JAN 12 EVENING

யோபு 36:2

நான் பேசிமுடியுமட்டும் சற்றே பொறும்; இன்னும் தேவன்பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.

யோபு 36:2

நான் பேசிமுடியுமட்டும் சற்றே பொறும்; இன்னும் தேவன்பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"தேவனுக்காக நான் இன்னும் பேச வேண்டிய காரியங்கள் உண்டு" (). நம்முடைய நற்பண்புகளுக்காக விளம்பரத்தையோ, நம்முடைய வைராக்கியத்திற்காகப் புகழையோ நாம் தேடக்கூடாது; ஆனால் அதே நேரத்தில், மற்றவர்களின் நன்மைக்காகத் தேவன் நமக்கு அருளியதைத் எப்போதும் மறைக்க முயல்வது பாவமாகும். ஒரு கிறிஸ்தவன் பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு கிராமத்தைப் போல இருக்கக் கூடாது, மாறாக அவன் "மலையின்மேல் இருக்கிற பட்டணம்" போல இருக்க வேண்டும்; அவன் மரக்காலின்கீழ் வைக்கப்படும் விளக்கல்ல, எல்லாருக்கும் வெளிச்சம் கொடுக்கும்படி விளக்குத்தண்டின்மேல் வைக்கப்படும் விளக்காக இருக்க வேண்டும். தனிமை அதற்கேற்ற காலத்தில் அழகாக இருக்கலாம், தன்னை மறைத்துக்கொள்வது சந்தேகமில்லாமல் அடக்கத்தைக் காண்பிக்கலாம், ஆனால் நமக்குள்ளிருக்கும் கிறிஸ்துவை மறைப்பது ஒருபோதும் நியாயமாகாது, நமக்கு விலையேறப்பெற்ற சத்தியத்தை மற்றவர்களுக்குக் கூறாமல் நிறுத்திவைப்பது பிறருக்குச் செய்யும் துரோகமும் தேவனுக்கு விரோதமான குற்றமுமாகும். நீ ஒரு பதற்றமான சுபாவமும், ஒதுங்கி வாழும் குணமும் கொண்டவனாக இருந்தால், இந்த நடுக்கமுள்ள பலவீனத்திற்கு அதிகமாக இடம் கொடாதபடி எச்சரிக்கையாயிரு, இல்லையென்றால் நீ சபைக்குப் பிரயோஜனமில்லாதவனாக மாறிவிடுவாய். உன்னைக் குறித்து வெட்கப்படாதவருடைய நாமத்தினாலே, உன் உணர்வுகளுக்குச் சற்று விரோதமாக கிரியை செய்து, கிறிஸ்து உனக்குச் சொன்னதை மற்றவர்களுக்குச் சொல். உன்னால் எக்காள சத்தத்தோடு பேச முடியாவிட்டால், அமர்ந்த மெல்லிய சத்தத்தைப் பயன்படுத்து. பிரசங்கபீடம் உன்னுடைய மேடையாக இல்லாவிட்டாலும், அச்சகம் உன் வார்த்தைகளைத் தன் சிறகுகளில் சுமந்து செல்லாவிட்டாலும், பேதுருவையும் யோவானையும் போல, "வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்" () என்று கூறு. மலையின் மேல் உன்னால் பிரசங்கம் செய்ய முடியாவிட்டால், சீகார் கிணற்றினருகே சமாரிய ஸ்திரீயோடு பேசு; ஆலயத்தில் முடியாவிட்டால், வீட்டில் இயேசுவைத் துதித்துப் பாடு; சந்தைவெளியில் முடியாவிட்டால், வயல்வெளியில் துதி; மனிதப் பெருங்கூட்டத்தின் மத்தியில் முடியாவிட்டால், உன்னுடைய சொந்தக் குடும்பத்தின் மத்தியில் சாட்சி பகரு. உனக்குள் இருக்கும் மறைவான ஊற்றுகளிலிருந்து சாட்சியின் இனிமையான நீரோடைகள் பாய்ந்தோடி, கடந்து செல்லும் ஒவ்வொருவனுக்கும் தாகத்தைத் தணிக்கட்டும். உன் தாலந்தை மறைத்து வைக்காதே; அதை வியாபாரம் செய்; உன் ஆண்டவருக்கும் எஜமானருக்கும் நல்ல ஆதாயத்தைக் கொண்டுவருவாய். தேவனுக்காகப் பேசுவது நமக்கே புத்துணர்ச்சியையும், பரிசுத்தவான்களுக்கு உற்சாகத்தையும், பாவிகளுக்குப் பிரயோஜனத்தையும், இரட்சகருக்கு மகிமையையும் கொண்டுவரும். ஊமைப் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்கு மிகுந்த மனஸ்தாபமாய் இருக்கிறார்கள். ஆண்டவரே, உம்முடைய பிள்ளைகள் யாவருடைய நாவுகளையும் அவிழ்த்தருளும்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.