"அவர்கள் படும் வேதனைகளையும் அறிந்திருக்கிறேன் (I know their sorrows - அவர்களின் துக்கங்களை அறிந்திருக்கிறேன்)" (). "இதை என் பிதா அறிவார்" என்று பாடும்போது குழந்தை தேற்றப்படுகிறது; நம்முடைய பிரியமான சிநேகிதரும் உருக்கமான ஆத்தும மணவாளனுமாகிய இயேசு நம்மைக் குறித்த எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்று நாம் உணரும்போது நாமும் ஆறுதலடைய மாட்டோமா?
1. அவர் வைத்யராய் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் அறிந்திருக்கும் போது, நோயாளி அதை அறிய வேண்டும் என்ற அவசியமில்லை. அமைதியாயிரு, மூடத்தனமான, அலைபாயும் இருதயமே, ஆராய்வதையும் எட்டிப் பார்ப்பதையும் சந்தேகப்படுவதையும் ஒழித்துவிடு! நீ இப்போது அறியாததை இனிமேல் அறிவாய், இதற்கிடையில் பிரியமான வைத்யராகிய இயேசு இக்கட்டுகளில் உன்னுடைய ஆத்துமாவை அறிந்திருக்கிறார் (). நோயாளி எல்லா மருந்துகளையும் பகுத்தறியவோ அல்லது சகல அறிகுறிகளையும் மதிப்பிடவோ வேண்டிய அவசியமென்ன? இது வைத்யரின் வேலை, என்னுடையது அல்ல; நம்புவது என் வேலை, மருந்து குறிப்பது அவருடைய வேலை. நான் வாசிக்க முடியாத விசித்திரமான எழுத்துக்களில் அவர் மருந்தை எழுதினாலும், அந்தப் பேப்பரைக் கண்டு நான் கலங்க மாட்டேன், மாறாக கிரியையில் அது எவ்வளவு மறைபொருளாய் இருந்தாலும், அதன் விளைவில் எல்லாவற்றையும் தெளிவாக்கும் அவருடைய தவறாத திறமையையே நம்பியிருப்பேன்.
2. அவர் எஜமானராய் இருக்கிறார், அவருடைய அறிவு நம்முடைய அறிவிற்குப் பதிலாக நமக்கு ஊழியம் செய்யப்போகிறது; நாம் கீழ்ப்படிய வேண்டும், நியாயந்தீர்க்கக் கூடாது: "எஜமான் செய்கிறதை ஊழியக்காரன் அறியமாட்டான்" (). கட்டிடக் கலைஞன் தன் திட்டங்களையெல்லாம் வேலையிலிருக்கும் ஒவ்வொரு ஆளுக்குமா விவரிக்க வேண்டும்? அவன் தன் சொந்த நோக்கத்தை அறிந்திருந்தால் அது போதாதா? வனையும் பாண்டம் தான் எந்த மாதிரியாக வனையப்படப் போகிறது என்பதை ஊகிக்க முடியாது, ஆனால் குயவன் தன் கலையை அறிந்திருந்தால், களிமண்ணின் அறியாமை ஒரு பொருட்டா? என்னைப் போன்ற அறியாமையுள்ள ஒருவனால் என் ஆண்டவர் மீண்டும் கேள்வி கேட்கப்படக் கூடாது.
3. அவர் தலையாய் இருக்கிறார். சகல அறிவும் அங்கே மையம்கொள்கிறது. கைக்கு என்ன அறிவு இருக்கிறது? காலிற்கு என்ன புரிந்துகொள்ளுதல் இருக்கிறது? அறியும் வல்லமை யாவும் தலையிலேயே இருக்கிறது. தலை தன் உறுப்பிற்காக ஒவ்வொரு அறிவார்ந்த ஊழியத்தையும் நிறைவேற்றும் போது, அந்த அவயவத்திற்குத் தனியாக ஒரு மூளை ஏன் இருக்க வேண்டும்? அப்படியானால், நோயுற்றிருக்கும் போது விசுவாசி தன் ஆறுதலை இதிலேயே நிலைநிறுத்த வேண்டும், அதாவது தான் முடிவைக் காண முடியும் என்பதிலல்ல, மாறாக இயேசு எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார் என்பதில். இனிய ஆண்டவரே, நீர் எப்போதுமே எங்களுக்குக் கண்ணாகவும், ஆவியாகவும், தலையாகவும் இரும், நீர் எதை வெளிப்படுத்தத் தெரிந்துகொள்கிறீரோ அதை மாத்திரம் அறிந்து நாங்கள் திருப்தியடையச் செய்யும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.