AUG 14 MORNING

சங்கீதம் 92:4

கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்.

சங்கீதம் 92:4

கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்த சத்தமிடுவேன்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"கர்த்தாவே, உமது கிரியைகளினால் என்னை மகிழ்ச்சியாக்கினீர்" (). உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்றும், அவைகளுக்காகக் கிறிஸ்து பூரண பாவநிவிர்த்தி செய்துவிட்டார் என்றும் நீ விசுவாசிக்கிறாயா? அப்படியானால் நீ எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சியுள்ள கிறிஸ்தவனாய் இருக்க வேண்டும்! உலகத்தின் சாதாரண சோதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் மேலாக நீ எவ்வாறு வாழ வேண்டும்! பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டதால், இப்போது உனக்கு என்ன நேரிட்டால் தான் என்ன? லூத்தர் (Luther) கூறினார், "அடியும், ஆண்டவரே, அடியும், ஏனெனில் என் பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது; நீர் என்னை மன்னித்திருந்தால் மாத்திரம் போதும், உம்மால் முடிந்தவரை பலமாய் அடியும்;" அதே ஆவியோடு நீயும் சொல்லலாம், "வியாதி, வறுமை, இழப்புகள், சிலுவைகள், உபத்திரவங்கள் எதை வேண்டுமானாலும் அனுப்பும், நீர் என்னை மன்னித்துவிட்டீர், என் ஆத்துமா மகிழ்கிறது." கிறிஸ்தவனே, நீ இவ்விதமாய் இரட்சிக்கப்பட்டிருந்தால், நீ மகிழும்போதே நன்றியுள்ளவனாகவும் அன்பு உள்ளவனாகவும் இரு. உன்னுடைய பாவத்தை அகற்றிப்போட்ட அந்தச் சிலுவையை இறுகப் பற்றிக்கொள்; உனக்கு ஊழியஞ்செய்தவருக்கு நீயும் ஊழியம் செய். "அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை" (). உன்னுடைய வைராக்கியம் ஏதோ சிறிய பாடல் பிரவாகத்தில் ஆவியாகிப்போக அனுமதிக்காதே. உன்னுடைய அன்பைச் செயலாக்கங்களின் மூலம் வெளிப்படுத்து. உன்னை நேசித்தவருடைய சகோதரர்களிடத்தில் அன்புகூரு. முடவனோ அல்லது நொண்டியோ ஆன மேப்பிபோசேத் எங்கேனும் இருந்தால், யோனத்தானின் நிமித்தம் அவனுக்குத் துணைசெய் (2 சாமுவேல் 9). சோதிக்கப்படும் ஏழை விசுவாசி எங்கேனும் இருந்தால், அவனோடு கூட அழு, உனக்காக அழுது உன்னுடைய பாவங்களைச் சுமந்தவரின் நிமித்தம் அவனுடைய சிலுவையைச் சுமக்கத் துணைசெய். கிறிஸ்துவினிமித்தம் நீ இவ்விதமாய் இலவசமாய் மன்னிக்கப்பட்டிருப்பதால், மன்னிக்கும் இரக்கத்தின் மகிழ்ச்சியான செய்தியை மற்றவர்களுக்குப் போய் அறிவி. இந்தச் சொல்லொணாத ஆசீர்வாதத்தோடு உனக்காக மாத்திரம் திருப்தியடைந்துவிடாமல், சிலுவையின் வரலாற்றை எங்கும் பிரசுரம்பண்ணு. பரிசுத்த சந்தோஷமும் பரிசுத்த தைரியமும் உன்னை ஒரு நல்ல பிரசங்கியாக மாற்றும், முழு உலகமும் நீ பிரசங்கிப்பதற்கான பிரசங்கபீடமாய் மாறும். மகிழ்ச்சியுள்ள பரிசுத்தமே பிரசங்கங்களிலேயே மகா பலத்த பிரசங்கமாய் இருக்கிறது, ஆனால் கர்த்தரே அதை உனக்குத் தந்தாக வேண்டும். உலகத்திற்குள் புறப்பட்டுச் செல்வதற்கு முன் இன்று காலை அதைத் தேடு. நாம் மகிழ்கிற கிரியை கர்த்தருடைய கிரியையாய் இருக்கும்போது, நாம் அதிகமாய் மகிழ்ந்துவிட்டோமோ என்று பயப்படத் தேவையில்லை.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.