"ஈசாக்கு சாயங்கால வேளையிலே தியானம்பண்ண வெளியில புறப்பட்டுப்போய்" (). அவனுடைய கிரியை மகா மெச்சத்தக்கதாய் இருந்தது. வீணான கூட்டங்களிலும், பயனற்ற புத்தகங்களை வாசிப்பதிலும், பிரயோஜனமற்ற பொழுதுபோக்குகளிலும் அநேக மணிநேரங்களைச் செலவழிப்பவர்கள் ஞானத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது என்றால், இப்போது தங்களை மயக்கும் மாயைகளைக் காட்டிலும் அதிகப் பிரயோஜனமான சமுதாயத்தையும் அதிக ஆர்வமான காரியங்களையும் தியானத்தில் கண்டுகொள்வார்கள். நாம் இன்னும் அதிகமாய் தனித்திருந்தால், இன்னும் அதிகமாய் அறிவோம், தேவனுக்கு இன்னும் அதிக அருகில் வாழ்வோம், கிருபையில் வளருவோம். தியானம் அசைபோட்டு, வேறு எங்கிலிருந்தோ சேகரிக்கப்பட்ட அறிவுசார்ந்த ஆகாரத்திலிருந்து உண்மையான போஷாக்கைப் பிழிந்தெடுக்கிறது. இயேசுவே தலைப்பாய் இருக்கும் போது, தியானம் மெய்யாகவே இனிமையானது. ஈசாக்கு தனிமையான தியானத்தில் ஈடுபட்டிருந்த போதே ரெபெக்காளைக் கண்டடைந்தான்; மற்றவர்கள் அநேகரும் தங்களுக்குப் பிரியமானவரை அங்கே கண்டடைந்திருக்கிறார்கள் ().
இடத்தைத் தெரிந்துகொண்டது மகா மெச்சத்தக்கதாய் இருந்தது. வயல்வெளியில் சிந்தனைக்கான வசனங்களால் சூழப்பட்ட ஒரு படிப்புறை நமக்கு உண்டு. கேதுரு மரம் முதல் ஈசோப்பு வரை, உயரப் பறக்கும் கழுகு முதல் கூப்பிடும் வெட்டுக்கிளி வரை, நீல நிறப் பரந்த வானம் முதல் ஒரு துளிப் பனி வரை, சகல காரியங்களும் போதனைகளினால் நிறைந்திருக்கின்றன, கண் தெய்வீகமாய் திறக்கப்படும் போது, எழுதப்பட்ட புத்தகங்களைக் காட்டிலும் அந்தப் போதனை மனதின் மேல் மகா பிரகாசமாய் மிளிர்கிறது. நம்முடைய சிறிய அறைகள் வயல்வெளிகளைப் போல ஆரோக்கியமானவைகளாகவோ, சிந்தனையைத் தூண்டுபவைகளாகவோ, இன்பமானவைகளாகவோ, அல்லது ஏவுதல் தருகிறவைகளாகவோ இல்லை. எதையும் சாதாரணமானதாகவோ அசுத்தமானதாகவோ நாம் எண்ணக் கூடாது, மாறாகப் படைக்கப்பட்ட சகல காரியங்களும் அவைகளை உண்டாக்கினவரைச் சுட்டிக்காட்டுகின்றன என்று உணர்வோமானால், வயல்வெளி உடனே பரிசுத்தமாக்கப்படும்.
அந்த வேளையைத் தெரிந்துகொண்டது மகா மெச்சத்தக்கதாய் இருந்தது. சூரிய அஸ்தமன வேளை நாளின் மேல் ஒரு திரையை இழுப்பது போல, பூமிக்குரிய கவலைகள் பரலோக ஐக்கியத்தின் சந்தோஷங்களுக்கு வழிவிடும் போது, ஆத்துமாவின் அந்த இளைப்பாறுதலுக்கு ஏற்றதாய் இருக்கிறது. அஸ்தமிக்கும் சூரியனின் மகிமை நம்முடைய ஆச்சரியத்தைத் தூண்டுகிறது, வரப்போகும் இரவின் அமைதி நம்முடைய பயபக்தியை விழிப்படையச் செய்கிறது. இன்று நாளின் வியாபாரம் அதற்கு அனுமதியளித்தால், அன்பான வாசகரே, சாயங்கால வேளையில் வயல்வெளியில் உலாவ ஒரு மணிநேரத்தை ஒதுக்குவது உனக்கு நலமாய் இருக்கும், ஆனால் முடியாவிட்டால், கர்த்தர் பட்டணத்திலும்கூட இருக்கிறார், உன்னுடைய அறையிலோ அல்லது ஜனங்கள் மொய்க்கும் வீதியிலோ உன்னைச் சந்திப்பார். உன்னுடைய இருதயம் அவரைச் சந்திக்கப் புறப்பட்டுச் செல்லட்டும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.