JUN 12 EVENING

2 தீமோத்தேயு 1:9

அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

2 தீமோத்தேயு 1:9

அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவர் நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்" (). அப்போஸ்தலன் பூரண காலத்தைப் பயன்படுத்தி, "அவர் நம்மை இரட்சித்தார்" என்கிறார். கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்கிறவர்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கையான நிலையில் இருக்கிறவர்களாகவும், இறுதியில் இரட்சிக்கப்படக் கூடியவர்களாகவும் கருதப்படுவதில்லை, மாறாக அவர்கள் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள். இரட்சிப்பு என்பது மரணப் படுக்கையில் அநுபவிக்க வேண்டிய ஒரு ஆசீர்வாதமோ, அல்லது பரலோகத்தில் பாட வேண்டிய எதிர்கால காரியமோ அல்ல, மாறாக இப்போதே பெற்றுக்கொள்ளப்படவும், விசுவாசிக்கப்படவும், அநுபவிக்கப்படவும் வேண்டிய ஒரு காரியமாகும். கிறிஸ்தவன் தேவனுடைய நோக்கத்தில் பூரணமாய் இரட்சிக்கப்பட்டிருக்கிறான்; தேவன் அவனை இரட்சிப்பிற்கென்று நியமித்திருக்கிறார், அந்த நோக்கம் பூரணமானது. அவன் தனக்காகச் செலுத்தப்பட்ட விலைக்கிரயத்தின்படியும் இரட்சிக்கப்பட்டிருக்கிறான்: இரட்சகர் மரிப்பதற்கு முன், "முடிந்தது" () என்று சத்தமிட்டுக் கூறினார். விசுவாசி தன் உடன்படிக்கையின் தலைவரிலும் பூரணமாய் இரட்சிக்கப்பட்டிருக்கிறான், ஏனெனில் அவன் ஆதாமுக்குள் வீழ்ந்தது போல, கிறிஸ்துவுக்குள் பிழைக்கிறான். இந்த முழுமையான இரட்சிப்போடு கூட ஒரு பரிசுத்த அழைப்பும் வருகிறது. இரட்சகர் சிலுவையின் மேல் இரட்சித்தவர்களை, ஏற்ற காலத்தில் தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் தமது வல்லமையினால் பரிசுத்தத்திற்கு என்று பயனுள்ள விதத்தில் அழைக்கிறார்: அவர்கள் தங்களின் பாவங்களை விட்டுவிடுகிறார்கள்; கிறிஸ்துவைப் போல இருக்கப் பிரயாசப்படுகிறார்கள்; எந்த ஒரு கட்டாயத்தினாலும் அல்ல, தங்களின் புதிய சுபாவத்தின் ஏவுதலினாலே பரிசுத்தத்தைத் தெரிந்துகொள்கிறார்கள், அது கடந்த காலத்தில் பாவத்தில் மகிழ்ச்சியடைந்தது போல, இப்போது பரிசுத்தத்தில் மகிழ்ச்சியடைய மிகச் சுபாவமாய் அவர்களை நடத்துகிறது. அவர்கள் பரிசுத்தவான்களாய் இருந்தபடியால் தேவன் அவர்களைத் தெரிந்துகொள்ளவுமில்லை, அழைக்கவுமில்லை, மாறாக அவர்கள் பரிசுத்தவான்களாய் இருக்கும்படிக்கே அவர்களை அழைத்தார், பரிசுத்தமே அவர்களுக்குள் அவருடைய கைவேலையினால் உண்டாகும் அழகாய் இருக்கிறது. விசுவாசியிடம் நாம் காணும் உன்னத நற்பண்புகள், பாவநிவிர்த்தியைப் போலவே தேவனுடைய கிரியையாய் இருக்கிறது. இவ்விதமாய் தேவனுடைய கிருபையின் பரிபூரணம் மிகவும் இனிமையாய் வெளிப்படுகிறது. கர்த்தரே இரட்சிப்பின் காரணராய் இருப்பதினால் அது கிருபையினாலேயே இருக்க வேண்டும்: கிருபையைத் தவிர வேறு எந்த நோக்கம் குற்றவாளியை இரட்சிக்க அவரை ஏவ முடியும்? நம்முடைய நீதி என்றென்றைக்குமாய் விலக்கப்படும் விதத்தில் கர்த்தர் கிரியை செய்கிறபடியால் இரட்சிப்பு கிருபையினாலேயே இருக்க வேண்டும். தற்போதைய இரட்சிப்பு என்பது விசுவாசியின் சிலாக்கியமாய் இருக்கிறது; பரிசுத்த வாழ்க்கை என்பது அவன் அதற்கு அழைக்கப்பட்டிருக்கிறான் என்பதற்கான அத்தாட்சியாய் இருக்கிறது.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.