"கர்த்தர் அரசாளுகிறார், பூமி மகிழ்வதாக" (). ஆசீர்வதிக்கப்பட்ட இந்த வாக்கியம் உண்மையாய் இருக்கும் வரை கலக்கமடைவதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. பூமியிலே கர்த்தருடைய வல்லமை கடலின் கொந்தளிப்பை எவ்வாறு கட்டுப்படுத்துகிறதோ, அப்படியே துன்மார்க்கரின் கொந்தளிப்பையும் எளிதாய் அடக்குகிறது; அவருடைய அன்பு கடலின் நீரைப் போலத் தன் இரக்கத்தினால் ஏழைகளைப் புத்துணர்ச்சியாக்குகிறது. புயலின் பயங்கரங்களின் மத்தியில் அக்கினி ஜுவாலைகளில் மகத்துவம் பிரகாசிக்கிறது, ராஜ்யங்களின் வீழ்ச்சியிலும் சிங்காசனங்களின் அழிவிலும் கர்த்தருடைய மகிமை தன் மகத்துவத்திலே காணப்படுகிறது. நம்முடைய சகல போராட்டங்களிலும் உபத்திரவங்களிலும் தெய்வீக ராஜாவின் கரத்தை நாம் தரிசிக்கலாம்.
"தேவன் தேவனாய் இருக்கிறார்; அவர் காண்கிறார், கேட்கிறார் நம்முடைய சகல கவலைகளையும், நம்முடைய சகல கண்ணீரையும. என் ஆத்துமாவே, உன்னுடைய வேதனைகளின் மத்தியில் மறந்துவிடாதே, தேவன் எல்லாரிலும் என்றென்றைக்கும் அரசாளுகிறார்."
நரகத்திலே, தீய ஆவிகள் தங்களின் வேதனையோடு அவருடைய மறுக்க முடியாத மேலாதிக்கத்தை ஒப்புக்கொள்கின்றன. அவைகள் அலைந்து திரிய அனுமதிக்கப்படும் போது, அவைகளின் குதி காலில் ஒரு சங்கிலி இருக்கிறது; பெஹேமோத்தின் வாயிலே கடிவாளம் இருக்கிறது, லேவியாத்தானின் தாடைகளில் தூண்டில் இருக்கிறது. மரணத்தின் அம்புகள் கர்த்தருடைய பூட்டின் கீழ் இருக்கின்றன, கல்லறையின் சிறைச்சாலைகள் தெய்வீக வல்லமையைக் காவலனாகக் கொண்டிருக்கின்றன. அகில உலகத்தின் நியாயாதிபதியின் பயங்கரமான பழிவாங்குதல், வேட்டைக்காரனின் சட்டைப்பையிலுள்ள பிரம்பைக் கண்டு வேட்டை நாய்கள் அஞ்சுவது போல, பிசாசுகளை அஞ்சி நடுங்கச் செய்கிறது.
"மரணத்திற்கும் சாத்தானின் தாக்குதல்களுக்கும் பயப்படாதே, தன் மேல் நம்பிக்கை வைப்பவனைத் தேவன் காக்கிறார்; என் ஆத்துமாவே, உன்னுடைய வேதனைகளின் மத்தியில் நினைவுகூர், தேவன் எல்லாரிலும் என்றென்றைக்குமாய் அரசாளுகிறார்."
பரலோகத்திலோ, நித்திய ராஜாவின் இறையாண்மையை யாரும் சந்தேகிக்கிறதில்லை, மாறாக எல்லாரும் அவருக்குத் தங்களின் வணக்கத்தைச் செலுத்தத் தங்களின் முகங்குப்புற விழுகிறார்கள். தூதர்கள் அவருடைய பிரதானிகள், மீட்டெடுக்கப்பட்டவர்கள் அவருடைய பிரியமானவர்கள், எல்லாரும் இரவும் பகலும் அவருக்கு ஊழியம் செய்ய மகிழ்ச்சியடைகிறார்கள். நாம் சீக்கிரத்தில் மகா பெரிய ராஜாவின் நகரத்தை அடைவோமாக!
"வாழ்க்கையின் நீண்ட துக்கத்தின் இரவுக்குப் பதிலாக அவர் நமக்குச் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் தருவார். என் ஆத்துமாவே, உன்னுடைய வேதனைகளின் மத்தியில் நினைவுகூர், தேவன் எல்லாரிலும் என்றென்றைக்குமாய் அரசாளுகிறார்."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.