"என் உடன்படிக்கையை நினைப்பேன்" (). வாக்குத்தத்தத்தின் வடிவத்தைக் கவனித்துப் பாருங்கள். தேவன், "நீங்கள் வானவில்லைப் பார்த்து, என் உடன்படிக்கையை நினைவுகூரும் போது, நான் பூமியை அழிக்க மாட்டேன்" என்று சொல்லாமல், மாறாக அலைபாயும் பலவீனமான நம்முடைய நினைவின் மேல் வைக்காமல், எல்லையற்ற மாறாத தேவனுடைய நினைவின் மேல் அதை வைப்பது எவ்வளவு மகிமையாய் இருக்கிறது. "வில் மேகத்தில் இருக்கும்; நான் அதைப் பார்த்து, நித்திய உடன்படிக்கையை நினைப்பேன்." ஓ! நான் தேவனை நினைவுகூருவது அல்ல, தேவன் என்னை நினைவுகூருவதே என் பாதுகாப்பின் அஸ்திபாரமாய் இருக்கிறது; நான் அவருடைய உடன்படிக்கையைப் பற்றிக்கொள்வது அல்ல, அவருடைய உடன்படிக்கை என்னைப் பற்றிக்கொள்வதே ஆகும். தேவனுக்கு மகிமை உண்டாவதாக! இரட்சிப்பின் சகல அரண்களும் தெய்வீக வல்லமையினாலே பாதுகாக்கப்பட்டிருக்கின்றன, மனிதனிடம் விடப்பட்டிருக்கலாம் என்று நாம் கற்பனை செய்யக்கூடிய சிறிய கோபுரங்களும்கூட சர்வவல்லமையுள்ள பெலனாலே காக்கப்படுகின்றன. உடன்படிக்கையின் நினைவுகூருதல்கூட நம்முடைய நினைவுகளிடம் விட்டுவிடப்படவில்லை, ஏனெனில் நாம் மறந்துபோகலாம், ஆனால் நம்முடைய ஆண்டவரோ தன் உள்ளங்கைகளில் செதுக்கி வைத்திருக்கிற பரிசுத்தவான்களை மறந்துபோக முடியாது (). எகிப்திலிருந்த இஸ்ரவேலரின் காரியத்தில் நமக்கு இருந்தது போலவே இருக்கிறது; இரத்தம் நிலைகளின் மேலும் இரண்டு நிலைக்கால்களின் மேலும் தெளிக்கப்பட்டிருந்தது, ஆனால் கர்த்தர், "நீங்கள் இரத்தத்தைக் காணும்போது நான் உங்களைக் கடந்துபோவேன்" என்று சொல்லாமல், "நான் அந்த இரத்தத்தைக் காணும்போது உங்களைக் கடந்துபோவேன்" என்றார் (). நான் இயேசுவை நோக்கிப் பார்ப்பது எனக்குச் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொண்டு வருகிறது, ஆனால் தேவன் இயேசுவை நோக்கிப் பார்ப்பதே என்னுடைய இரட்சிப்பையும் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட எல்லாரது இரட்சிப்பையும் உறுதிப்படுத்துகிறது, ஏனெனில் நம்முடைய இரத்தஞ்சிந்தின பிணைப்பாளராகிய கிறிஸ்துவை நமது தேவன் பார்த்துவிட்டு, அவருக்குள் ஏற்கனவே தண்டிக்கப்பட்ட பாவங்களின் நிமித்தம் நம்மேல் கோபமாய் இருப்பது கூடாத காரியம். இல்லை, உடன்படிக்கையை நினைவுகூர்வதன் மூலம் இரட்சிக்கப்படுவதுகூட நம்மிடம் விட்டுவிடப்படவில்லை. இங்கே எந்த ஒரு கலப்பும் இல்லை—சிருஷ்டியின் ஒரே ஒரு நூல்கூட இந்த ஆடம்பரத்தில் இல்லை. அது மனிதனாலானது அல்ல, மனிதன் மூலமாய் வந்ததுமல்ல, கர்த்தரால் மாத்திரமே ஆனதாகும். நாம் உடன்படிக்கையை நினைவுகூர வேண்டும், தெய்வீகக் கிருபையினாலே நாம் அதைச் செய்வோம்; ஆனால் நம்முடைய பாதுகாப்பின் அச்சு அங்கே தொங்கவில்லை—அது தேவன் நம்மை நினைவுகூருவதே தவிர, நாம் அவரை நினைவுகூருவது அல்ல; ஆகவே உடன்படிக்கை நித்திய உடன்படிக்கையாய் இருக்கிறது.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.