JAN 16 MORNING

ஏசாயா 41:14

யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.

ஏசாயா 41:14

யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"நான் உனக்குத் துணைசெய்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (). இன்று காலை கர்த்தராகிய இயேசு நம்மில் ஒவ்வொருவரிடமும் பேசுவதைச் செவிகொடுத்துக் கேட்போமாக: "நான் உனக்குத் துணைசெய்கிறேன். உன்னுடைய தேவனாகிய நான் உனக்குத் துணைசெய்வது மிகச் சிறிய காரியம். நான் ஏற்கனவே செய்திருப்பவைகளைச் சிந்தித்துப் பார். என்ன! நான் உனக்குத் துணைசெய்ய மாட்டேனா? ஏன், நான் என் சொந்த இரத்தத்தைக் கொடுத்து உன்னை வாங்கினேனே. என்ன! துணைசெய்ய மாட்டேனா? நான் உனக்காக மரித்திருக்கிறேன்; உனக்காக மகா பெரிய காரியத்தைச் செய்த நான், இந்தச் சிறிய காரியத்தைச் செய்யாமல் இருப்பேனா? உனக்குத் துணைசெய்வது! நான் உனக்குச் செய்யப்போகும் காரியங்களிலேயே இதுதான் மிக மிகக் குறைவான காரியம்; நான் இதற்கு மேலாகச் செய்திருக்கிறேன், இன்னும் அதிகமாகச் செய்வேன். உலகம் உண்டாவதற்கு முன்னே நான் உன்னைத் தெரிந்துகொண்டேன். உனக்காக உடன்படிக்கை பண்ணினேன். உனக்காக என் மகிமையைத் துறந்து மனிதனானேன்; உனக்காக என் ஜீவனைக் கொடுத்தேன்; இவைகளையெல்லாம் செய்த நான், இப்போது உனக்கு நிச்சயமாகத் துணைசெய்வேன். உனக்குத் துணைசெய்வதின் மூலம், நான் ஏற்கனவே உனக்காக விலைக்கிரயமாய் வாங்கினவைகளையே உனக்கு அளிக்கிறேன். உனக்கு இதைவிட ஆயிரம் மடங்கு அதிகமான துணை தேவைப்பட்டாலும் நான் அதை உனக்குத் தருவேன்; நான் உனக்குத் தர ஆயத்தமாய் இருப்பதோடு ஒப்பிடும்போது உனக்குத் தேவையான உதவி மிகவும் அற்பமானது. நீ தேவையுள்ளவனாய் இருப்பது உனக்குப் பெரிய காரியமாய் இருக்கலாம், ஆனால் அதை வழங்குவது எனக்கு ஒன்றுமே இல்லை. 'உனக்குத் துணைசெய்வதா?' பயப்படாதே! உன் களஞ்சியத்தின் வாசலில் ஒரு எறும்பு வந்து உதவி கேட்டால், அதற்கு ஒரு பிடி கோதுமையைத் தருவதனால் நீ தரித்திரனாகி விடமாட்டாய்; என்னுடைய சர்வவல்லமையின் வாசலில் நீயும் ஒரு சிறிய பூச்சியைப் போலத்தான் இருக்கிறாய். நான் உனக்குத் துணைசெய்வேன்."

என் ஆத்துமாவே, இது உனக்குப் போதாதா? ஒன்று சேர்ந்த மூவொரு தேவனுடைய சர்வவல்லமையை விட அதிகமான பலன் உனக்குத் தேவையா? பிதாவிடம் உள்ள ஞானத்தை விட விஞ்சிய ஞானமோ, குமாரனிடம் வெளிப்படும் அன்பை விட அதிகமான அன்போ, அல்லது பரிசுத்த ஆவியானவரின் கிரியைகளில் விளங்கும் வல்லமையை விட அதிகமான வல்லமையோ உனக்கு வேண்டுமா? உன்னுடைய வெற்றுப் பாத்திரத்தை இங்கே கொண்டு வா! நிச்சயமாக இந்த ஊற்று அதை நிரப்பும். சீக்கிரம், உன்னுடைய எல்லாத் தேவைகளையும், வறுமையையும், துக்கங்களையும் திரட்டி இங்கே கொண்டு வா. இதோ, தேவனுடைய இந்த நதி உன்னை நிரப்புவதற்காக நிறைந்து பாய்கிறது; இதற்கு மேல் நீ எதை வாஞ்சிக்க முடியும்? என் ஆத்துமாவே, உனக்குள்ள இந்த பலத்தோடே புறப்பட்டுப் போ. நித்திய தேவனே உனக்குத் துணைசெய்கிறவர்! "பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன், கலங்காதே! நானே உன் தேவன், நான் இன்னும் உனக்குத் துணைசெய்வேன்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.