JUL 15 MORNING

லேவியராகமம் 6:13

பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.

லேவியராகமம் 6:13

பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"பலிபீடத்தின்மேல் அக்கினி எப்போதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும், அது அவியலாகாது" (). அந்தரங்க ஜெபத்தின் பலிபீடத்தை எப்போதும் எரிய விடுங்கள். இதுவே சகல பக்திவிருத்தியின் ஜீவனுமாய் இருக்கிறது. ஆலயத்தினதும் குடும்பத்தினதும் பலிபீடங்கள் தங்களின் அக்கினியை இங்கிருந்தே இரவலாய் வாங்குகின்றன, எனவே இது நன்றாய் எரியட்டும். அந்தரங்க பக்திவிருத்தி என்பது ஜீவனுள்ள மற்றும் அநுபவ பூர்வமான மார்க்கத்தின் சாரமாகவும், அத்தாட்சியாகவும், அதைக் காட்டும் தராசாகவும் இருக்கிறது.

உங்களுடைய பலிகளின் கொழுப்பை இங்கே எரிய விடுங்கள். உங்களுடைய அந்தரங்கக் காலங்கள் முடிந்தவரை வழக்கமானவைகளாகவும், அடிக்கடி உள்ளவைகளாகவும், அலைச்சல்களற்றவைகளாகவும் இருக்கட்டும். நீதிமான் செய்யும் உருக்கமான ஜெபம் மகா பலனுள்ளது (). ஜெபிப்பதற்கு உங்களிடம் ஒன்றுமில்லையா? சபை, ஊழியம், உங்களுடைய சொந்த ஆத்துமா, உங்களுடைய பிள்ளைகள், உங்களுடைய உறவினர்கள், உங்களுடைய அண்டை வீட்டார்கள், உங்களுடைய தேசம், மற்றும் உலகெங்குமுள்ள தேவனுடைய சத்தியத்தின் காரியங்களை நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கிறோம். மகா முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தில் நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம். அந்தரங்க பக்திவிருத்தியில் நாம் வெதுவெதுப்போடு ஈடுபடுகிறோமா? நம்முடைய இருதயங்களில் பக்திவிருத்தியின் அக்கினி மங்கி எரிகிறதா? இரதத்தின் சக்கரங்கள் பாரமாய் இழுக்கின்றனவா? (). அப்படி இருந்தால், இந்த வீழ்ச்சியின் அடையாளத்தைக் கண்டு நாம் எச்சரிக்கையடைவோமாக. நாம் கண்ணீரோடு சென்று, கிருபையின் மற்றும் விண்ணப்பங்களின் ஆவியைக் கேட்போமாக (). ஏனெனில் இந்த அக்கினி உலகத்தன்மை என்னும் சாம்பலின் கீழ் அவிந்துபோகுமானால், அது குடும்பப் பலிபீடத்தின் அக்கினியையும் மங்கச் செய்து, சபையிலும் உலகிலும் நமக்கிருக்கும் செல்வாக்கைத் தணித்துப்போடும்.

இந்த வசனம் இருதயமாகிய பலிபீடத்திற்கும் பொருந்தும். இது மெய்யாகவே ஒரு பொன்னான பலிபீடமாய் இருக்கிறது. தமது ஜனங்களின் இருதயங்கள் தம்மை நோக்கி எரியக் காண்பதைக் கர்த்தர் நேசிக்கிறார். நம்முடைய இருதயங்களை அன்பினால் எரியும் ஜுவாலையாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுப்போம், அந்த அக்கினி ஒருபோதும் அவியாதபடி அவருடைய கிருபையைத் தேடுவோம்; ஏனெனில் கர்த்தர் அதை எரிய வைக்காவிட்டால் அது எரியாது. அநேக சத்துருக்கள் அதை அவிக்க பிரயத்தனம் செய்வார்கள்; ஆனால் சுவருக்குப் பின்னால் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத கரம் அதன் மேல் பரிசுத்த தைலத்தை ஊற்றிக் கொண்டே இருந்தால், அது இன்னும் உன்னதமாய் எரியும். தேவனுடைய வார்த்தையின் வசனங்களை நம் இருதயத்தின் அக்கினிக்கு விறகுகளாகப் பயன்படுத்துவோம், அவைகள் எரியும் தழல்கள்; பிரசங்கங்களைக் கேளுங்கள், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவோடு அதிகமாய் தனித்திருங்கள்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.