"நீ தராசிலே நிறுத்தப்பட்டு, குறையக் காணப்பட்டாய்" (). தேவனுடைய வார்த்தையாகிய தராசில் நம்மைக் அடிக்கடி நிறுத்துப் பார்ப்பது நலமாய் இருக்கும். தாவீதின் ஏதேனும் ஒரு சங்கீதத்தை வாசித்து, ஒவ்வொரு வசனத்தையும் தியானிக்கும்போது, "இதை என்னால் சொல்ல முடியுமா? தாவீது உணர்ந்தது போல நான் உணர்ந்திருக்கிறேனா? அவர் தன் மனஸ்தாபத்தின் சங்கீதங்களை எழுதினபோது இருந்தது போல, பாவத்தினிமித்தம் என் இருதயம் எப்பொழுதாயினும் உடைந்திருக்கிறதா? அதுல்லாம் குகையிலோ, அல்லது என்கேதியின் அரண்களிலோ தேவனுடைய இரக்கங்களைக் குறித்துப் பாடினபோது இருந்தது போல, இக்கட்டான நேரத்தில் என் ஆத்துமா உண்மையான நம்பிக்கையினால் நிறைந்திருந்ததா? நான் இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டிருக்கிறேனா?" என்று உங்களைக் கேட்பது ஒரு பரிசுத்தமான கிரியையாய் இருக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். பின்பு கிறிஸ்துவின் வாழ்க்கைக்குத் திரும்புங்கள், அதை வாசிக்கும்போது, அவருடைய சாயலுக்கு நீங்கள் எந்தளவிற்கு ஒத்திருக்கிறீர்கள் என்று உங்களைக் கேளுங்கள். அவர் ஓயாமல் வற்புறுத்தியும் வெளிப்படுத்தியும் காண்பித்த சாந்த குணம், தாழ்மை மற்றும் அழகான ஆவி உங்களிடம் இருக்கிறதா என்று கண்டறியப் பிரயாசப்படுங்கள். பின்பு நிருபங்களை எடுத்து, அப்போஸ்தலன் தன் அநுபவத்தைக் குறித்துச் சொன்னவைகளோடு உங்களால் உடன்பட முடிகிறதா என்று பாருங்கள். "நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுவிப்பார்?" () என்று அவர் கதறினது போல நீங்கள் எப்போதாவது கதறியிருக்கிறீர்களா? அவருடைய சுய-தாழ்மையை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? பாவிகளிலே பிரதான பாவியாகவும், பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகவும் உங்களை நீங்கள் எண்ணியிருக்கிறீர்களா? அவருடைய அர்ப்பணிப்பைப் பற்றி ஏதாகிலும் நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? அவரோடு கூட உங்களால், "கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்" () என்று சொல்ல முடியுமா? தேவனுடைய வார்த்தையை நம்முடைய ஆவிக்குரிய நிலையின் சோதனையாக இவ்விதமாய் நாம் வாசித்தால், நாம் பலமுறை நின்று, "ஆண்டவரே, நான் இன்னும் இந்த நிலைக்கு வரவில்லை என்று உணருகிறேன், ஓ என்னை இங்கே கொண்டு வாரும்! நான் வாசிக்கும் இந்த உன்னதமான உண்மையான மனஸ்தாபத்தை எனக்குத் தாரும். எனக்கு உண்மையான விசுவாசத்தைத் தாரும்; எனக்கு அதிக வைராக்கியத்தைத் தாரும்; அதிக உருக்கமான அன்பினால் என்னை எரியச் செய்யும்; சாந்த குணம் என்னும் கிருபையை எனக்கு அளித்தருளும்; என்னை இன்னும் இயேசுவைப் போல மாற்றும். பரிசுத்த ஸ்தலத்தின் தராசில் நிறுத்தப்படும்போது நான் இனி 'குறையக் காணப்படாதபடி' காரும், இல்லையென்றால் நியாயத்தீர்ப்பின் தராசுத் தட்டுகளில் நான் குறையக் காணப்படுவேன்" என்று சொல்ல நல்ல காரணம் இருக்கும். "உங்களை நீங்களே நியாயந்தீர்த்துக் கொள்ளுங்கள், அப்பொழுது நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள்."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.