AUG 13 MORNING

சங்கீதம் 104:16

கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.

சங்கீதம் 104:16

கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்கள்" (). லீபனோனின் கேதுருக்கள் தங்களின் நாட்டப்படுதலுக்கு முற்றிலும் கர்த்தருக்கே கடன்பட்டிருக்கின்றன என்பதில் அவைகள் கிறிஸ்தவனுக்கு அடையாளமாய் இருக்கின்றன. தேவனுடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் இது முற்றிலும் உண்மையாய் இருக்கிறது. அவன் மனிதனால் நாட்டப்பட்டவன் அல்ல, சுயமாய் நாட்டப்பட்டவனும் அல்ல, மாறாகத் தேவனால் நாட்டப்பட்டவன். தெய்வீக ஆவியானவரின் இரகசியக் கரம் தன் பிரவேசத்திற்காகத் தானே ஆயத்தம் பண்ணின இருதயத்திற்குள் ஜீவனுள்ள விதையைத் தள்ளியது. பரலோகத்தின் ஒவ்வொரு உண்மையான சுதந்தரவாளியும் மகா பெரிய தோட்டக்காரனையே தன்னை நாட்டினவராகக் கொண்டிருக்கிறான். மேலும், லீபனோனின் கேதுருக்கள் தங்களின் தண்ணீருக்காக மனிதன் மேல் சார்ந்திருப்பதில்லை; அவைகள் உன்னதமான கன்மலையின் மேல் நிற்கின்றன, மானிட நனைத்தலினால் அவைகள் ஈரப்பசையடைவதில்லை; என்றாலும் நம்முடைய பரமபிதா அவைகளுக்கு நன்மையளிக்கிறார். விசுவாசத்தினால் வாழக் கற்றுக்கொண்ட கிறிஸ்தவனின் நிலையும் அப்படியே இருக்கிறது. உலகக் காரியங்களிலும்கூட அவன் மனிதனிடமிருந்து சுயாதீனப்பட்டவனாய் இருக்கிறான்; தன் மாறாத பராமரிப்பிற்கு அவன் தன் தேவனாகிய கர்த்தரையே நோக்குகிறான், அவரை மாத்திரமே நோக்குகிறான். பரலோகத்தின் பனியே அவனுடைய பங்கு, பரலோகத்தின் தேவனே அவனுடைய ஊற்று. மீண்டும், லீபனோனின் கேதுருக்கள் எந்த ஒரு மானிட வல்லமையினாலும் பாதுகாக்கப்படுவதில்லை. கொடூரமான காற்றிலிருந்தும் புயலிலிருந்தும் தங்களின் பாதுகாப்பிற்கு அவைகள் மனிதனுக்கு எதுவும் கடன்பட்டிருக்கவில்லை. அவைகள் தேவனுடைய மரங்கள், அவராலும் அவராலும் மாத்திரமே காக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன. கிறிஸ்தவனுக்கும் துல்லியமாய் அப்படியே ஆகிறது. அவன் சோதனையிலிருந்து பாதுகாக்கப்பட்ட பசுமைக்குடில் செடி அல்ல; அவன் மகா திறந்த நிலையில் நிற்கிறான்; நித்திய தேவனுடைய பரந்த சிறகுகள் எப்போதுமே அவர் தாமே நாட்டின கேதுருக்களை மூடிக்காப்பதைத் தவிர அவனுக்கு வேறு எந்த புகலிடமும் இல்லை, பாதுகாப்பும் இல்லை (). கேதுருக்களைப் போல விசுவாசிகள் சாறு நிறைந்தவர்களாய், குளிர்காலத்துப் பனியின் மத்தியிலும் எப்போதுமே பசுமையாய் இருக்கத்தக்க ஜீவன் உள்ளவர்களாய் இருக்கிறார்கள். இறுதியாக, கேதுருவின் செழிப்பான மற்றும் மகத்துவமான நிலை தேவனுடைய துதிக்கேற்றதாய் மாத்திரமே இருக்கிறது. கர்த்தர், கர்த்தர் மாத்திரமே கேதுருக்களுக்கு எல்லாமாயிருந்தார், ஆகவேதான் தாவீது சங்கீதங்களில் ஒன்றில் மிகவும் இனிமையாக, "கனிகொடுக்கும் விருட்சங்களே, சகல கேதுருக்களே, கர்த்தரைத் துதியுங்கள்" என்று கூறுகிறான் (). விசுவாசியிடம் மனிதனை மகிமைப்படுத்தக் கூடிய எதுவும் இல்லை; அவன் கர்த்தருடைய சொந்தக் கரத்தினாலே நாட்டப்பட்டு, போஷிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டிருக்கிறான், சகல மகிமையும் அவருக்கே செலுத்தப்படுவதாக.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.