"நீ அதின்மேல் உளியிட்டால், அதைத் தீட்டுப்படுத்துவாய்" (). தேவனுடைய பலிபீடம் செதுக்கப்படாத கற்களினாலேயே கட்டப்பட வேண்டும், மனிதனுடைய தந்திரமோ பிரயாசமோ அதில் காணப்படக் கூடாது. மனித ஞானம் சிலுவையின் உபதேசங்களை இன்னும் தந்திரமானதாகவும், வீழ்ந்துபோன சுபாவத்தின் சீர்கெட்ட இச்சைகளுக்கு ஏற்றதாகவும் மாற்றியமைக்க விரும்புகிறது; என்றாலும், நற்செய்தியைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக லௌகீக ஞானம் அதைத் தீட்டுப்படுத்துகிறது, இறுதியில் அது தேவனுடைய சத்தியமாய் இராமல் வேறொரு நற்செய்தியாய் மாறுகிறது (). கர்த்தருடைய சொந்த வார்த்தையில் செய்யப்படும் எல்லா மாற்றங்களும் சீர்திருத்தங்களும் தீட்டுப்படுத்துதலும் அசுத்தப்படுத்துதலுமே ஆகும். தேவனுக்கு முன்பாக ஆத்துமாவை நீதிமானாக்குவதில் தனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று மனிதனுடைய பெருமையான இருதயம் மகா கவலையோடு இருக்கிறது; கிறிஸ்துவிற்கான ஆயத்தங்கள் கற்பனை செய்யப்படுகின்றன, தாழ்மைகளும் மனஸ்தாபங்களும் விசுவாசிக்கப்படுகின்றன, நற்கிரியைகள் மேட்டிமைப்படுத்தப்படுகின்றன, சுபாவமான திறமைகள் பெரிதும் பாராட்டப்படுகின்றன, இவ்விதமாய் தேவனுடைய பலிபீடத்தின் மேல் மனித ஆயுதங்களை உயர்த்த எல்லா வழிகளிலும் பிரயத்தனம் செய்யப்படுகிறது. பாவிகள் தங்களின் லௌகீக நம்பிக்கைகள் இரட்சகரின் கிரியையைப் பூரணப்படுத்துவதற்குப் பதிலாக, அதைத் தீட்டுப்படுத்தி அவமதிக்க மாத்திரமே செய்கின்றன என்பதை நினைவில் கொள்வது எவ்வளவோ நலமாய் இருக்கும். பாவநிவிர்த்தியின் கிரியையில் கர்த்தர் மாத்திரமே உயர்த்தப்பட வேண்டும், மனிதனுடைய உளியின் அல்லது சுத்தியலின் ஒரு அடையாளம்கூட அங்கே சகித்துக் கொள்ளப்பட மாட்டாது. கிறிஸ்து இயேசு தன் மரணத்தின் தருணத்தில் முடிந்தது என்று பிரகடனம் செய்த ஒன்றோடு எதையாகிலும் கூட்ட நினைப்பதிலோ, அல்லது யெகோவா பூரண திருப்தி கண்ட ஒன்றினைக் சீர்திருத்த முயல்வதிலோ உள்ளார்ந்த ஒரு தூஷணம் இருக்கிறது (). நடுங்குகிற பாவியே, உன்னுடைய ஆயுதங்களையெல்லாம் ஒழித்துவிட்டு, தாழ்மையான விண்ணப்பத்தோடு உன்னுடைய முழங்கால்களில் விழு; கர்த்தராகிய இயேசுவையே உன்னுடைய பாவநிவிர்த்தியின் பலிபீடமாக ஏற்றுக்கொண்டு, அவரில் மாத்திரம் இளைப்பாறு.
அநேக வேஷக்காரர்கள் தாங்கள் விசுவாசிக்கும் உபதேசங்களைப் பொறுத்தவரை இன்று காலையின் இந்த வசனத்திலிருந்து எச்சரிக்கையைப் பெற்றுக்கொள்ளலாம். கிறிஸ்தவர்கள் மத்தியில் வெளிப்பாட்டின் சத்தியங்களைச் சமமாக்கவும் ஒத்துப் போக வைக்கவும் மகா பெரிய இச்சை இருக்கிறது; இது அவபக்தியினதும் அவிசுவாசத்தினதும் ஒரு வடிவமாய் இருக்கிறது, நாம் அதை எதிர்த்துப் போராடி, சத்தியத்தை அது இருக்கும் வண்ணமாகவே ஏற்றுக்கொள்வோம்; வார்த்தையின் உபதேசங்கள் செதுக்கப்படாத கற்களாய் இருப்பதினால் அவைகள் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்ட இன்னும் அதிக ஏற்றவைகளாய் இருக்கின்றன என்று களிகூருவோம்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.