AUG 16 MORNING

சங்கீதம் 29:2

கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.

சங்கீதம் 29:2

கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்துங்கள்" (). தேவனுடைய மகிமை என்பது அவருடைய சுபாவத்தினாலும் செயல்களினாலும் உண்டாகிறது. அவர் தமது குணத்தில் மகிமையுள்ளவர், ஏனெனில் தேவனிடத்தில் பரிசுத்தமும், நன்மையும், அன்பும் நிறைந்து வழிகிறபடியால், அவர் மகிமையுள்ளவராய் இருக்க வேண்டும். அவருடைய குணத்திலிருந்து பாயும் செயல்களும் மகிமையானவை; ஆனால் அந்தச் செயல்கள் தமது சிருஷ்டிகளுக்குத் தமது நன்மையையும் இரக்கத்தையும் நீதியையும் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினாலும், அவைகளோடு இணைக்கப்பட்ட மகிமை தமக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டும் என்பதில் அவர் சமமான அக்கறையுள்ளவராய் இருக்கிறார். மேலும் பெருமை பாராட்டுவதற்கு நமக்குள் எதுவும் இல்லை; ஏனெனில் மற்றவர்களிடமிருந்து நம்மை வித்தியாசப்படுத்துகிறவர் யார்? எல்லாக் கிருபையினுடைய தேவனிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளாதது நம்மிடம் என்ன இருக்கிறது? அப்படியானால் கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மையாய் நடக்க நாம் எவ்வளவு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்! அகில உலகத்திலும் ஒரே ஒரு மகிமைக்கே இடமிருக்கும் போது, நம்மை நாமே மகிமைப்படுத்தும் கணத்தில், உன்னதமானவருக்குப் போட்டியாளர்களாக நம்மை நாமே உயர்த்துகிறோம். ஒரு மணிநேரப் பூச்சி, தன்னை உயிர்ப்பித்த சூரியனுக்கு விரோதமாய்த் தன்னை மகிமைப்படுத்திக் கொள்ளலாமா? களிமண் ஓடு, தன்னை வனைந்த மனிதனுக்கு மேலாகத் தன்னை உயர்த்தலாமா? வனாந்தரத்தின் தூசி சூறாவளியோடு வழக்காடலாமா? அல்லது சமுத்திரத்தின் துளிகள் புயலோடு போராடலாமா? நீதிமான்களே, எல்லாரும் கர்த்தருக்குச் செலுத்துங்கள், கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; அவருடைய நாமத்திற்குரிய கனத்தை அவருக்குச் செலுத்துங்கள். என்றாலும், "எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்" என்ற இந்த வாக்கியத்தைக் கற்றுக்கொள்வது கிறிஸ்தவ வாழ்க்கையின் மகா கடினமான போராட்டங்களில் ஒன்றாகும். இது தேவன் நமக்கு எப்போதுமே கற்பித்துக் கொண்டிருக்கும் ஒரு பாடமாகும், சில வேளைகளில் மகா வேதனையான சிட்சையின் மூலமாகவே இதை நமக்குக் கற்பிக்கிறார். ஒரு கிறிஸ்தவன், "என்னைப் பலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே" என்பதைச் சேர்க்காமல், "எல்லாவற்றையும் செய்ய என்னால் கூடும்" என்று பெருமை பாராட்டத் தொடங்கினால், சீக்கிரத்தில் அவன், "என்னால் ஒன்றும் செய்ய முடியாது" என்று தவித்து முனகி, தூசியில் உட்கார்ந்து புலம்புவான். நாம் கர்த்தருக்காக ஏதாகிலும் செய்து, அவர் நம்முடைய செய்கைகளை ஏற்றுக்கொள்ளப் பிரியப்படும்போது, நம்முடைய கிரீடத்தை அவருடைய பாதப்படியில் வைத்து, "நான் அல்ல, என்னோடு கூட இருந்த தேவகிருபையே!" என்று ஆர்ப்பரிப்போம்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.