"வாரத்தின் முதலாம் நாள் விடியற்காலத்திலே... மகதலேனா மரியாளும்... கல்லறையைப் பார்க்க வந்தார்கள்" (). கர்த்தராகிய இயேசுவோடு எவ்வாறு ஐக்கியம் பெற்றுக்கொள்வது என்பதை மகதலேனா மரியாளிடமிருந்து கற்றுக்கொள்வோம். அவள் எவ்வாறு தேடினாள் என்பதைக் கவனியுங்கள். அவள் விடியற்காலையிலேயே இரட்சகரைத் தேடினாள். கிறிஸ்துவுக்காக உன்னால் காத்திருக்க முடியுமானால், எதிர்காலத்தின் ஏதோ ஒரு தூரத்து காலத்தில் அவரோடு ஐக்கியம் கொள்ளலாம் என்று நீ அமைதியாய் இருக்க முடியுமானால், உனக்கு ஒருபோதும் ஐக்கியம் கிடைக்கப் போவதில்லை; ஏனெனில் ஐக்கியத்திற்கு ஏற்ற இருதயம் என்பது பசியும் தாகமும் உள்ள இருதயமாய் இருக்கிறது. அவள் மகா பெரிய தைரியத்தோடும் கிறிஸ்துவைத் தேடினாள். மற்ற சீஷர்கள் கல்லறையை விட்டு ஓடிப்போனார்கள், ஏனெனில் அவர்கள் நடுக்கமும் திகைப்பும் அடைந்திருந்தார்கள்; ஆனால் மரியாளோ கல்லறையருகே "நின்றாள்" என்று எழுதியிருக்கிறது (). உன்னோடு கூட கிறிஸ்து இருக்க நீ விரும்பினால், அவரைத் தைரியமாய்த் தேடு. எதுவும் உன்னைத் தடுத்து நிறுத்த அனுமதிக்காதே. உலகத்தை எதிர்த்து நில். மற்றவர்கள் ஓடும் இடத்தில் நீ முன்னோக்கிப் பாய்ந்து செல். அவள் கிறிஸ்துவை உண்மையோடும் தேடினாள்—அவள் கல்லறையருகே நின்றாள். ஜீவனுள்ள இரட்சகரின் அருகே நிற்பதே பலருக்குக் கடினமாய் இருக்கிறது, அவளோ மரித்தவருடைய அருகே நின்றாள். நாமும் இவ்விதமாய் கிறிஸ்துவைத் தேடுவோமாக, அவரோடு தொடர்புடைய மகா சிறிய காரியத்தையும் இறுகப் பற்றிக்கொள்வோம், மற்ற யாவரும் அவரைக் கைவிட்டாலும் நாம் உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருப்போம். மேலும், அவள் இயேசுவை உருக்கமாய் தேடினாள்—அவள் "அழுதுகொண்டு" நின்றாள். அந்தப் பரிசுத்தக் கண்ணீர்த்துளிகள் இரட்சகரைக் கைதியாக்கும் மந்திரங்களைப் போல இருந்தன, அவைகள் அவரை வெளியே வந்து அவளுக்குத் தம்மை வெளிப்படுத்தச் செய்தன (). நீ இயேசுவின் பிரசன்னத்தை வாசித்தால், அதற்காக அழுது ஏங்கு! "நீயே எனக்குப் பிரியமானவன்" என்று அவர் உன்னிடம் வந்து சொல்லாவிட்டால் உன்னால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது என்ற நிலை உனக்கு இருக்குமானால், நீ சீக்கிரத்தில் அவருடைய சத்தத்தைக் கேட்பாய். இறுதியாக, அவள் இரட்சகரை மாத்திரமே தேடினாள். தூதர்களைப் பற்றி அவள் என்ன கவலைப்பட்டாள், அவா்களை விட்டுத் தன் முகத்தைத் திருப்பிப் பின்னோக்கிப் பார்த்தாள்; அவளுடைய தேடுதல் தன் கர்த்தருக்காக மாத்திரமே இருந்தது (). கிறிஸ்து மாத்திரமே உன்னுடைய ஒரே அன்பாய் இருந்தால், உன்னுடைய இருதயம் மற்ற எல்லா எதிர்ப்பாளர்களையும் வெளியே தள்ளியிருந்தால், அவருடைய பிரசன்னத்தின் ஆறுதலை நீ பெற அதிக காலம் ஆகாது. மகதலேனா மரியாள் அதிகம் நேசித்தபடியால் இவ்விதமாய்த் தேடினாள் (). நாமும் அதே அன்பின் தீவிரத்திற்கு நம்மைக் கிளப்பிவிடுவோம்; நம்முடைய இருதயம் மரியாளினுடையதைப் போலக் கிறிஸ்துவினால் நிறைந்திருக்கட்டும், நம்முடைய அன்பும் அவளுடையதைப் போல அவரைத் தவிர வேறு எதனாலும் திருப்தியடையாதிருக்கட்டும். ஓ கர்த்தர் இன்று மாலை நமக்குத் தம்மை வெளிப்படுத்துவாராக! ஆமென்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.