"விடியற்காலந்தோறும் அதைச் சேகரித்தார்கள்" (). உன்னுடைய மிகச் சிறந்த ஆசீர்வாதங்கள் நீடிப்பதற்கு, கர்த்தருடைய நல்விருப்பத்தின் மேலும் பிரியத்தின் மேலும் உனக்குள்ள பூரண சார்ந்திருத்தலின் உணர்வைப் பராமரிக்கப் பிரயாசப்படு. ஒருபோதும் பழைய மன்னாவைக் கொண்டு பிழைக்க முயலாதே, எகிப்திலே உதவியைத் தேடாதே. எல்லாம் இயேசுவிடமிருந்தே வர வேண்டும், இல்லையென்றால் நீ என்றென்றைக்குமாய் பாழாவாய். உன்னுடைய ஆவிக்கு அபிஷேகத்தைத் தரப் பழைய அபிஷேகங்கள் போதாது; பரிசுத்த ஸ்தலத்தின் பொன் கொம்பிலிருந்து உன்னுடைய தலையின் மேல் புதிய தைலம் ஊற்றப்பட வேண்டும், இல்லையென்றால் அது தன் மகிமையை இழந்துபோகும். இன்று நீ தேவனுடைய பர்வதத்தின் உச்சியில் இருக்கலாம், ஆனால் உன்னை அங்கே வைத்தவரே உன்னை அங்கே காக்க வேண்டும், இல்லையென்றால் நீ ஊகிக்கிறதைக் காட்டிலும் மகா துரிதமாய் கீழே விழுவாய். அவர் உன்னுடைய மலையை அதற்குரிய இடத்தில் நிலைநிறுத்தும்போது மாத்திரமே அது அசையாமல் நிற்கிறது; அவர் தன் முகத்தை மறைத்துக் கொண்டால் நீ சீக்கிரத்தில் கலங்குவாய். இரட்சகர் சித்தமாய் இருந்தால், பரலோகத்தின் வெளிச்சத்தை நீ காணும் எந்த ஒரு ஜன்னலையும் ஒரே கணத்தில் அவராலே இருளாக்க முடியும். சூரியனை அசையாமல் நிற்கும்படி யோசுவா கட்டளையிட்டான், இயேசுவோ அதை முற்றிலும் காரிருளாய் மூட வல்லவர் (). அவர் உன்னுடைய இருதயத்தின் சந்தோஷத்தையும், உன்னுடைய கண்களின் வெளிச்சத்தையும், உன்னுடைய ஜீவனின் பெலனையும் எடுத்துக்கொள்ள முடியும்; உன்னுடைய ஆறுதல்கள் யாவும் அவருடைய கரத்தில் இருக்கின்றன, அவருடைய சித்தத்தின்படியே அவைகள் உன்னை விட்டு அகல முடியும். நாடோறும் நமக்குரிய அப்பத்திற்காக மாத்திரம் ஜெபிக்க நமக்கு அனுமதி தந்து, 'உன் நாட்களுக்குத் தக்கதாக உன் பெலன் இருக்கும்' என்று மாத்திரம் வாக்குத்தத்தம் பண்ணியிருப்பதின் மூலம், மணிநேரந்தோறும் நாம் சார்ந்திருக்கும் இந்த நிலையை நாம் உணர்ந்து அறிந்துகொள்ள வேண்டும் என்பதில் நம் ஆண்டவர் உறுதியாய் இருக்கிறார் (). நாம் அடிக்கடி அவருடைய சிங்காசனத்தை அண்டிக்கொள்ளவும், அவருடைய அன்பை ஓயாமல் நினைவுகூரவும் இதுவே நமக்கு மிகச் சிறந்தது அல்லவா? நம்முடைய நன்றியற்ற தன்மையினிமித்தம் தன் கரத்தை நிறுத்தாமல், நமக்கு இவ்விதமாய் ஓயாமல் வாரி வழங்கும் கிருபை எவ்வளவு ஐசுவரியமானது! பொன்னான மழை ஒருபோதும் ஓய்வதில்லை, ஆசீர்வாதத்தின் மேகம் எப்போதுமே நம்முடைய வாசஸ்தலத்தின் மேல் தங்கியிருக்கிறது. ஓ கர்த்தராகிய இயேசுவே, நீர் இல்லாமல் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற உள்ளார்ந்த பலவீனத்தோடு உமது பாதப்படியில் குனிந்து ஆராதிக்கிறோம், நாங்கள் பெற சிலாக்கியம் பெற்ற ஒவ்வொரு கிருபையிலும் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உமது வற்றாத அன்பை அறிக்கையிடுகிறோம்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.