுள்ள இயேசு கிறிஸ்துவின் கடிதங்களை நமக்குக் கொண்டிருக்கிறது. இந்தப்பக்கங்கள் நம்முடைய ராஜாவின் ஆடைகளாகும், அவைகள் யாவும் வெள்ளைப்போளம், லவங்கம், அகில் நறுமணமுள்ளவை (). வேதாகமம் என்பது இயேசு ஏறிச் செல்லும் ராஜரீக இரதமாகும், அது எருசலேமின் குமாரத்திகளுக்காக அன்பினால் வேயப்பட்டிருக்கிறது. வேதவாக்கியங்கள் பரிசுத்தக் குழந்தையாகிய இயேசுவின் துணிகளாகும்; அவைகளை அவிழ்த்துப் பார், உன்னுடைய இரட்சகரைக் கண்டுகொள்ளுவாய். தேவனுடைய வார்த்தையின் சாரம் கிறிஸ்துவே ஆவார்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.