JUL 11 MORNING

1 பேதுரு 5:10

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;

1 பேதுரு 5:10

கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக;
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"கொஞ்சக்காலம் பாடுபட்டிருக்கிற உங்களை... அவர் பூரணப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக" (). சமபூமியின் மேல் வளைந்து நிற்கும் பரலோகத்தின் வில்லினைக் நீங்கள் கண்டிருப்பீர்கள்: அதனுடைய நிறங்கள் மகிமையானவை, அதனுடைய வண்ணங்கள் அபூர்வமானவை. அது அழகானதுதான், ஆனால் அந்தோ, அது சீக்கிரத்தில் கடந்துபோகிறது, இதோ, அது இல்லாமல் போகிறது. அந்த அழகான நிறங்கள் பஞ்சு போன்ற மேகங்களுக்கு வழிவிடுகின்றன, பரலோக வண்ணங்களால் வானம் இனிப் பிரகாசிப்பதில்லை. அது நிலைநிறுத்தப்படவில்லை. அது எப்படி இருக்க முடியும்? தற்காலிகச் சூரியக் கதிர்களினாலும் கடந்துபோகும் மழைத்துளிகளினாலும் உண்டான ஒரு மகிமையான வேஷம் எவ்வாறு நிலைத்து நிற்க முடியும்? கிறிஸ்தவக் குணத்தின் கிருபைகள் தற்காலிக அழகைக் கொண்ட அந்த வானவில்லைப் போல இருக்கக் கூடாது, மாறாக அவைகள் ஸ்திரப்பட்டவைகளாயும், நிலைநிறுத்தப்பட்டவைகளாயும், நிலைத்திருப்பவைகளாயும் இருக்க வேண்டும். விசுவாசியே, உனக்குள்ள ஒவ்வொரு நற்காரியமும் நிலைத்திருக்கும் ஒன்றாய் இருக்கத் தேடு. உன்னுடைய குணம் மணலின் மேல் எழுதப்பட்ட எழுத்துக்களாய் இராமல், கன்மலையின் மேல் செதுக்கப்பட்ட கல்வெட்டாய் இருக்கட்டும்! உன்னுடைய விசுவாசம் எந்த ஓர் அஸ்திபாரமில்லாத வெற்றுப் போலித் தரிசனமாய் இராமல், வேஷக்காரனுடைய மரம், புல், வைக்கோல்களைப் பட்சிக்கப் போகும் அந்தப் பயங்கரமான அக்கினிக்குத் தப்பக் கூடிய உலோகத்தினால் கட்டப்பட்டதாய் இருக்கட்டும் (). நீங்கள் அன்பிலே வேரூன்றி நிலைபெற்றவர்களாய் இருக்கக் கடவீர்கள் (). உங்களுடைய ஆவிக்குரிய உணர்வுகள் ஆழமானவைகளாயும், அன்பு உண்மையானதாகவும், ஆசைகள் உருக்கமானவைகளாயும் இருக்கட்டும். உங்களுடைய முழு வாழ்க்கையும் எவ்வளவு பலமாய் நிலைநிறுத்தப்பட்டு ஸ்திரப்பட்டிருக்க வேண்டும் என்றால், நரகத்தின் எல்லாக் காற்றுகளாலும், பூமியின் எல்லாப் புயல்களாலும் உங்களை ஒருபோதும் அசைக்க முடியாமல் போக வேண்டும். ஆனால் 'விசுவாசத்தில் ஸ்திரப்படுதல்' என்ற இந்த ஆசீர்வாதம் எவ்வாறு பெறப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். அப்போஸ்தலனுடைய வார்த்தைகள் அதற்குப் பயன்படுத்தப்படும் வழியாக உபத்திரவத்தையே சுட்டிக்காண்பிக்கின்றன—"கொஞ்சக்காலம் பாடுபட்டிருக்கிற உங்களை." கொடூரமான காற்றுகள் நம்மேல் வீசாவிட்டால், நாம் நன்றாய் வேரூன்றுவோம் என்று நம்புவது வீண். ஓக் மரத்தின் வேரிலுள்ள அந்தப் பழைய முடிச்சுகளும், கிளைகளின் விசித்திரமான வளைவுகளும், அதன் மேல் வீசிய அநேகப் புயல்களை நமக்குக் கூறுகின்றன, அவைகள் அதனுடைய வேர்கள் எவ்வளவு ஆழமாய் ஊடுருவிச் சென்றிருக்கின்றன என்பதற்கான அடையாளங்களாகவும் இருக்கின்றன. அப்படியே கிறிஸ்தவனும் வாழ்க்கையின் எல்லாச் சோதனைகளினாலும் புயல்களினாலும் பலப்படுத்தப்பட்டு, பலமாய் வேரூன்றச் செய்யப்படுகிறான். அப்படியானால் சோதனையாகிய கொந்தளிக்கும் காற்றுகளைக் கண்டு பின்வாங்காதே, மாறாக அவைகளின் கடுமையான சிட்சையினாலே தேவன் இந்த ஆசீர்வாதத்தை உனக்கு நிறைவேற்றுகிறார் என்று விசுவாசித்து ஆறுதலடை.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.