JUN 14 MORNING

சங்கீதம் 37:4

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

சங்கீதம் 37:4

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு" (). ஜீவனுள்ள பக்திக்கு அந்நியர்களாய் இருக்கிறவர்களுக்கு இந்த வார்த்தைகளின் போதனை மிகவும் ஆச்சரியமானதாகத் தோன்றலாம், ஆனால் உத்தமமான விசுவாசிக்கு இது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சத்தியத்தின் ஏவுதலே ஆகும். விசுவாசியின் வாழ்க்கை இங்கே தேவனுக்குள் கொள்ளும் மகிழ்ச்சியாக விவரிக்கப்பட்டிருக்கிறது, இவ்விதமாய் உண்மையான மார்க்கம் மகிழ்ச்சியினாலும் சந்தோஷத்தினாலும் நிறைந்து வழிகிறது என்ற மாபெரும் உண்மை நமக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. லௌகீக மனிதர்களும் வெறும் வேஷக்காரர்களும் மார்க்கத்தை ஒருபோதும் மகிழ்ச்சியான காரியமாக நோக்குவதில்லை; அவர்களைப் பொறுத்தவரை அது ஊழியம், கடமை அல்லது கட்டாயம், ஆனால் ஒருபோதும் இன்பமோ அல்லது மகிழ்ச்சியோ அல்ல. அவர்கள் மார்க்கத்தில் ஏதாகிலும் ஈடுபட்டால், அது ஏதோ ஒரு ஆதாயத்தைப் பெறுவதற்காகவோ, அல்லது வேறு விதமாய் இருக்கத் துணியாத காரணத்தினாலோ ஆகும். மார்க்கத்தில் மகிழ்ச்சி கொள்ளும் சிந்தனை பெரும்பாலான மனிதர்களுக்கு மிகவும் விசித்திரமானது, அவர்களுடைய மொழியில் "பரிசுத்தம்" மற்றும் "மகிழ்ச்சி" ஆகிய இரு வார்த்தைகளைக் காட்டிலும் தூரமாய் நிற்கும் வேறு இரு வார்த்தைகள் இல்லை. ஆனால் கிறிஸ்துவை அறிந்த விசுவாசிகளோ, மகிழ்ச்சியும் விசுவாசமும் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட விதத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிவார்கள், நரகத்தின் வாசல்களாலும் அவைகளைப் பிரிக்க முடியாது. தேவனைத் தங்களின் முழு இருதயத்தோடும் நேசிப்பவர்கள், அவருடைய வழிகள் இன்பமான வழிகளும், அவருடைய பாதைகள் யாவும் சமமாதானமுள்ள பாதைகளும் என்பதை அறிவார்கள் (). பரிசுத்தவான்கள் தங்களின் கர்த்தரிடம் எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சிகளையும், நிறைவான இன்பங்களையும், நிறைந்து வழியும் ஆசீர்வாதங்களையும் கண்டுகொள்கிறார்கள் என்றால், வழக்கத்திற்காக அவருக்கு ஊழியம் செய்வதைக் காட்டிலும், முழு உலகமும் அவருடைய நாமத்தைத் தீமை என்று தள்ளிவிட்டாலும் அவர்கள் அவரைப் பின்பற்றுவார்கள். நாம் எந்தக் கட்டாயத்தினாலும் தேவனுக்குப் பயப்படுவதில்லை; நம்முடைய விசுவாசம் எந்த ஒரு விலங்கும் அல்ல, நம்முடைய அறிக்கை எந்த ஓர் அடிமைத்தனமும் அல்ல, நாம் பரிசுத்தத்திற்கு நேராக இழுக்கப்படுவதோ, அல்லது கடமைக்கு நேராகத் துரத்தப்படுவதோ இல்லை. இல்லை, நம்முடைய பக்தி நம்முடைய இன்பம், நம்முடைய நம்பிக்கை நம்முடைய மகிழ்ச்சி, நம்முடைய கடமை நம்முடைய பேரின்பம்.

மகிழ்ச்சியும் உண்மையான மார்க்கமும் வேரும் புஷ்பமும் போல இணைக்கப்பட்டவை; சத்தியமும் நிச்சயமும் போலப் பிரிக்கப்பட முடியாதவை; உண்மையில், அவைகள் ஒரு பொன் அமைப்பில் அருகருகே பிரகாசிக்கும் இரு விலையேறப்பெற்ற நவரத்தினங்களாகும். "உமது அன்பைச் சுவைக்கும்போது, எங்களுடைய சந்தோஷங்கள் தெய்வீகமாய் வளர்கின்றன, மேலேயுள்ளவைகளைப் போலச் சொல்லொணாததாகின்றன, பரலோகம் இங்கேயே தொடங்குகிறது."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.