"நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்" (). பிதா உங்களை குமாரனுக்கு ஈவாகத் தந்தபடியால் நீங்கள் அவருடையவர்கள்; உங்களுடைய மீட்பிற்கான விலையை அவர் தமது இரத்தத்தால் செலுத்தியபடியால் நீங்கள் அவருடையவர்கள்; உங்களை நீங்களே அவருக்குப் பிரதிஷ்டை செய்தபடியால் நீங்கள் அவருடையவர்கள்; நீங்கள் அவருடைய நாமத்தால் அழைக்கப்பட்டு, அவருடைய சகோதரர்களாகவும் உடன் சுதந்தரவாளர்களாகவும் ஆக்கப்பட்டபடியால் உறவின்முறையில் நீங்கள் அவருடையவர்கள். நீங்கள் இயேசுவின் ஊழியக்காரன், சிநேகிதன் மற்றும் மணவாட்டி என்பதை உலகிற்கு நடைமுறையில் காண்பிக்கப் பிரயாசப்படுங்கள். பாவ சோதனை வரும்போது, "நான் கிறிஸ்துவினுடையவன், இந்தப் பெரிய பொல்லாப்பை நான் எப்படிச் செய்வேன்?" என்று பதிலளி. அழியாத தெய்வீகப் பிரமாணங்கள் கிறிஸ்துவின் சிநேகிதனைப் பாவம் செய்ய அனுமதிக்காது. பாவத்தின் மூலம் ஐசுவரியத்தைப் பெற வாய்ப்பு வரும்போது, நீ கிறிஸ்துவினுடையவன் என்று கூறி அதைத் தொடாதே. நீ கஷ்டங்களுக்கும் ஆபத்துகளுக்கும் ஆளாகியிருக்கிறாயா? நீ கிறிஸ்துவினுடையவன் என்பதை நினைவுகூர்ந்து, தீங்குநாளில் உறுதியாய் நில். மற்றவர்கள் சோம்பேறியாய் உட்கார்ந்து, ஒன்றும் செய்யாமல் இருக்கும் இடத்தில் நீ வைக்கப்பட்டிருக்கிறாயா? உன்னுடைய முழு பலத்தோடும் வேலைக்கு எழும்பு; உன் நெற்றியில் வேர்வை சிந்தி, நீ சோம்பலாய் இருக்க சோதிக்கப்படும்போது, "இல்லை, என்னால் நிறுத்த முடியாது, ஏனெனில் நான் கிறிஸ்துவினுடையவன். நான் இரத்தத்தால் வாங்கப்படாமல் இருந்திருந்தால், இரண்டு சுமைகளுக்கு நடுவே படுத்திருக்கும் இசக்காரைப் போல இருந்திருக்கலாம்; ஆனால் நான் கிறிஸ்துவினுடையவன், என்னால் சோம்பலாய் இருக்க முடியாது" என்று சத்தமிட்டுக் கூறு. இன்பத்தின் மயக்கும் கீதம் உன்னை நேர்வழியிலிருந்து விலக்க முற்படும்போது, "உன் இசை என்னை மயக்க முடியாது; நான் கிறிஸ்துவினுடையவன்" என்று பதிலளி. தேவனுடைய காரியங்கள் உன்னை அழைக்கும்போது, உன்னுடைய பொருட்களையும் உன்னையும் அர்ப்பணி, ஏனெனில் நீ கிறிஸ்துவினுடையவன். உன் அறிக்கைக்கு விரோதமாக ஒருபோதும் வாழாதே. எப்போதுமே உன் பழக்கவழக்கங்கள் கிறிஸ்தவத்தன்மையுள்ளதாகவும், உன் பேச்சு நாசரேத்தானைப் போலவும், உன் நடத்தையும் உரையாடலும் பரலோக நறுமணம் வீசுவதாகவும் இருக்கட்டும்; உன்னைக் காண்பவர்கள் யாவரும் உனக்குள் அவருடைய அன்பின் தன்மைகளையும் பரிசுத்தத்தின் முகத்தையும் கண்டு, நீ இரட்சகருடையவன் என்பதை அறிந்துகொள்ளட்டும். பூர்வகாலத்தில் "நான் ஒரு ரோமன்!" என்பது உத்தமமாய் இருப்பதற்குக் காரணமாக இருந்தது; அப்படியிருக்க, "நான் கிறிஸ்துவினுடையவன்!" என்பது பரிசுத்தமாய் இருப்பதற்கு உன்னுடைய மிக உன்னதமான வாதமாக இருக்கட்டும்!
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.