"சென்ற மாதங்களில் இருந்தபடியும்... நான் இருந்தால் நலமாயிருக்கும்" (). திரளான கிறிஸ்தவர்கள் கடந்த காலத்தைச் சந்தோஷத்தோடே பார்க்க முடியும், ஆனால் தற்போதைய நிலையையோ குறைபாட்டோடு நோக்குகிறார்கள்; தங்களின் கர்த்தரோடு ஐக்கியம் கொண்டு தாங்கள் கடந்து வந்த நாட்களே தாங்கள் இதுவரை அறிந்த நாட்களிலேயே மகா இனிமையானவைகளும் மிகச் சிறந்தவைகளுமாய் இருந்தன என்று அவர்கள் திரும்பிப் பார்க்கிறார்கள், ஆனால் தற்போதைய நிலையோ இருளினாலும் பாழடைந்த தன்மையினாலும் மூடப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் அவர்கள் இயேசுவுக்கு மகா அருகில் வாழ்ந்தார்கள், இப்போதோ அவரை விட்டு வழிவிலகி விட்டோம் என்று உணருகிறார்கள், "சென்ற மாதங்களில் இருந்தபடியும் நான் இருந்தால் நலமாயிருக்கும்!" என்று கூவுகிறார்கள். தங்களின் சாட்சியங்களை இழந்துவிட்டோம் என்றோ, இருதயத்தில் தற்போதைய சமாதானம் இல்லை என்றோ, கிருபையின் சாதனங்களில் இன்பம் இல்லை என்றோ, மனச்சாட்சி அவ்வளவு மென்மையாய் இல்லை என்றோ, தேவனுடைய மகிமைக்கான வைராக்கியம் அவ்வளவு அதிகமாய் இல்லை என்றோ அவர்கள் முறையிடுகிறார்கள். விசனகரமான இந்த நிலைக்குப் பலதரப்பட்ட காரணங்கள் உண்டு. ஜெபத்தை அலட்சியம் செய்வதினாலே இது உண்டாகியிருக்கலாம், ஏனெனில் அந்தரங்க ஜெபத்தை அலட்சியம் செய்வதே சகல ஆவிக்குரிய வீழ்ச்சிக்கும் ஆரம்பமாய் இருக்கிறது. அல்லது அது விக்கிரகாராதனையின் விளைவாய் இருக்கலாம். இருதயம் தேவனைப் பார்க்கிலும் வேறு ஏதோ ஒன்றினால் அதிகம் நிரப்பப்பட்டிருக்கிறது; பரலோகத்திற்குரியவைகளின் மேல் இல்லாமல், பூமிக்குரியவைகளின் மேல் பாசம் வைக்கப்பட்டிருக்கிறது (). பொறாமையுள்ள தேவன் பிரிக்கப்பட்ட இருதயத்தோடு திருப்தியடைய மாட்டார்; அவர் முதலாவதாகவும் மிகச் சிறந்தவராகவும் நேசிக்கப்பட வேண்டும். குளிர்ந்த, வழிவிலகின இருதயத்திலிருந்து தமது பிரசன்னத்தின் பிரகாசத்தை அவர் விலக்கிக் கொள்வார். அல்லது சுயநம்பிக்கையிலும் சுயநீதியிலும் அதற்கான காரணம் காணப்படலாம். இருதயத்தில் பெருமை சுறுசுறுப்பாய் கிரியை செய்கிறது, சிலுவையின் பாதப்படியில் தாழ்ந்து கிடப்பதற்குப் பதிலாகச் சுயமே உயர்த்தப்படுகிறது. கிறிஸ்தவனே, நீ "சென்ற மாதங்களில் இருந்தபடியும்" இப்போது இராவிட்டால், முந்தின சந்தோஷங்கள் திரும்ப வேண்டும் என்று வெறுமனே வாஞ்சிப்பதோடு திருப்தியடையாதே, மாறாக உடனே உன்னுடைய எஜமானரைத் தேடிச் சென்று, உன்னுடைய பரிதாபகரமான நிலையை அவரிடம் சொல். அவரோடு இன்னும் அதிக நெருங்கி நடக்க உனக்குத் துணைசெய்யும்படி அவருடைய கிருபையையும் பெலனையும் கேள்; அவருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்து, அவர் உன்னை உயர்த்தி, தன் முகத்தின் வெளிச்சத்தை நீ மீண்டும் அநுபவிக்கும்படி செய்வார். பெருமூச்சு விட்டுப் புலம்பிக் கொண்டு உட்கார்ந்துவிடாதே; பிரியமான வைத்யராகிய இயேசு உயிரோடிருக்கும் போது அங்கே நம்பிக்கை உண்டு, ஆமாம், மகா மோசமான சூழ்நிலைகளுக்கும் குணமாகும் நிச்சயம் உண்டு.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.