"நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்" (). தாவீதின் நற்பெயருக்கு விரோதமாகக் கள்ள நாவுகள் கிரியை செய்தன, ஆனால் அவர் தற்காப்புக்காகப் பேசவில்லை; அவர் அந்த வழக்கினைக் உன்னதமான நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று, மகா பெரிய ராஜாவாகிய கர்த்தருக்கு முன்பாக வாதாடினார். பகையான வார்த்தைகளுக்குப் பதிலளிக்க ஜெபமே மிகவும் பாதுகாப்பான வழியாகும். சங்கீதக்காரன் ஏதோ கடமைக்காக ஜெபிக்கவில்லை, அவர் தன்னை முழுமையாக அதில் அர்ப்பணித்தார்—தன் முழு ஆத்துமாவையும் இருதயத்தையும் அதில் செலுத்தினார்—தூதனோடு போராடிய யாக்கோபைப் போலத் தன் நரம்புகளையும் தசைகளையும் வருத்திப் போராடினார் (). இப்படி, இப்படி மாத்திரமே நம்மில் எவரும் கிருபாசனத்தில் ஜெயம் பெற முடியும். ஒரு நிழலுக்கு வடிவம் இல்லாததால் அதற்கு எப்படி வல்லமை இல்லையோ, அப்படியே ஒரு மனிதனுடைய ஆத்துமா வேதனையான உத்தமத்தோடும் உக்கிரமான வாஞ்சையோடும் முழுமையாக இல்லாத ஜெபம் முற்றிலும் பலனற்றதாகும், ஏனெனில் அதற்கு விசை கொடுக்கும் வல்லமை அங்கே இல்லை. "உருக்கமான ஜெபம்" என்கிறார் ஒரு பூர்வகால தெய்வீகப் போதகர், "பரலோகத்தின் வாசல்களில் வைக்கப்பட்ட பீரங்கியைப் போல, அவைகளைத் திறக்கச் செய்கிறது." நம்மில் பெரும்பாலோரிடம் இருக்கும் பொதுவான குறைபாடு என்னவென்றால், நாம் அலைச்சல்களுக்கு எளிதில் இடம் கொடுத்துவிடுவதுதான். நம்முடைய எண்ணங்கள் இங்கும் அங்கும் அலைகின்றன, நாம் விரும்பிய இலக்கை நோக்கி மிகக் குறைந்த அளவே முன்னேறுகிறோம். பாதரசம் போல நம்முடைய மனம் ஒன்றுபட்டு நிற்காமல், இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் சிதறி ஓடுகிறது. இது எப்பேர்ப்பட்ட ஒரு பெரிய தீமை! அது நமக்குக் கேடு விளைவிக்கிறது, எல்லாவற்றிற்கும் மேலாக அது நம்முடைய தேவனை அவமதிக்கிறது. ஒருவன் ஒரு பிரபுவிடம் தன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது, அவன் ஒரு இறகைக் கொண்டு விளையாடிக் கொண்டோ அல்லது ஈக்களப் பிடித்துக் கொண்டோ இருந்தால் அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்?
தொடர்ச்சியும் சகிப்புத்தன்மையும் நம்முடைய வசனத்தின் அர்த்தத்தில் அடங்கியிருக்கிறது. தாவீது ஒருமுறை மாத்திரம் கூப்பிட்டுவிட்டுப் பின்பு அமைதியாகிவிடவில்லை; அவருடைய பரிசுத்தமான கூப்பிடுதல் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் வரை தொடர்ந்தது. ஜெபம் என்பது நம்முடைய தற்செயலான வேலையாக இருக்கக் கூடாது, அது நம்முடைய தினசரி வியாபாரமாகவும், பழக்கமாகவும், தொழிலும் இருக்க வேண்டும். ஓவியர்கள் தங்களின் மாதிரிகளுக்கும், கவிஞர்கள் தங்களின் இலக்கியங்களுக்கும் தங்களை அர்ப்பணிப்பது போல, நாமும் ஜெபத்திற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும். நாம் தண்ணீருக்குள் மூழ்கியிருப்பது போல ஜெபமாகிய சுபாவத்திற்குள் மூழ்கியிருக்க வேண்டும், இவ்விதமாய் இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும் (). ஆண்டவரே, நாங்கள் எங்கள் விண்ணப்பங்களில் அதிகமாய் ஜெயிக்கத்தக்கதாக எங்களுக்கு ஜெபிக்கக் கற்றுத்தாரும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.